/

வரலாற்றுக் காலம் - 2. கரூரும் பேரூரும்

இங்கு கிடைத்த புகலூர் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், தொல்லியல் சான்றுகளும், அகழாய்வுகள் சங்க காலத்திய சேரர் தலைநகரம் கரூர் என்பதையும், இவ்வூர் உரோமானியர்களுடன் தொடர்புகொண்டு சிறந்து விளங்கிய வணிக நகரம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளன

News image
Updated On :28 ஜூலை 2025, 4:16 am

ச. செல்வராஜ்

கரூர்

கரூர், அமராவதி ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய வணிக நகரமாகும். சங்க காலச் சேரர்களின் தலைநகரம் என்றழைக்கப்படும் இக்கரூர் நகரானது, திருச்சி - ஈரோடு சாலையில் திருச்சியிலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், கோவையில் இருந்து 126 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

சங்க கால அரசர்களின் பெயர்களைக் கல்வெட்டிலும், சங்க கால நாணயங்கள் பலவும் அமராவதி ஆற்றங்கரையில் காணப்படுவதும் வரலாற்றின் பார்வையில் குறிப்பிடத்தக்கது. நகருக்கு அருகில் அமைந்த புகலூரில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டில், சேர அரசன் மற்றும் அவரது வம்சாவளியினர் பெயர்கள் காணப்படுவதால், கருவூரே சேரரின் வஞ்சி என்று துணிவர்.

Story image

மேலும், இங்கு கிடைக்கும் உரோமானியர்கள் காசுகளும், தமிழி எழுத்துப் பொறித்த காசுகளும், குறியீடு பொறித்த காசுகளும், உருவம் பதித்த தங்க மோதிரங்கள் என சங்க காலத் தமிழக வரலாற்றை பின்னோக்கி அழைத்துச்செல்லும் சான்றுகள் கரூரில் ஏராளமாகக் காணப்படுவதே இக்கூற்றுக்கு உறுதுணையாக அமைகிறது. இங்கு கிடைத்த பெரும்பான்மையான நாணயங்கள், மேற்பரப்பு ஆய்வில் வெளிப்பட்டவையே. கரூர் பகுதியில் கிடைத்துள்ள நாணயங்கள், அதிகளவில் கிடைத்ததாகப் பதிவானவை அமராவதி ஆற்றின் கரையில் சேகரித்தவை என்பதும் கவனிக்கத்தக்கது.

குதிரையின் மீது அமர்ந்து வரும் அரசன் உருவம் பதித்தவை, அரசனும் அரசியும் ரதத்தில் அமர்ந்துகொண்டு ரதத்தைச் செலுத்தும் காட்சி கொண்டவை, குதிரையை வேகமாகச் செலுத்துவது போன்று காட்சி கொண்டவை என பல நாணயங்கள் கரூரின் அமராவதி ஆற்றங்கரையில் சேகரிக்கப்பட்டுள்ளன. சங்க கால மன்னன் கொல்லிப்பொறையின் காசு, குட்டுவன் கோதை, மாக்கோதை காசு எனப் பலவிதமான சங்க காலச் சேர அரசர்களின் தங்க நாணயங்களும், பலவகை உரோமானியர் காசுகளும், விலை உயர்ந்த பொருட்களும் கிடைத்துள்ளதே, கரூர் பண்டைய தமிழகத்தில் ஒரு பெரும் வணிகநகரம் என்பதையும், இங்கு இந்திய நாட்டின் பல பகுதி மக்களும், அயல்நாட்டோரும் வருகைபுரிந்து, வணிகம் புரிந்தனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

Story image
Story image

(மாக்கோதை)

Story image
Story image

(குட்டுவன்கோதை)

இத்தகு சிறப்பு வாய்ந்த ஊரின் பெருமையை அறிதல் பொருட்டு, ஊரின் மையப்பகுதிகளிலும் பிற இடங்களிளும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1973 முதல் 1979 வரை மூன்று காலகட்டங்களில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டது*1. இக்கருவூரே சேரரின் வஞ்சியா அல்லது கேரள நாட்டில் கொடுங்களூர் அருகே அமைந்த திருவஞ்சிக்களமா என்பதை அறியவும் இவ்வகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Story image

உயர் குடும்பத்தைச் சார்ந்த ஆடவனும் மகளிரும் அரவணைத்துச் செல்லும் காட்சி பொறித்த தங்க மோதிரம். முட்டை வடிவில் அமைந்தது

Story image

உரோமானியர் தங்க மோதிரம். உயர்வகை கார்னீலியன் மணி பதித்தது

Story image

தங்க மோதிரத்தில் தமிழி எழுத்துப்பொறிப்பு

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், நான்கு பண்பாட்டுக் காலங்களைக் காணமுடிகிறது. அவை -

1. முதல் காலம் - பொ.ஆ.மு. 200 முதல் பொ.ஆ.மு. 100 வரை

2. இரண்டாவது காலம் - பொ.ஆ.மு. 100 முதல் பொ.ஆ. 200 வரை

3. மூன்றாவது காலம் - பொ.மு. 200 முதல் பொ.ஆ. 400 வரை

4. நான்காவது காலம் - பொ.ஆ. 400 முதல் பொ.ஆ. 1400 வரை

கிடைத்த தொல்பொருட்கள்

முதல் பண்பாட்டுக் காலத்தில் கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு நிற மட்கலன்கள்.

இரண்டாவது காலத்தில், உரோமானியரோடு தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக, உரோமானிய மட்கலன்களான ரௌலட்டட், ஆம்போரா போன்ற வகைகள் கிடைத்துள்ளன. மூன்றாவது பண்பாட்டுக் காலத்தில், காவிக் கலவை பூசப்பட்ட வண்ணம் தீட்டிய பானை ஓடுகள், பாய்வரி கொண்ட அலங்கரித்த பானை ஓடுகள் (Mat design, pot Shreds) கிடைத்துள்ளன. இவை, தமிழகத்தின் ஆரம்ப காலகட்டத்தைச் சார்ந்தவை ஆகும்.

Story image
Story image

(உரோமானியர் கால ஆம்போரா மட்கலன் ஓடுகள், கீறல் குறியீடுகள் பொறித்த மட்கலன்கள்)

நான்காவது பண்பாட்டுக் காலத்தில் பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு வரை, மக்கள் பயன்படுத்திய மட்கலன்களான சிவப்பு நிற சொரசொரப்பான மட்கலன்கள் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வகழ்வாய்வில் காணப்பட்ட மண்ணடுக்குகள், கரூர் பகுதியில் சங்க காலம் முதல் தொடர்ந்து விஜயநகரப் பேரரசு காலம் வரையிலும் அதற்குப் பின்னரும் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகின்றன. மேலும், அகழாய்வில் கட்டடப் பகுதிகளும், கால்வாய்களின் அமைப்புகளும் கிடைத்துள்ளன. இவை, ஒரு பெரிய வணிக நகரம் இங்கு இருந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

Story image
Story image

(அகழாய்வில் மண்ணடுக்குகளின் தோற்றம், கட்டடப் பகுதிகளும் கால்வாய்களும்)

அகழாய்வில், சங்க காலம்தொட்டு விஜயநகர காலம் வரை மக்கள் பயன்படுத்திய மட்கலன்கள், தொல்பொருட்கள், காசுகள், சுடுமண் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் மற்றும் எழுத்துப் பொறித்த மட்கலன்களும்*2, மேற்பரப்பு ஆய்வில் விலை உயர்ந்த தங்க மோதிரங்கள்*3, பெயர் பொறித்த மோதிரங்கள், உருவம் பதித்தவை*4 செம்பினால் ஆனவை என பலவகையான தொல்பொருள் சான்றுகள், அமராவதி ஆற்றங்கரையில் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய நகரம் அமைந்ததற்கான சான்றுகளாக சங்க காலக் கட்டடப் பகுதிகளும், அங்கே கட்டப்பட்ட கால்வாய்களும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டன.

இங்கு கிடைத்த புகலூர் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், தொல்லியல் சான்றுகளும், அகழாய்வுகள் சங்க காலத்திய சேரர் தலைநகரம் கரூர் என்பதையும், இவ்வூர் உரோமானியர்களுடன் தொடர்புகொண்டு சிறந்து விளங்கிய வணிக நகரம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளன*5. இவ்வகழாய்வில் காணப்பட்ட மண்ணடுக்குகளின் வரிசையைக் காணும்பொழுதே, இப்பகுதியில் எத்தனை ஆண்டு காலம் மக்கள் தொடர்ந்து வாழ்ந்திருப்பர் என்பதை உணரமுடிகிறது. இங்கு மேற்கொண்ட அகழாய்வில், அகழ்வுக்குழியின் ஆழம் 4.30 மீட்டர் ஆகும். அதாவது சுமார் 15 அடி. அகழாய்வில் ஒரு குழியில், 13 மண்ணடுக்குகளின் வரிசை குறிக்கப்பட்டுள்ளது. இச்சான்று, அவ்வூரின் பழமைத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

பேருர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் வட்டத்தில் காவேரியின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் மேற்குக் கரையில், கோவையிலிருந்து தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். “பேரூர் நாட்டுப் பேரூர்” என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் இப்பேரூர், சோழர்கள் காலத்தில் தன்னிறைவு பெற்ற பேரூராகத் திகழ்ந்துள்ளது*6. முதலாம் இராசராச சோழன் காலத்தில் இங்கு ஒரு பெருவழி அமைத்துள்ளனர். அதனை, இராசகேசரிப் பெருவழி எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன*7.

Story image

(இராசகேசரிப் பெருவழியைக் குறிக்கும் கல்வெட்டு)

இங்கு, மைய அரசின் தொல்லியல் துறையும், மாநில அரசின் தொல்லியல் துறையும், முறையே 1970, 2003 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு, பல அறிய செய்திகளை வெளிக் கொணர்ந்துள்ளது.

மைய அரசு மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வு

பேரூரில் அமைந்த நத்தம் எனும் பண்டைய ஊரிருக்கைப் பகுதியை தெரிவு செய்து, தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை அறிதல் பொருட்டு இங்கு அகழாய்வு மேற்கொண்டனர்*8.

பண்பாட்டுக் காலநிலையும் தொல்பொருட்களும்

இங்கு அகழாய்வுகளில் காணப்பட்ட மண்ணடுக்குகளின் அமைப்பையும், கிடைத்த தொல்பொருட்களையும் கொண்டு, இங்கு பண்பாட்டுக் காலங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர்.

1. முதல் பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 300 வரை

2. இரண்டாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 300 முதல் பொ.ஆ. 600 வரை

3. மூன்றாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 600 முதல் பொ.ஆ. 900 வரை

இங்கு கிடைக்கப்பெற்ற மட்கலன் வகைகள் அனைத்தும் பெருங் கற்காலப் பண்பாட்டு வகையைச் சார்ந்தவை. எனவே, இப்பகுதியில் சங்க காலத் தொடர்புடைய மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. இக்காலகட்டத்தைச் சார்ந்த மக்கள், தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதியில் வாழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழக அகழாய்வில் பெருங் கற்கால கட்டத்தை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளும்போது அதிக அளவில் வேறுபாடு காண்பது அரிது.

Story image

(பாய்விரிப்பு அலங்கார மட்கலன் ஓடுகள்)

Story image

(குறியீடுகள் மற்றும் எழுத்துப் பொறித்த மட்கலன் ஓடுகள்)

இரண்டாவது பண்பாட்டுக் காலமாகக் கணக்கிடப்படும் மண்ணடுக்கில், காவிக் கலவை பூசப்பட்ட சிவப்பு நிற மட்பாண்டங்கள் மற்றும் மட்கலன்களின் மேலே வண்ணக்கோடுகள் உள்ளன. இவற்றோடு, முத்திரைப் பொறிப்புகள் (Seal) கொண்டவை*9, கீறல் குறியீடுகள் உள்ளவற்றை, இந்தப் பண்பாட்டுக் கால மண்ணடுக்கில் காணமுடிகிறது. பானைகளும், பானை மூடிகளும், தட்டுகள், கிண்ணங்கள், குவளைகள், சங்கு வளையல்கள், கண்ணாடி, சுடுமண் மணிகள், தங்கத்தால் ஆன மணிகள், சுடுமண் விளக்கு, இரும்பு ஆணிகள், வளையல்கள் என, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஏராளமான பொருட்கள் இந்த மண் அடுக்கில் தொல் பொருட்களாக சேகரிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில், சில வாழ்வியல் முன்னேற்றங்களை மக்கள் கொண்டுள்ளதை இவை உணர்த்துகின்றன.

Story image

(சங்க காலக் குடிநீர்க் கால்வாய்)

Story image

(பேரூர் – அகழாய்வுக் குழியும் மண்ணடுக்கும்)

மூன்றாவது பண்பாட்டுக் காலமாகக் குறிக்கப்படும் மண்ணடுக்கில், சுட்ட செங்கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட சுவற்றின் பகுதியும், கருங்கல்லைப் பயன்படுத்தி அமைத்த மூடிய கழிவுநீர்க் கால்வாயும் காணப்பட்டன. மேலும், சுடுமண்ணால் ஆன குழாய்களைக் கொண்டு இணைத்து அமைத்த குடிநீர்க் கால்வாயும் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளன*10. இங்கு, மண்ணிலிருந்து கனிமப்பொருள்கள், குறிப்பாக பொட்டாசியம் நைட்ரேட் எனும் உப்பை உற்பத்தி செய்துள்ளனர் எனக் கருதமுடிகிறது. ஏனெனில், இன்றளவும் இம்முறையில் கனிமத்தை எடுப்பது நடைமுறையில் இருப்பதால், இதுவும் அதன் வெளிப்பாடாக இருக்கலாம். இங்கு வெளிக்கொணரப்பட்ட கட்டடப் பகுதிகளும், கால்வாய்களும், சுடுமண் குழாய்களும், இம்மக்கள் நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருந்தனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு

மாநில அரசுத் தொல்லியல் துறையால், பேரூர் பகுதியை மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு திருநீற்றுமேட்டிலும், பேரூர் கல்லூரி வளாகத்திலும் 5 அகழ்வுக்குழிகள் தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது*11. இவ்வாய்வின் முடிவில், நான்கு பண்பாட்டுக் காலங்கள் காணப்படுவதை தெளிவுபடுத்தியுள்ளனர். அவை -

முதல் காலம் - பொ.ஆ.மு. 300 முதல் பொ.ஆ.100 வரை

இரண்டாவது காலம் - பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 300 வரை

மூன்றாவது காலம் - பொ.ஆ. 300 முதல் பொ.ஆ. 600 வரை

நான்காவது காலம் - பொ.ஆ. 600 முதல் பொ.ஆ. 900 வரை

இந்த ஆய்வின்படி, பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு வரை, பேரூர் ஒரு பெரிய நகரமாக இருந்துள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில், மாநில அரசு மேற்கொண்ட ஆய்வில் பெருங் கற்கால பண்பாட்டுக் காலம் மற்றும் சங்க காலத் தொடர்புடைய பானை ஓடுகள், வண்ணக்கோடுகள் வரைந்த சிவப்பு நிற மட்பாண்டம் (Russet Coated Painted Pot Shred) கருப்பு - சிவப்பு பானை ஓடுகளில் குறியீடுகள் எனக் குறிப்பிடத்தக்கவை கிடைத்துள்ளன. மேலும், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், அம்பு முனை போன்றவையும் கிடைத்துள்ளன*12.

Story image

(அகல் விளக்குகள்)

Story image

(அலங்கரித்த சங்கு வளையல்)

இரண்டாவது பண்பாட்டுக் காலத்தில், குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள் காணப்படவில்லை. கருப்பு - சிவப்பு காவி நிறப் பூச்சு கொண்டவை, சிவப்பு நிறம் போன்றவற்றுடன் செம்பழுப்பு நிற மணிகள், கண்ணாடி, கல் மணிகள், சங்கு, சுடுமண் மணிகள், செம்பு மணிகள், காதணி கலன்கள், சுடுமண்ணில் மனித உருவ பொம்மைகள், விளக்கு மற்றும் விளையாட்டுக் கருவிகள் கிடைத்துள்ளன.

Story image

(சுடுமண் காதணிகள்)

Story image

(தாயக்கட்டை)

அடுத்ததாகக் கிடைத்த தொல்பொருட்களில், நீள்செவ்வக வடிவில் தலைப்பகுதியில் இரு துளைகளைக் கொண்டதும், மேல் பக்கத்தில் பள்ள வரிகளை (Grooves) கொண்டு, அடிப்பகுதி அரைவட்ட வடிவத்துடன் காணப்படும் கூரை ஓடுகளும் (Grooved Tiles)  கிடைத்துள்ளன*13. இதுபோன்ற கூரை ஓடுகள், சங்க கால மக்கள் தங்களது வீடுகளின் கூரைப்பகுதியின் மேலே மூடுவதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். சங்க காலம், அதாவது வரலாற்றின் துவக்க காலம் என்று கருதப்படக்கூடிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில், இதுபோன்ற தட்டையான கூரை ஓடுகள் கிடைத்துள்ளன.

இவை, நீள்செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட, மேல்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு துளைகளை அமைத்துக்கொள்வர். இவை, மூங்கில் சட்டத்தில் வைத்து கட்டுவதற்காக ஏற்படுத்தும் அமைப்பாகும். கொடிகளையும், நார்களையும் வைத்து ஓடுகளைக் கட்டுவர். இதன் அடிப்பகுதி அரைவட்ட வடிவில் மெல்லியதாக அமைக்கப்பட்டிருக்கும். இவை கீழ்ப்புறத்தில் வைக்கப்படும் கூறை ஓட்டில் பொருந்துவதுபோல நெருக்கமாகப் பொருந்தும். இவை சரியாகப் பொருந்தவும், ஆடாமல் நழுவாமல் இருக்க ஓட்டின் மேல்பகுதியில் இரண்டு பள்ள வரிகளை அமைப்பர். இது, ஒரு ஓடு மற்றொரு ஓட்டுடன் சரியாகப் பொருந்துவதற்காகவும், இடைவெளி ஏற்படாமல் இருக்கவும் உதவும். இவ்வாறு, தங்களது கூரையின் மீது வேயப் பயன்படுத்தும் கூரை ஓட்டுக்கு மிகவும் கவனத்தைச் செலுத்தியே பானை வனைபவர்கள் தயாரித்துள்ளனர் மிகவும் போற்றுதலுக்குரியது. அதேபோல, அடுத்துக் காணப்படும் நீள்செவ்வக அமைப்பு கொண்ட கூரை ஓடுகளும் மிகவும் நுணுக்கமாகத் தங்களது அறிவத்திறனைப் பயன்படுத்தி தயார் செய்தவையே.

இவ்வாறு, சங்க கால மக்கள் தங்களது அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் தனிக்கவனம் செலுத்தியே தயாரித்துள்ளனர் என்பதை அக்கூரை ஓடுகளில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இதனைத் தொடர்ந்து, “எல் (L)” ஆங்கில எழுத்து போன்ற நீள்செவ்வக வடிவக் கூரை ஓடுகளும் காணப்படுகின்றன. இவை, சோழர் காலத்தில் கூரை வேயப் பயன்படுத்தப்பட்டவை*14.

Story image

(சங்க காலக் கூரை ஓடுகள்)

இறுதியாக, சொரசொரப்பான சிவப்பு நிறப் பானை ஓடுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றையும், கூரை ஓடுகளும், இடைக் காலத்தைச் சார்ந்த பானை ஓடுகளும், கிடைத்துள்ளதைக் கொண்டு, இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

அகழாய்வு வெளிப்படுத்தும் செய்திகள்

இவ்வகழாய்வுகள் மூலம், நடுநிலை மக்கள் வாழ்விடமாக இது தோன்றுகிறது. ஏனெனில், இங்கு கிடைப்பனவற்றில் சுடுமண் பொருட்களும், மட்கலயங்களுமே பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. அன்றாட மக்கள் அதாவது வேளாண்குடிகள் மற்றும் அவர்களைச் சார்ந்த சமூகம் இதன் வெளிப்பாடாகத் தோன்றுகிறது. ஏனெனில், சுடுமண் காதணிகள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதே இம்முடிவுக்குக் காரணம். இதேபோல், சுடுமண் தக்களி அதிக அளவில் கிடைத்துள்ளது. இவை, இம்மக்கள் பஞ்சு நூலின் பயனை அறிந்திருந்ததையும், பருத்தி விளைவித்துள்ளனர் என்பதையும் அறிவிப்பவையாக உள்ளன.

Story image

(சுடுமண் புகைப்பான்கள்)

ஆகழாய்வுகளில் கிடைத்துவரும் சுடுமண் புகைப்பான்களைக் கொண்டு, மக்களிடையே புகைக்கும் பழக்கம் இருந்ததை அறியமுடிகிறது. மேலும், 16-17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், இவ்வகை சுடுமண் புகைப்பான்கள் கொண்டு புகைக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது எனவும் உணரமுடிகிறது*15. இப்பகுதியானது, குளிர்காலத்தில் தமிழகத்தின் கடற்கரையைவிட குளிர் அதிகமாகக் காணப்படும் பகுதி என்பதை நினைவில்கொள்ளத்தக்கது.

சான்றெண் விளக்கம்

T.S. Sridhar, Archaeological Excavations of Tamil Nadu, Vol-II, (Kodumanal, Poompuhar, Karur), Govt. of Tamil Nadu, Dept. of Archaeology, Chennai, 2011.

T.S. Sridhar, op.cit.,

K.V. Raman,The Hindu Daily Magazine, Sunday, March 14 1993, Roman Jewellery and Coins from Karur.

மேலது

T.S. Sridhar, op.cit.,

இரா. பூங்குன்றன், கோவை மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.

T.S. Sridhar, Selected Inscription, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai.

Ashokvardhan Shetty, Excavations at Perur, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai, 2003.

Indian Archaeology – A Review.

சு. ராசவேலு & திருமூர்த்தி, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.

மேலது

மேலது

மேலது

Ashokvardhan Shetty, Excavations at Perur, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu Chennai, 2004.

மேலது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.