/

புதிய கற்காலம் – 2

புதிய கற்கால மக்கள் பெரும்பாலும் மலை சார்ந்த பகுதிகளையே அதிகமாக விரும்பியுள்ளனர். ஏனெனில், அப்பகுதியில் நிலவிய  சீரான தட்பவெட்ப நிலையும், சுற்றுப்புறச் சூழலும் அழகாக அமைந்துள்ளதே காரணமாகும்.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:15 am

ச. செல்வராஜ்

இந்தியாவில் புதிய கற்கால மக்கள் வாழிடங்கள்

இந்தியாவில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவில், புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களும், அதற்குரிய சான்றுகளும் அதிக அளவில் காணப்படுவதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சோட்ட நாக்பூர் - உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிஸா மற்றும் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் புதிய கற்கால மக்களின் வாழ்விடங்கள் காணப்படுகின்றன. பிஹாரின் சரன் மாவட்டத்திலும், தென்னிந்தியாவில் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பரவலாகவும் அதிக அளவிலும் உள்ளது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால இடங்கள்

மாஸ்கி (1957), பிக்கிலிஹால் (1960), உட்னூர் (1961), டி.நரசிபூர் (1971), சங்கனக்கல்லு (1969), தெக்கலக்கோட்டா (1968), ஹல்லூர் (1971), கோடேகல் (1973), நாகார்ஜுனகொண்டா (1958), பையம்பள்ளி, மயிலாடும்பாறை (2004), மோதூர் (2005) ஆகிய இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்களில் நுண் கற்கருவிகள் கலந்து காணப்படுகின்றன. இதன்மூலம், நுண் கற்காலத்தைத் தொடர்ந்து புதிய கற்காலம் மலர்ந்தது என்பதும், புதிய கற்கால மக்களும் தங்களது தேவைக்காக நுண் கற்கருவிகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. தமிழகத்தில் மேற்கொண்ட புதிய கற்கால அகழாய்வுகளில், மயிலாடும்பாறையில் மட்டுமே நுண் கற்கால மக்களின் சான்றுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

மேற்குறிப்பிட்டுள்ள இடங்களின் அகழாய்வுகள் வெளிப்படுத்திய தொல்லியல் தடயங்களின்படி, வீட்டு விலங்குகளின் குறிப்பாக வெள்ளாடு (Goat), செம்மறியாடு (Sheep) ஆகியவற்றின் எலும்புகள் பெரும்பான்மையான இடங்களில் கிடைத்துள்ளன. எருமையின் (Buffalo) எலும்புகள் மாஸ்கி, நாகர்ஜுனகொண்டா, கோடேகல் போன்ற இடங்களில் கிடைத்துள்ளதை ஏ.கோஷ் அவர்கள் குறிப்பிடுகின்றார். தென்னிந்தியாவில் அதிக அளவில் வீட்டு விலங்குகளாக ஆடுகளையும், மாடுகளையுமே கூட்டம் கூட்டமாக வளர்த்துள்ளனர். இதனையே புதிய கற்கால மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு மூலதனமாகவும், பொதுவாக தங்களது செல்வமாகவே இவற்றைப் போற்றிப் பாதுகாத்தனர் எனலாம். இதனைக்கொண்டு, ஆடு மாடு முதலான கால்நடைகளை மேய்த்தலும், வேளாண்மை செய்வதும் இக்கால மக்களின் இன்றியமையாத தொழிலாக இருந்தது தெளிவாகிறது.

மேய்த்தல் தொழிலுக்கு ஏற்ப, புதிய கற்கால மக்களுக்கு அக்காலகட்டத்தில் செடி, கொடிகள் மலிந்து காணப்பட்டன. மாஸ்கி, உட்னூர், ஹல்லூர், தெக்கலகோட்டா, பையம்பள்ளி ஆகிய தென்னிந்தியப் பகுதிகளில் தாவரங்கள் அதிகம் விளைவிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். புதிய கற்கால மக்கள் கேழ்வரகு (Ragi), அரிசி (Rice), பேரீச்சை (Date Palm), கொள்ளு (Horse Gram), தினை, சாமை (Millet) போன்ற தானியங்களை விளைவித்துள்ளனர் என்பதை அகழாய்வு எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.

காலம்

இந்தியாவில் பல பகுதிகளில் புதிய கற்கால வளர்ச்சியின் மையக்கருவாகத் திகழ்வது உணவு தேடுதலை விடுத்து, உணவைத் தாங்களே பயிரிடும் வேளாண்மைத் தொழியில் ஈடுபட்டதுதான். மேலும், வேளாண் உற்பத்தியில் பயன்படுத்திய புதிய தொழில்நுட்பம், இந்தியாவின் பல பகுதிகளிலும் விரிந்து பரவியது. இதன் காலம், கரிகம் 14-ன்படி (C14), பொ.ஆ.மு. 2350-1400 வரை என்று அறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் தென்பகுதியிலும், வடபகுதியிலும் இடத்துக்கு இடம் காலத்தால் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் இதன் காலத்தைக் கணிக்கும்போது, இப்பகுதியை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மூன்று காலகட்டமாகப் பகுத்துக் காலக்கணிப்பு செய்துள்ளனர். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய ஒருங்கிணைந்த பகுதிகளைக் கொண்ட இப்புதிய கற்காலப் பண்பாடு, கீழ்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கற்காலத்துக்கு முற்பட்ட காலத்தை (Pre-Neolithic Age) பொ.ஆ.மு. 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், மட்கலன்கள் இல்லாத புதிய கற்காலப் பண்பாட்டுக் காலம் பொ.ஆ.மு. 3500-3000 வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. மோதூரில் அகழாய்வில் புதிய கற்காலக் கைக்கோடரிகள் மட்டுமின்றி, அவற்றுடன் பல்வேறு கற்கருவிகளும் காணப்படுவதால், இப்பண்பாடு பொ.ஆ.மு. 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அதன் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தாவரவியல் ஆய்வு (Paleobotonical Research)

பொதுவாக, பண்டைய காலத்தில் காணப்பட்ட தாவரங்கள், இயற்கைச் சூழலினாலும் தட்பவெட்பக் காரணங்களினாலும் வளர்ந்து செழித்திருக்கும். அதன் அடிப்படையில், இவ்வகை ஆய்வு மிக்க பயனளிப்பதாகும். இந்தியாவில், ஐந்து இடங்களில் தாவரவியல் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அவை:

1.ஹைகம் லேக் (Haigam Lake) - காஷ்மீர் பள்ளத்தாக்கு

2.நெளகுட்சியா தல் (நைனிடால் அருகில்) (Naukutchiya Tal) – குமோன் (Kumaon)

3. காகாதோப்பு (Kakathope - Ootacaumund in Tamil Nadu) - ஊட்டி, தமிழ்நாடு.

4. சாம்பார் லேக் (Sambar Lake) – ராஜஸ்தான்

5. கொல்கத்தா (Quaternary deposits around Calcutta) - மேற்கு வங்காளம்.

காகாதோப்பு பகுதியில் மேற்கொண்ட தாவரவியல் ஆய்வின்படி கிடைத்த மகரந்தத் துகள்களை ஆய்வு செய்தவர்கள் (1973 - Gupta) இதன் காலத்தை 23,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்னதாக அங்கு விவசாயம் இருந்ததற்கான தடயம் ஏதும் கணப்படவில்லை. 1970-ல் Duckhan and Mansfield செய்த ஆய்வின்படி, தட்பவெட்ப நிலை, மண்ணின் தன்மை இவை இரண்டும் விவசாயத்தை மேற்கொள்ள உறுதுணையாக இருந்தன என்று தெரிவிக்கின்றனர்.

தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு

தென்னிந்தியாவில் காணப்படுகின்ற புதிய கற்காலப் பண்பாடு வடஇந்தியாலும் பிற பகுதிகளிலும் காணப்படுகின்ற புதிய கற்காலப் பண்பாட்டுக்குச் சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. இங்கு சிவப்பு நிற மட்கலன்களும், கைவிரல் அழுத்தத்தால் ஏற்பட்ட கீறல்கள் மற்றும் கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட மட்கலன்களும், சாம்பல் நிற மட்கலன்களும், வண்ணம் தீட்டிய மட்கலன்களும் கிடைக்கின்றன.

இவற்றுடன், வட்டமான கல்வட்டுகளும், முக்கோண வடிவ கூர்மையான கற்கோடரிகளும் (Stone Axes), பட்டை தீட்டப்பட்ட மண்வெட்டிகளும் (Faceted toes), கூர்மையான தடித்த கற்கோடாரிகளும் (Pointed Butt Axes), உளி (Chisels), செண்டின் தலைப்பகுதி (Mace Head), உலக்கை (Pounder), கடினமான விதைகளை அரைத்துப் பொடியாக்கும் கருவி, உரல் (Pestle), அம்மி போன்றவையும், மாவு அரைக்கும் கருவி போன்ற கற்கருவிகள், நிலப்பரப்பில் உழுவதற்கும் வேளாண் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பதாகும். இவ்வகைக் கருவிகளைத்தான் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நுண் கற்காலப் பண்பாட்டுக்குப் பின்னர் தோன்றியது புதிய கற்காலப் பண்பாடு என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. சில இடங்களில், இவை நுண் கற்கருவிகளுடன் இணைந்தும் வெளிப்பட்டுள்ளன.

Story image

நாகர்ஜுனகொண்டா அகழாய்விலும், தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் தையல்மலை, முல்லிக்காடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகரப்பள்ளி போன்ற இடங்களில் மேற்பரப்பு ஆய்வு மற்றும் மாதிரி அகழ்வுக்குழி அமைத்து ஆய்வு மேற்கொண்ட பி.நரசிம்மய்யா மற்றும் கர்நாடகத்தின் டி.நரசிபூர் பகுதியில் ராவ் அவர்கள் மேற்கொண்ட அகழாய்வு போன்ற அனைத்திலும், கரடுமுரடான சிவப்பு நிற மட்கலன்களுடன் நுண் கற்காலக் கருவிகளின் சில்லுகளும் கலந்து காணப்பட்டதை குறித்துள்ளனர். மேற்குறித்த இடங்களில், சீரான மண்ணடுக்கள் காணப்படவில்லை. இங்கே கால வேறுபாடுகள் தோன்றுகின்றன.

Story image

தென்னிந்தியாவில் புதிய கற்காலத்தின் காலத்தை பொ.ஆ.மு. 3000 என்றும், அதிலிருந்து 1400 வரை செல்வதாகத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் சிறப்பு அம்சமாகக் காணப்படுவது, சாம்பல் நிற மண் மேடுகளே எனலாம். ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இந்தச் சாம்பல் மேடுகளின் காலத்தை பொ.ஆ.மு. 2500 என்று குறித்துள்ளனர். நாகார்ஜுனகொண்டாவில் ஆரம்பகால புதிய கற்காலப் பண்பாட்டின் காலத்தை பொ.ஆ.மு. 2500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, சிறிய அளவிலான அறுப்பான் கருவி, புதிய கற்காலக் கருவிகளுடன் கிடைத்துள்ளதைக் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கணப்படுகின்றன. மேற்குறித்த கருத்துகளுக்கு இணையாகவே இங்கு சான்றுகள் காணப்படுகின்றன எனலாம். தருமபுரிப் பகுதிகளில் நுண் கற்காலக் கருவிகளுடன் இணைந்தே புதிய கற்காலக் கைக்கோடாரிகள் காணப்படுவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

புதிய கற்கால வாழிட அமைவிடங்கள்

மலையடிவாரத்தில் காணப்படும் புதிய கற்கால மக்களின் பண்பாட்டுத் தடயங்களும், ஆற்றுப்படுகைகளை ஒட்டிக் காணப்படும் புதிய கற்காலப் பண்பாட்டுத் தடயங்களும் மாறுபடுகின்றன. பிக்கிலிகால், சங்கனக்கல்லு, தெக்கலக்கோட்ட, கோடேகல் போன்ற இடங்கள், மலையடிவாரத்தில் காணப்படும் புதிய கற்காலப் பண்பாட்டுக்கு உரிய இடங்களாகும். டி.நரசிபூர், ஆற்றுபடுகையில் அமைந்த இடங்களில் ஒன்று. மோதூர், மயிலாடும்பாறை ஆகியவை மலையடிவாரத்தில் அமைந்த புதிய கற்கால வாழ்விடங்களாகும். பையம்பள்ளி, ஆற்றுப்படுக்கையில் அமைந்த புதிய கற்கால வாழ்விடமாகும்.

புதிய கற்கால மக்கள் பெரும்பாலும் மலை சார்ந்த பகுதிகளையே அதிகமாக விரும்பியுள்ளனர். ஏனெனில், அப்பகுதியில் நிலவிய  சீரான தட்பவெட்ப நிலையும், சுற்றுப்புறச் சூழலும் அழகாக அமைந்துள்ளதே காரணமாகும். மேலும், அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்விடங்களைக் காணும்போது சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது. அவை -  

சீரான ஈரப்பதம் கொண்ட தட்பவெட்ப நிலையும், அதிகப்படியான மழையின் அளவும் அவர்களை ஈர்த்தன.

அடர்ந்த காடுகள், உயரமான மரங்களும், செடி கொடிகளும் இருந்தமை.

தங்களது மேய்த்தல் தொழிலுக்கு ஏற்ப பசுமையான புல்வெளிப் பகுதிகள் மலைப் பகுதியிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்பட்டமை.

வற்றாத அருவிகள், ஆறுகள் உள்ள இடங்கள், நீராதாரம் குன்றாத இடங்களையும் கவனத்தில் கொண்டனர்.

தங்களது தேவைக்கு ஏற்ப கற்கருவிகளைத் தயார் செய்துகொள்ளக்கூடிய மூலப்பொருட்களான பாறைப் படிவங்களும், கூழாங்கற்களும் கிடைக்கக்கூடிய இடமாக மலைப்பகுதிகள் அமைந்திருந்தன.

தங்களது வேளாண் தொழிலுக்கு ஏற்ப அமைந்துள்ள அதிகப்படியாகத் துணைபுரியும் பிற தொழில்களை மேற்கொள்ள இப்பகுதிகள் வசதியாக அமைந்தன.

தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஓடும் சனத்குமார நதி, பாம்பாறு, பெண்ணையாறு, பாலாறு ஆகியவற்றின் ஆற்றுப்படுகைகளில்தான் மோதூர், மயிலாடும்பாறை, பையம்பள்ளி போன்ற புதிய கற்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. சில இடங்களில், மலையடிவாரத்தைத் தொட்டுக்கொண்டு ஓடும் ஆற்றின் பகுதிகளிலும் இப்பண்பாடு பரவலாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. சான்றாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் பெண்ணையாறும், வேலூர் மாவட்டத்தில் ஓடும் பாலாறும், மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் தொட்டுக்கொண்டு ஓடுவதைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தில் புதிய கற்காலம் குறித்த துவக்கக் கால ஆய்வுகள்

தமிழகத்தில் புதிய கற்காலத்தை குறித்த ஆய்வுக்கான ஈர்ப்பு குறைவாகவே காணப்படுகின்றன எனலாம். ஏனெனில், நன்கு பளபளப்பான கூர்மையான கைக்கோடரிகள் எனும் கற்கருவிகள் மட்டுமே மேற்பரப்பு ஆய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. சான்றாக, சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கைக்கோடரிகள், சர் ராபர்ட் புரூஸ்புட் அவர்களின் கள ஆய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.*1 இவர், 1887-ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், கப்பல்வாடி போன்ற இடங்களில் புதிய கற்கால கைக்கோடரிகள் காணப்படுவதை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.*2 இவர் தாமிரபரணி ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் புதிய கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்துள்ளார்.*3 புதிய கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த இடங்களாக கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, மதுரை போன்றவை இருப்பதை அவர் கண்டறிந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில், செய்துங்கநல்லூர் என்ற கிராமத்தில் புதிய கற்காலத் தடயங்கள் காணப்படுவதையும் இவர் குறித்துள்ளார்.*4

வேலூர் மாவட்டத்தில் காணப்பட்ட தனித்தன்மையான படிகக் கற்பாறைகளையும் அதன் தொடர்ச்சியையும் கண்டு, இப்பகுதியில் கற்காலத்தைச் சார்ந்த தொழிற்பட்டறைகள் இருக்கக்கூடும் என்று அவர் உறுதியாகக் கூறினார். அதற்கேற்ப, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்றாம்பாளையம் அருகே மலையடிவாரத்தில் பழைய கற்கால தொழிற்பட்டறை இருந்துள்ளதை கள ஆய்வில் கண்டறிந்தனர்.*5

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்த டி.கல்லுப்பட்டி என்ற இடத்திலும் புதிய கற்காலத் தடயங்கள் அறியப்பட்டுள்ளன. மேலும், திருச்சி, பாராமாகல் என்று அழைக்கப்பட்ட பகுதிகளான கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆத்தூர் மற்றும் சேலம் போன்ற இடங்களிலும் இதேபோன்ற படிகக்கல் வகையே காணப்பட்டன. இப்பகுதியில் இருந்துதான், ராபர்ட் புரூஸ்புட் 70-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கைக்கோடாரி வகை கற்கருவிகளைக் கண்டறிந்தார்.*6

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓலப்பட்டி, வேப்பூர் போன்ற இடங்களிலும், கடலூர் மாவட்டம் வெள்ளாற்றங்கரையில் உள்ள தொழுதூரிலும், திண்டிவனம் அருகே உள்ள மயிலத்திலும் புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.*7 இங்கு, புதிய கற்காலப் பண்பாடு பெருங்கற்காலப் பண்பாட்டோடு இணைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

சேலம், தருமபுரி பகுதிகளில் கிடைத்துள்ள புதிய கற்காலக் கைக்கோடாரிகள் நாகார்ஜுனகொண்டா, சங்கனக்கல்லு போன்ற இடங்களில் கிடைத்த கைக்கோடாரிகளைவிட தனிச்சிறப்பு பெற்றவை. அவை, நன்கு பட்டை தீட்டப்பட்ட கூர்முனைகளைக் கொண்டும் முழுமையான வடிவமைப்பையும் கொண்டவை என ராபர்ட் புரூஸ்புட் அவர்கள் குறிக்கின்றார்.*8 பொ.ஆ. 1946-ல், மார்டிமர் வீலர் அவர்கள், புதுச்சேரிப் பகுதியான அரிக்கமேட்டில் மேற்கொண்ட அகழாய்வில், சாம்பல் நிற மட்கலன்கள் காணப்படுவதை அறிந்து, இப்பகுதியில் புதிய கற்காலப் பண்பாடு இருந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.*9

இங்கு காணப்பட்ட மட்கலன்கள், விளிம்பில்லாத மட்கலன் (Featureless Rim) வகையைச் சார்ந்ததாகும். இவ்வகைகளில் அடிப்பகுதி தட்டையாகவும், உடல் பகுதி உருண்டையாகவும் காணப்படும். தருமபுரிப் பகுதியில் வத்தல் மலை, கல்வராயன் மலை, வேலூரின் ஜவ்வாது மலை போன்ற இடங்களில் புதிய கற்காலப் பண்பாட்டுக்குரிய பளபளப்பான கைக்கோடாரிகள் (Polished Hand Axe) மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களது வாழ்விடங்களை அறிந்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகத்தில் புதிய கற்கால ஆய்வுகள், வீ.டி. கிருஷ்ணசாமி (Anceint India, No.3, 38-39), பி.பி.லால் (Anceint India, No.9, 101-102), பி.கே.தாப்பர் (1974), எச்.டி.சங்கலியா (1974, 513-545), டி.வி.மகாலிங்கம் (1978), எஸ்.ஆர்.ராவ், பி.நரசிம்மய்யா (1980), க.ராஜன் (2004), ச.செல்வராஜ் (2004), தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு (2005) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களது ஆய்வில், புதிய கற்காலம் குறித்த பல புதிய செய்திகள் அறியப்பட்டுள்ளன.

இன்றைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட பி.நரசிம்மய்யா அவர்கள், தமிழகத்தில் புதிய கற்காலத் தடயங்கள் இப்பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார். அவர் தருமபுரி மாவட்டம் முல்லிக்காடு, தையல்மலைப் பகுதிகளிலும், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு புதிய கற்காலத் தொல்லியல் தடயங்களை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர், அதன் காலத்தை பொ.ஆ.மு. 2800 எனக் குறிப்பிடுகின்றார்.*10

பி.நரசிம்மய்யா அவர்கள் இங்கு முறையான அகழாய்வுகளை மேற்கொள்ளவில்லை. இவர் தெரிவிக்கும் தகவல்கள், இங்கு இவர் மேற்கொண்ட மாதிரி அகழாய்வுக் குழிகளில் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. அண்மைக் காலத்தில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் புதிய கற்காலக் கருவிகள் கிடைத்து வருகின்றன.*11

பி.நரசிம்மய்யா அவர்கள் தனது ஆய்வின் முடிவாக, புதிய கற்காலத்தை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து காலக்கணக்கீடு செய்து வழங்கியுள்ளார்.*12 அவை –

1. மட்கலன்கள் இல்லாத புதிய கற்காலம் : 3000 - 2900 பொ.மு.ஆ.

2. புதிய கற்கால நிலை - ஒன்று : 2200 - 1800 பொ.மு.ஆ.

3. புதிய கற்கால நிலை - இரண்டு : 1800 - 500 பொ.மு.ஆ.

4. புதிய கற்கால நிலை – மூன்று (C14) : 1725 ± 100 பொ.மு.ஆ.

ஆனால், அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பையம்பள்ளி, மோதூர், மயிலாடும்பாறை அகழாய்வுகள், தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் எவ்வாறு வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய உதவுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை, மல்லப்பாடியில் அகழாய்வு மேற்கொண்டு, அங்கு புதிய கற்காலத்துக்கு உரிய கைக்கோடாரிகள் மற்றும் மட்கலன்கள் கிடைத்துள்ளதை தெரிவிக்கின்றது.*13 தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை, தருமபுரி மற்றும் பிற மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், புதிய கற்காலத் தடயங்கள் அதிக அளவில் காணப்படுவதை அறிவித்துள்ளது.*14 அவ்வறிக்கை, புதிய கற்கால மக்கள் வாழ்க்கை முறையில் காணப்பட்ட முன்னேற்றம், அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை குறித்தும் அரிய செய்திகளை வழங்குகிறது.

இவ்வகழ்வாய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தொல்பொருட்களான மட்கலன்கள், கற்கருவிகள், கைக்கோடாரிகள் மற்றும் பிறவகைக் கற்கருவிகளைக் கொண்டு, இம்மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் தெளிவாக அறிந்துகொள்ள உதவுகின்றன.

புதிய கற்காலப் பண்பாட்டின் முகங்கள்

புதிய கற்கால மக்கள் பள்ளத்தாக்குகளிலும், மலையடிவாரங்களிலும் தங்களது குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். இவர்களது குடியிருப்புகள் வட்ட வடிவமாகவோ அல்லது நீள்வட்ட வடிவமாகவோ, நிலமட்டத்தில் இருந்து தாழ்வாகப் பள்ளத்தில் அமைக்கப்பட்டன. இவர்கள், நீர் ஆதாரமுள்ள இடங்களுக்கு அருகாமையில் தங்கள் குடியிருப்புகளைத் தேர்வு செய்து அமைத்தனர்.*15

Story image

(மோதூர் - தருமபுரி அகழாய்வில் அறியப்பட்ட இரண்டு பதுங்கு குழிகள் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது)

இக்கால மக்கள், முதலில் கையால் செய்த மட்கலன்களைப் பயன்படுத்தினர். பின்னர் சக்கரத்தால் வனைந்த நேர்த்தியான மட்கலன்களைத் தயாரித்துள்ளனர்.*16 இவ்வளர்ச்சி, நிலவியல் அமைப்பை ஒட்டி தங்களது வாழ்க்கையை அவர்கள் அமைத்துக்கொண்டதால் ஏற்பட்டதாகும். இம்மக்கள், கூட்டம் கூட்டமாகவே வாழ்ந்துள்ளனர். தங்களது கூட்டத்தில் உள்ளவர்களையே தெரிவுசெய்து தங்களது மணவாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருத்தல்கூடும்.

இக்கால மக்கள், பலவிதமான வளமைச் சடங்குகளைச் செய்துள்ளனர். அந்தவகையில், வளமையின் குறியீடாக உலகத்துக்கு உயிர்களை உற்பத்தி செய்து வழங்கும் பெண்களைத் தெய்வமாகப் போற்றினர். அதன்விளைவாக, பெண் தெய்வ வழிபாடுகள் தோன்றின என்பதற்குப் பல அகழாய்வுகளில் பெண் தெய்வ சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளதைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

ஆய்வாளர்கள், நிலவியல் அமைப்பின் அடைப்படையில் தமிழகத்தை இரண்டு பிரிவாகப் பிரித்து, பதிய கற்காலத்தை ஆய்வு செய்துள்ளனர். அவை –

1. நாட்டின் உட்பகுதியில் காணப்படும் சேர்வராயன் மலை, பச்சை மலை, கொல்லி மலை, ஜவ்வாது மலை போன்ற போன்ற மலைத்தொடர்களைக் கொண்ட மேட்டு நிலங்கள்.

2. கடற்கரையை ஒட்டியும், நொய்யல், அமராவதி, தாமிரபரணி, கொள்ளிடம், பொன்னியாறு, பெண்ணையாறு, பாலாறு, வகையாறு, கெடிலம், கோர்த்தலையாறு போன்ற ஆறுகளின் சமவெளி நிலங்கள்.*17

தமிழக ஆறுகளில் பெரும்பான்மையானவை, இன்றைய ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகம் வழியாகப் பாய்ந்து கிழக்கே வங்காள விரிகுடாவில் கலப்பவை. இவ்வாறுகளால் பண்டையத் தமிழகம் நிலவளமும், நீர்வளமும் கொண்ட செழிப்பான பூமியாகத் திகழ்ந்துள்ளது.

புதிய கற்கால மக்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிப் பகுதி மேட்டு நிலங்கள் வழியாக வந்து, பெருமளவுக்கு இந்நிலங்களில் குடியேறியுள்ளனர். இப்பகுதிகள், சிறப்பான இயற்கை வளமும், தொழில் வளமும் கொண்டு விளங்கியமை இதற்கு முதன்மைக் காரணம் எனலாம். இங்கு பழைய கற்கால மனிதன் வேட்டையாடியும், உணவு தேடுதலையும் கொண்ட வாழ்க்கை முறையை விடுத்து, புதிய கற்காலத்திய சிறப்பான குணமான உணவு உற்பத்தி செய்வதற்கு முற்பட்டான்.*18 மேலும், காடுகளில் காணப்படும் விலங்குகளை வேட்டையாடுவதைத் தவிர்த்து, வீட்டு விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.

பிக்கிலிக்கால் (ஆந்திர மாநிலம்), உட்னூர், சங்கனக்கல் (கர்நாடகம்) ஆகிய ஊர்களில் பொ.ஆ.மு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மாட்டுப்பட்டிகளின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களது வாழ்விடங்களில் அகழாய்வு மேற்கொண்டபோது, அங்கு காளை மாடு சுடுமண் உருவங்கள் மிகுதியாகக் கிடைக்கப்பெற்றன. மேலும், பிக்கிலிக்கால் மலைக்குகையில் எருது, எருமை, மான் ஆகியவற்றின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.*19

தமிழகத்தில் மயிலாடும்பாறை, செத்தவரை போன்ற இடங்களில் எருது, மீன் போன்ற ஓவியங்கள் மற்றும் மாமிசத்தை தீயிலிட்டு உண்ணும் முறையைக் காட்டும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.*20 இவற்றின் காலத்தைப் புதிய கற்காலத்தோடு ஒப்பிட்டுக் காணலாம். இப்பகுதிகளில் பெருங்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள் அதிகமாகக் காணப்படுவதால், இவ்வோவியங்கள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தது என உறுதியாக அறியமுடியவில்லை. புதிய கற்கால மக்கள், கால்நடை வளர்ப்பை முல்லை நிலப்பகுதியில் அதிக அளவில் நடைமுறைப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகிறது.

தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால அகழாய்வுகளில், நாகார்ஜுனகொண்டா, டி.நரசிபூர், தெக்கலகோட்டா, அல்லூர் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ராபர்ட் புரூஸ்புட் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் கப்பல்வாடி என்ற இடத்தில் புதிய கற்காலக் கைக்கோடரிகளைக் கண்டறிந்தார்.*21

இந்தியாவில் நடைபெற்ற பல அகழாய்வுகள், புதிய கற்கால மக்களைப் பற்றிய பல தரவுகளை வழங்கியுள்ளன. பெல்லாரி மாவட்டம் தெக்கலக்கோட்டா, தார்வார் மாவட்டம் அல்லூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழய்வுகளில் இக்கால மக்கள் கொள்ளு, ராகி போன்ற பயிர்களைப் பயிரிட்டனர் என்பதற்குச் சான்றுகளாக இத்தானியங்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலம் அதனைத் தொடர்ந்து பெருங்கற்காலம் என மண்ணடுக்குகளில் கீழிருந்து மேலாக, ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, தொடர்ச்சியான வாழ்விட வரலாற்று எச்சங்கள் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.*22

தமிழகத்தில் பையம்பள்ளியில் (வேலூர் மாவட்டம்) மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கொள்ளும், ராகியும் சேகரிக்கப்பட்டுள்ளதை இங்கு ஒப்பிடலாம்.*23 பொருந்தல் அகழாய்வில் நெற்பயிர் மணிகள் கிடைத்துள்ளன.*24 இவற்றைக்கொண்டு, இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்களும் அவர்களைத் தொடர்ந்து பெருங்கற்கால மக்களும், விவசாயம் மேற்கொண்டதை அறியமுடிகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவில் கொள்ளுப்பயிரும், ராகிப்பயிரும் அதிக அளவில் பயிரிட்டனர் என்பது தெளிவாகிறது. மேலும், பலவகையான பயிர்வகைகளைப் பயிரிட்டனர் என்பதை ஆங்காங்கே கிடைத்த தானியங்களைக் கொண்டும் அறியமுடிகிறது.

மோதூரில், புதிய கற்கால மக்கள் இயற்கையான மலைக்குன்றுகளின் அடிவாரத்திலும், இரண்டு குன்றுகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர்.

Story image

(மோதூர் - இரண்டு மலைகளுக்கு நடுவில் பெருங்கற்கால வாழிட அகழாய்வுக்குழி)

இவர்கள் மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் ஆழமான குழிகளை வெட்டி பள்ளத்தை ஏற்படுத்தி, அதன் மேல் பகுதியில் சிறிய அளவிலான குடிசைகளை அமைத்துத் தங்கியுள்ளனர்.

Story image

(மோதூர் - தரைமட்டத்தைவிட தாழ்வான குடிசைப் பள்ளங்கள் (இரண்டு) அளவுகோல் வைத்துக் காட்டப்பட்டுள்ளது)

இவ்வகையான வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில், அகழாய்வுகளில் மரக்குச்சிகள் நடுவதற்காகத் தோண்டப்பட்ட குழிகள், மரந்தண்டின் எச்சங்களுடன் கிடைத்துள்ளன.*25 அடுத்து, மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் சிறிய சிறிய கற்துண்டுகளை அடுக்கி சுவர் எழுப்புவர். அத்தகைய சுவற்றையும் தரைப்பகுதியையும் மாட்டுச் சாணத்தையும் களிமண்ணும் கலந்து பூசி மெழுகுவர். தருமபுரி மாவட்டம் மோதூரில், இன்றளவிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றியே வீடுகளை அமைத்து வருகின்றனர்.

இதுபோன்று அமைக்கும் குடிசைகளின் தரைப்பகுதியை மெருகேற்ற, வட்டமான அடிப்பகுதியை சமஅளவு கொண்ட கற்களைக்கொண்டு தட்டி சமன்செய்து, பளபளப்பாக வரும் வரை ஒருவகைத் தேய்க்கும் கற்கருவியைக் கொண்டு தேய்ப்பர். தேய்க்கும் இவ்வகைக் கற்களை இதற்காகவே தயார் செய்துள்ளனர். சான்றாக, மோதூர் அகழாய்வில் அடிப்பகுதியில் சமமான, பளபளப்பு கொண்ட முட்டை வடிவ வட்டுகள் (Discoid Rubbers) மற்றும் கற்கருவிகளை கூர் தீட்டும் கற்கருவிகள் (Polishing Stone Tools) கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.*26

மோதூர் அகழாய்வில் இரண்டுவிதமான குடிசைப் பகுதிகள் கிடைத்துள்ளன. அவற்றுள், ஒன்று பதுங்கு குழி வகை, மற்றொன்று துண்டுக் கற்களை வைத்து எழுப்பப்பட்ட குடிசைப் பகுதியாகும். இரண்டு வட்டமான பதுங்கு குழிகளும், சிறிய சிறிய கற்துண்டுகளைக் கொண்டு களிமண்ணால் எழுப்பிய சுவர் பகுதியும் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இங்கு புதிய கற்கால மக்கள் தங்கி வாழ்ந்துள்ளதை உறுதி செய்கின்றன.*27 இங்கு அதிக அளவில் சுண்ணாம்பு காரைத் துண்டுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.

Story image

(மோதூர் அகழாய்வுப் பணியில், தி. சுப்ரமணியம் மற்றும் கட்டுரை ஆசிரியர் ச.செல்வராஜ்)

மோதூர் அகழாய்வுக் குழி ஒன்றில் இருந்து (எண் MDR-11) செம்பு வளையங்கள் இரண்டும், ஒரு சுடுமண் பொம்மையும் சேகரிக்கப்பட்டன. இது ஒரு பெண் உருவ பொம்மை ஆகும். 4 செ.மீ. நீளமும், 5.5 செ.மீ. அகலமும் கொண்டது. உடைந்த நிலையில், 1.05 மீட்டர் ஆழத்தில் இச்சுடுமண் பொம்மை, இரண்டு மார்பகப் பகுதிகளும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. தலைப்பகுதியைக் காட்ட கூம்பு வடிவ அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இச்சுடுமண் பாவை, புதிய கற்கால மக்கள் வழிபட்ட பெண் தெய்வ உருவமாகக் கருதப்படுகிறது.

Story image

இதன் காலத்தை இவற்றுடன் கிடைத்த செம்பு வளையல், உடைந்த கைக்கோடாரி (Celt) போன்ற பிற தொல்பொருட்களின் அடிப்படையில், பொ.ஆ.மு. 3000 எனக் கருதலாம். மோட்டூர்,*28 உதயநத்தம்*29 ஆகிய இடங்களில் காணப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த மனித வடிவிலான குத்துக்கல் (Anthromorphic Menir) இதன் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதலாம். கீழ்வாழை ஓவியங்களிலும் தலைப்பகுதி இவ்வாறே காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் காட்டுபவையாக உள்ளன.

புதிய கற்கால மக்களின் பண்பாட்டை தெளிவாக அறிய உதவும் தொல்பொருட்கள், மட்கலன்களும் கற்கருவிகளுமே ஆகும். இக்காலகட்டத்தில் இவர்கள் பல்வேறு வகையான கற்கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களில் அதிக அளவு அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இருந்தபோதும், அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில், அவர்களது மாறுபட்ட பண்பாட்டுக் கூறுகளைக் காணமுடிகிறது. இக்கருத்துக்கு வலுவூட்டும்முகமாக, தென்னிந்தியாவில் நடைபெற்ற புதிய கற்கால அகழாய்வுகளையும் ஒப்பீடு செய்யும் வகையில் தொடர்ந்து பார்க்கலாம்.

சான்றெண் விளக்கம்

[1]. Ramsamy.A, Madras Dist. Gazetteers, Salem, Government of Tamil Nadu, Madras, (1967)

[2]. Ibid., pp 6-8

[3]. Sankalia H.D, Beginning of Civilization of South India, Seience Today, April 1968, pp.22-30

[4]. Ibid., 

[5]. Rajan.K, Rachaeological Gazetteeers of Tamil Nadu, Mano Pathippagam, Thanjavur

[6].  Ramasamy.A, op.cit.,  

[7]. Gosh.A, op.cit., p.68

[8] .  Sankalia H.D, op.cit.,  

[9]. Ancient India, Vol-2, Bullettin, Archaeological Survey of India, 1946

[10]. Narasimhaiah.B, op.cit.,

[11]. Selvaraj.S, List of Neolithic Sites in Tamil Nadu, Un Published article.

[12]. Narasimhaiah.B, op.cit.,

[13]. இராசவேலு.க, திருமூர்த்தி, தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, (1995)

[14].  Selvaraj.S, Recent Archaeological Discoveries in Dharmapuri Region, Publishlished in Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai.

[15]. ரா.பூங்குன்றன், அதியமான்-நள்ளி நாட்டில் ஆவும் ஆயரும், கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. மே 2009. ப.3. .   

[16]. Guru Charan Singh, Pottery in India, Vikas Publishing House Pvt Ltd., New Delhi.   

[17]. K.S.Ramachandran, Archaeology of Tamil Nadu, Sudeep Prakashan, New Delhi, 1980

[18]. K.V.Soundararajan, Glimpses of Indian Culture, History and Archaeology, Sudeep Prakashan, 1980. 

[19]. F.R. Allichin, Andhra Pradesh Government Archaeological Series No I - Piklihal Excavation, 1960

[20]. ச.செல்வராஜ், தென்னாற்காடு மாவட்ட வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழாசிரியர் கழக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1990. 

[21]. Narasimhaiha, B, Neolithic and Megalithic Cultures in Tamil Nadu, Sundeep Prakashan, New Delhi, 1980, pp.37-56. 

[22]. Gosh.A, An Encyclopaedia of Indian Archaeology, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.  

[23]. Ancient India, Bulletin of the Archaeological Survey of India, 1946.

[24]. கா.ராஜன், பொருந்தல் அகழாய்வு - செய்திக் குறிப்பு, ஆவணம், எண் 20, பக். 109.

[25]. Ancient India, Bulletin of the Archaeological Survey of India, 1946.  

[26]. Sridhar.T.S, (G.Ed) Excavarions of Archaeological Series in Tamil Nadu - Modur, Department of Archaeology, Chennai, 2005

[27]. Selvaraj.S, Excavasion at Modur - 2005, Seminor Paper, 2005.

[28]. Narasimhaiah.B, op.cit., 

[29]. Selvaraj.S, Exploration at Villuppuram – Thiruvannamali Hills.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.