புதிய கற்காலம் - 1
வீட்டு விலங்குகளைப் பயன்படுத்தத் துவங்கியதும், வனவிலங்குகளிடம் இருந்து அவன் விலக ஆரம்பித்தான். பயிர்களையும் தானியங்களையும் பயன்படுத்த வேண்டும் எனக்கருதி, விவசாயத்தைச் செய்ய முற்படுகிறான்.


புதிய கற்கலம் - அறிமுகம்
புதிய கற்காலம் என்பது புதிய சிந்தனைகள், புதிய கருத்துகள், புதிய தொழில்நுட்பங்கள் என பல புதிய பரிமாணத்தில் மக்களின் பரிணாம வளர்ச்சி வெளிப்பட்ட காலகட்டமாகும். தமது வாழ்வியல் மேம்பாட்டைச் சிந்தித்த பழைய கற்கால மக்களை, புதியதோர் உலகம் படைக்க அழைத்துச் சென்ற காலம்தான் புதிய கற்காலம் என்றும் குறிப்பிடலாம். இக்காலத்தில், சாதாரண நிலையிலிருந்து பசுமையான வேளாண் தொழில் மேற்கொண்டது முதல் நாடோடிகளாகத் திரிந்த நிலையை விடுத்து (Nomadic life) நிலையான இருப்பிடம் அமைத்துக்கொண்டது வரை, மனிதனின் வாழ்வியலில் ஏற்பட்ட வளர்ச்சிகள் புதிய புரட்சியாக அமைந்தன. இதனால், இக்காலம் புதுமைகளை ஏற்படுத்திய (Green revolution) பசுமைப் புரட்சிக் காலம் என்றும் குறிக்கப்படுகிறது. அந்தவகையில், கற்கால மக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்துப் புதிய பாதையில் அவர்களை அழைத்துச் சென்ற காலமாகையால், இக்காலத்தைப் புதிய கற்காலம் என்று முந்தைய நிலைகளில் இருந்து பகுத்து அழைக்கப்படுகிறது.
எங்கும் எதிலும் புதுமையைப் புகுத்தி, உலகை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள்தான் புதிய கற்கால மக்கள். பெயருக்கு ஏற்ப தாம் பயன்படுத்தி வந்த கரடுமுரடான பழைய கற்காலக் கருவிகளைத் தமது சிந்தனை, வாழ்வியல் வளர்ச்சிக்கு ஏற்ப அக்கருவிகளுக்கு மெருகேற்றி, பளபளப்பாகத் தீட்டி, கரடுமுரடானவற்றுக்கு அழகிய வடிவம் தந்தனர். தேவைக்கு ஏற்ப பெரிய சிறிய அளவுகளில், புதிய வடிவங்களிலும் பற்பல கற்கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தினர். இதன்மூலம் அவர்கள் வாழ்வியலில் ஏற்பட்ட மென்மைத்தன்மையிலான மாற்றங்களையும், அறிவு வளர்ச்சியையும் இன்று நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
புதிய கற்கால மக்களின் வாழ்வியல் மாற்றத்துக்குரிய காரணங்கள்
பிரைடு உட் (Braid Wood) மற்றும் ஹோம் (Home) ஆகியோர், தம்முடைய ஆய்வில் புதிய கற்கால மனிதன், வாழ்வியல் மாற்றத்துக்கும், உணவுத் தேடுதலில் இருந்து உணவு உற்பத்திக்கு மாறியதன் அடிப்படைக் காரணமும் என்ன என்பதைக் கண்டறிந்தனர். இவ்விருவரும் கீழ்க்கண்ட காரணங்களை முன்வைக்கின்றனர்.
தங்களது இனம் அழிந்துகொண்டே செல்லுதல், வேட்டைக்குச் சென்று உணவு தேடுபவர்கள் திரும்புவதில்லை என்ற, இந்த மாதிரியான மனச்சிக்கலைத் தவிர்க்கவே, மனிதன் நிலையான ஓர் இருப்பிடத்தில் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளான் (Demographic Stress).
தகுந்த சுற்றுப்புறச் சூழலை அமைத்துக்கொள்ள வேண்டும் (Proper Environment) என்ற எண்ணம் கொண்டவனான்.
மாறுபட்ட முறையில் சிந்தித்து, இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, உழைத்து தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளும், அதாவது இயற்கை வளத்தைப் பயன்படுத்தி, தமக்குத் தேவையானவற்றை இருந்த இடத்திலிருந்தே உற்பத்தி செய்துகொள்ளும் தொழில்நுட்ப அறிவு பெற்றமை (Exploitive Technology) போன்ற காரணங்களால், உணவு தயாரிக்கும் நிலைக்கு மனிதன் வந்தடைகிறான். ஆனால், ஒரு மனிதன் உணவுப் பொருட்களையும், தானியங்களையும் உற்பத்தி செய்ததினால் மட்டுமே நாகரிக வளர்ச்சியும், மாற்றத்தையும் பெற்றுவிட்டான் என்று கூற இயலாது.
மற்றொரு கருத்தாக ஹாசன் அவர்கள் கூறும்போது, புதிய கற்கால மனிதன் உணவு உற்பத்திக்கு மாறியமைக்கான காரணம், அவனுக்குப் போதுமான மாமிசங்கள் கிடைக்காததும், மேலும் மாமிசம் ஒன்றே தேவையான சத்துகளை தமக்கு வழங்குவதில்லை என்று உணர்ந்ததாலும், அதனால் தானிய வகைகளையும் தம் உணவில் சேர்த்துக்கொள்ள முற்பட்டதாலும்தான். அடுத்த நிலையில், தானியங்களை முதன்மைப்படுத்தி மாமிசங்களை தேவைக்கேற்ப பயன்படுத்த மனிதன் முற்படுகிறான். அதற்காகவே, வீட்டு விலங்குகளை வளர்த்து, தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளை தன் இருப்பிடத்திலேயே அமைத்துக்கொண்டு, அவசர காலத்துக்கு அவற்றைப் பயன்படுத்தினான் என்பார்.
வீட்டு விலங்குகளைப் பயன்படுத்தத் துவங்கியதும், வனவிலங்குகளிடம் இருந்து அவன் விலக ஆரம்பித்தான். பயிர்களையும் தானியங்களையும் பயன்படுத்த வேண்டும் எனக்கருதி, விவசாயத்தைச் செய்ய முற்படுகிறான். அதற்கு அவன் கையாண்ட அணுகுமுறைகள் பக்கபலமாக இருந்து, அவனது நிலையான வாழ்க்கைக்கு உதவின.
அடிப்படைத் தேவைகளை உணர்ந்த புதிய கற்கால மக்கள், ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, விவசாயம் உறுதுணையாக அமைந்தது போலவே, விலங்குகளிடம் இருந்து விடுபட்டதால் அவனைச் சுற்றியிருந்த உறவுகள் (Loosing Contacts) பிரியாமல் இருந்தன. விலங்குகளை அதன் குட்டிப் பருவத்திலிருந்தே (Incipient domestication) வீட்டுவிலங்காக வளர்த்தும் சிறைப்பிடித்து பழக்கப்படுத்தியும் (Taming in Captivity) கொண்டான். பிறகு விலங்குகளைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்து தனது உணவுத் தேவையை அடைந்துகொண்டான்.
டக்ஹோம் மற்றும் மேன்ஸ்பீல்டு இருவரும், புதிய கற்கால மக்கள் தட்பவெட்ப நிலை காரணமாகவும், மண்ணின் தன்மை சிறப்பாக அமைந்ததாலும் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தபோது, அது அவர்களுக்குக் கைகொடுத்தது என்று குறிப்பிடுகின்றனர்.
புதிய கற்கால மக்களின் சமூக, பொருளாதார பண்பாட்டு நிலை
உணவைத் தேடுவதும், வேட்டையாடி உணவைச் சேகரிப்பதும், பல நூற்றாண்டுகளாகப் பழைய கற்கால மக்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்தது. கால மாற்றத்தின் அடிப்படையில், தம் முன்னோர்களைப் பின்பற்றி வாழும் மக்கள், சில தலைமுறைகளில் வாழ்வியல் மாற்றத்துக்கு உள்ளாகின்றனர். உணவு தேடுதலையும், வேட்டையாடுதலையும் விடுத்து, தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிப்பதற்கு மாறுகிறான். இந்த மாற்றம், அவனது செயல்திறனாலும், அனுபவத்தாலும் பெற்ற ஒன்றே எனலாம். இதனைத் தொல்லியல் சான்றுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இத்தகைய நாகரிக மாற்றங்களை ஏற்பதற்கு முன்னர், நமது நாகரிகங்கள் காலம் காலமாக, பல வளர்ச்சிகளைப் பெற்று வந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகச் சூழலில் காணப்பட்ட பேரூழிகளில், கடைசி ஊழியின் பகுதியை அடைந்தபோதுதான், இதுபோன்ற வேளாண் வளர்ச்சிகள் தோன்றிற்று என்பர். இத்தகைய இயற்கைச் சூழலின் மாற்றங்கள் படிப்படையாக மாற்றம் பெற்று, நாகரிக வளர்ச்சிகள் உருவாக்கம் பெறுவதற்கு இவை வழியமைத்துத் தருகின்றன.
அகழாய்வுகள் முடிவுகள் வழங்கும் புதிய கற்கால வரலாறு
பழைய கற்காலப் பண்பாட்டை தொடர்ந்து, நுண் கற்கருவிப் பண்பாடு வளர்ச்சிபெற்றதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். இப்பண்பாடு, தமிழகம் முழுவதும் பரந்த அளவில் பின்பற்றப்படவில்லை. கற்காலப் பண்பாட்டில், பழைய கற்கால பண்பாட்டை அடுத்து புதிய கற்காலப் பண்பாடு உருவான நிலையில், அவை மனிதனின் வளர்ச்சியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. நுண் கற்கருவிக் கால மக்களின் பண்பாட்டை அடுத்து, புதிய புதிய கற்காலப் பண்பாடு தொடர்ந்தது என்பதற்குச் சான்றாக, பல அகழாய்வுகளில் நுண் கற்கருவிகளை அடுத்து புதிய கற்காலக் கற்கருவிகள் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம். வடஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால அகழாய்வுகளில், புதிய கற்காலக் கைக்கோடாரிகளும் நுண் கற்காலக் கருவிகளும் கலந்து கிடைத்துள்ளதையும் காணமுடிகின்றது.*1

தமிழகத்தில் மாங்குடி*2, மயிலாடும்பாறை*3 ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், மண்ணடுக்குகளிலேயே நுண் கற்காலக் கருவிகளும், புதிய கற்காலக் கருவிகளும் ஒன்றையடுத்து ஒன்றாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது. தற்போதைய வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் அமைந்த ‘பையம்பள்ளி’ என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது. வாழ்வியலில் முன்னேற்றம் பெற்ற இக்கால மக்கள் பொருளாதார வளர்ச்சியையும், நாகரிக மாற்றத்தையும், தொழில்வளத்தில் முன்னேற்றத்தையும் பெற்றுள்ளனர் என்பதை அகழாய்வுகளில் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள் நிரூபித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் குறிப்பிடும்படியான புதிய கற்கால வாழ்விடங்கள் அதிக அளவில் அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் பற்றிய ஒரு தெளிவற்ற பார்வையே உள்ளது. இந்நிலையால், புதிய கற்கால தொல்லியல் தடயங்கள் எவை எவை என்பது குறித்து அறிந்துகொள்ளும் அவசியம் உருவாகிறது. வழவழப்பான கூர்மையான கைக்கோடாரிகளைத் தவிர, பதிய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிற கற்கருவிகள் பற்றிய செய்திகள் இங்கு அழுத்தமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மேலும், புதிய கற்காலத் தொல்லியல் தடயங்கள் தகுந்த சான்றுகளுடன் இங்கு விளக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற அகழாய்வுகள், மேற்பரப்புக் கள ஆய்வுகள் ஆகியவற்றில் கிடைத்த தொல்பொருட்கள், இவற்றுக்கு உறுதுணையாக நிற்கின்றன. அவற்றின் அடிப்படையில், இப் பகுதியில் புதிய கற்காலப் பண்பாட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றங்களும், பொருளாதார பண்பாட்டு நிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விளக்கப்பெறுகின்றன.
உலக நாடுகளில் புதிய கற்காலப் பண்பாடு
ஒரு நாகரிகத்தின் வளர்ச்சி அல்லது மாற்றத்துக்கு நிலவியல் அமைப்பும், அவற்றில் ஏற்படும் தட்பவெட்ப நிலை மாற்றமும் காரணமாகின்றன. இந்தியாவில், வேளாண்மைத் தொழில் துவக்கம் ஏற்படுவதற்கு தட்பவெட்ப நிலையே காரணமாக அமைந்துள்ளது. உலகில் நாகரிகத்தின் வளர்ச்சியும், மாற்றங்களும் ஒவ்வொரு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளன. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்பட்ட தொடர்பு, பின்னர் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள், மனிதனுடைய நாகரிக முன்னேற்றத்துக்கு உதவுகின்றன. நாகரிக மாற்றங்கள் உலகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. புதிய கற்கால மறுமலர்ச்சியும், அதேபோன்று உலகில் பிற பகுதிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்நாகரிக வளர்ச்சியும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில், பல நாடுகளில் புதிய கற்காலத்தின் காலநிலை குறித்து கீழ்க்கண்டவாறு குறித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கர்-இ-மார் (Gar-i-mar), 7000 பொ.ஆ.மு. இவ்வாறு குறிப்பிடும் அவர்கள், உலகின் மிகவும் பழமையான பண்பாட்டுக்கு உரியவர்கள் தாங்கள் என்றும், புதிய கற்காலத்தின் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் தாங்களே என்றும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
உலகில் புதிய கற்கால மக்கள், தாய்லாந்துப் பகுதியில் சுமார் பொ.ஆ.மு. 9000, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொ.ஆ.மு. 8000 (Greece), ஆப்கானிஸ்தான் 7000 (Afghanistan), ஐரோப்பாவில் 5500 (Europe), எகிப்தில் 6000 (Egypt), சீனாவில் 5000 (China) ஆண்டுகளுக்கும் முன்னரே, பல்வேறுவிதமான புதிய கற்கால கற்கருவிகளை தங்களது தொழில்நுட்பத் திறமையினால் உருவாக்கி, அவற்றை தம் உணவு சேகரித்தல் (Foot gathering) பணிக்கும், அன்றாட வாழ்வின் பல்வேறு வகையிலான தொழிலுக்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.*4
இந்தியாவில் புதிய கற்கால மக்கள் சுமார் பொ.ஆ.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தங்களது தொழில்நுட்பத் திறமையின் அடிப்படையில் பல்வேறு வடிவ கற்கருவிகளைத் தங்கள் வாழ்வியலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.*5
புதிய கற்கால ஆய்வில், மட்கலன்கள் ஒரு தனியிடம் பெருகின்றன. எனவேதான், மட்கலன்கள் அற்ற புதிய கற்காலம் என்றும், மட்கலன்கள் கலந்து கலந்து காணப்படும் புதிய கற்காலப் பண்பாடு எனப் பகுத்து, இக்காலகட்டத்தை ஆய்வு செய்துள்ளனர். புதிய கற்கால வெளிப்பாட்டில், இடத்துக்கு இடம் கால வேறுபாடுகளைக் காணலாம்.
அகழாய்வு முடிவுகள்
பழைய கற்கால மக்கள் உணவைத் தேடி அலைந்து, அவை கிடைத்த இடத்திலேயே அவற்றை உண்டு, உறங்கி, ஒரு நிலையான இருப்பிடமின்றி வாழ்ந்தனர்.*6 புதிய கற்காலத்தில்தான், மனிதன் தனக்கென ஒரு நிலையான வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு, தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்து அதில் வெற்றியும் பெற்றான்.*7 வேட்டைக்குச் சென்றாலும், உணவைத் தானே உற்பத்தி செய்தாலும், சேகரித்த உணவை தன் இருப்பிடத்துக்குக் கொண்டுவந்து அதனை உடன் இருப்பவர்களோடு பகிர்ந்து உண்டுள்ளனர். புதிய கற்கால மக்கள்தான் ஆடு, மாடுகளைக் கூட்டம் கூட்டமாக வளர்க்க ஆரம்பித்தார்கள். அவற்றையே தம் செல்வங்களாகவும் கொண்டார்கள்.*8 புதிய கற்கால மக்கள், தங்கள் வாழ்க்கைப் பாதையில் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றின் மூலம் புரட்சிகரமான முன்னேற்றங்கள் பலவற்றைக் கண்டுர அவற்றை நாகரிக உலகுக்கு அறிமுகப்படுத்தினர். இதனையே புதிய கற்காலப் புரட்சி (Neolithic Revolution) என வரலாற்று அறிஞர்கள் குறிக்கின்றனர்.*9 இதன் பயனாக, பழங்காலத் தமிழர் தம் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும், புதிய பரிணாமத்தையும் உண்டாக்கி தம் வாழ்வியல் தனித்தன்மையையும் பெற்றனர் என்பதை அண்மைக்கால அகழ்வாய்வுச் சான்றுகள் தெளிவாக எடுத்தியம்புகின்றன.
இந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு
இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல இடங்களில் அகழாய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் புதிய கற்காலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றார்கள்.
ஆரம்ப காலகட்ட புதிய கற்காலப் பண்பாடு (Early Neolithic Cult)
பிற்கால புதிய கற்காலப் பண்பாடு (Late Neolithic Cult)
ஆரம்ப காலகட்டத்தில்தான் பதுங்கு குழிகளிலும் (Dwelling Pits), கையால் வனையப்பட்ட மட்கலன்களையும் பயன்படுத்திய காலம் ஆகும். நன்கு வளர்ச்சி அடைந்த பின்னர், புதிய கற்கால மக்கள் சாம்பல் நிற (Grey Ware) மட்கலன்கள், சிவப்பு நிற மட்கலன்கள் (Red Ware), மங்கலான இளம் பழுப்பு நிற மட்கலன்கள் (Buff ware), இளம் பழுப்பு நிற மட்கலன்கள் (Drab ware) மற்றும் காவி நிற மட்கலங்கள் (Brown ware) அல்லது கறுத்த ஆரஞ்சு நிற மட்கலன்களும், இவற்றுடன் கற்கருவிகள், மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகளும் மண்ணடுக்கில் கிடைத்துள்ளதாகக் குறிக்கின்றனர்.
புதிய கற்கால மட்கலன்களைத் தயாரிக்க கற்றபோது, கரடுமுரடான (Crude form) அமைப்பில்தான் முதன்முதலில் மட்கலன்களை வனைந்தனர். களிமண்ணை தூய்மை செய்வதிலும் சில குறைகள் காணப்பட்டன. இவை களையப்பட்டு நல்ல தூய்மையான களிமண்னைப் பயன்படுத்தியும், பின்னர் பானைகளை சூடேற்றி மட்கலன்களை தயாரித்தும் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சிவப்பு, காவி நிறம், சாம்பல் நிறம் ஆகியவையே அதிக அளவில் புதிய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மட்கலக்களாக இருந்துள்ளன. பெரும்பாலும், கிண்ணம் (Bowl), குடுவை (Vase) போன்றவையே பயன்படுத்தியதாகவும் குறிப்பர். முதன்முதலில் கைகளால் (Hand made) மட்கலன்களை வனைந்தான். பின்னர் சக்கரம் கொண்டு (Wheel made) வனைந்தான் என்று அறியமுடிகிறது.
இந்தியாவில் சீவாலிக் நிலப்பரப்புப் பகுதிகளிலும் (Siwalik Region), விந்திய நிலப்பரப்புப் பகுதிகளிலும், கங்கையின் கழிமுகப் பகுதிகளிலும் இப்பண்பாடு பரந்து காணப்படுகிறது. பங்களாதேஷ் மற்றும் பிகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் மேற்பரப்பு ஆய்வுகளில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரி (Axes), கிளிப்பான் (Adzes) மரத்தைக் கிழிக்கப் பயன்படுத்தும் கருவியான உழி (Chisels) போன்ற கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவை முக்கோண வடிவம் (Triangular), கோடக வடிவம் (Trapezoidal) அதாவது நான்குபுறமும் இணையில்லாமல் காணப்படும் வடிவத்தில் காணப்படுகின்றன. திரு. கிருஷ்ணசாமி அவர்கள், புதிய கற்காலத்தின் முதன்நிலைத் தோற்றத்தைக் கண்டறியும் மூலக்கூறுகளுக்கு நம்பகத்தகுந்த சான்றுகள் காணப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். மேலும் புதிய கற்காலப் பண்பாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பரவியிருக்கலாம் என்றும் கருதுகிறார். சட்டர்ஜி, ராய் மற்றும் கோஷ் ஆகிய தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, புதிய கற்கால கோடாரிகள் ஏற்கெனவே இந்தியாவில் இருந்துள்ளன என்றும், இப்பண்பாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்த புதிய கற்காலப் பண்பாடு, ஏற்கெனவே இருந்த பண்பாட்டுடன் கலந்துகொண்டன என்றும் கருதுகின்றனர். இந்திய நாட்டு நாகரிக வளர்ச்சி நிலைகளில், வேளாண்மை துவக்கம் ஏற்பட்ட காலத்தில் புதிய கற்காலக் கைக்கோடாரிகள் பண்பாடும் துவங்கியிருத்தல் வேண்டும். மேலும், இது இந்தியாவின் தனித்துவமான பண்பாடே என்றும், இப்புதிய கற்காலப் பண்பாடு உலக நாடுகளோடு கலந்துள்ளது என்பதையும், இங்குள்ள நன்கு செழிப்பான விளைநிலத்தைக் கொண்ட பழமையான பகுதிகளைச் சுட்டி, இவையே நாகரிகத் தோற்றத்தின் முதன்நிலையாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா போன்ற பகுதிகளில் பதிய கற்காலப் பண்பாடு பரவலாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம், இப்பகுதிகளை ஒட்டிய உயர்ந்த மலைப்பகுதிகளும், அடர்ந்த காடுகளும், சீரான மழையும், வற்றாத அருவிகளும், ஆறுகளுமே ஆகும். இவை இப்பகுதியை வளம்கொழிக்கச் செய்யும் பகுதியாக அமைத்துள்ளன. இத்தகைய பண்புகள் நிறைந்த நிலப்பரப்புகளைக் கொண்ட பகுதிகளில்தான் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன, மலர்ந்துள்ளன என்பது திண்ணம். இப்பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகள், இப்பகுதியில் புதிய கற்காலப் புரட்சிப் பண்பாடு தோன்றியிருத்தல் வேண்டும் என்பதற்குத் துணை நிற்கின்றன.

புதிய கற்காலக் கருவிகள் (புகைப்படம் நன்றி: ஆர். ரமேஷ், மேட்டூர்)
மார்டிமர் வீலர், 1959-ல் இப்பகுதிகளில் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வில், இந்திய புதிய கற்காலப் பண்பாடு தோன்றியதற்குப் பல சீரான தொல்லியல் சான்றுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், லப்பக் 1867 (Lubbock), வோர்மன் 1947 (Worman), ஹட்டன் 1928 (Hutton), தானி 1960 (Dani) ஆகியோர், இந்தியாவின் பல பகுதிகளில் சீரான மேற்பரப்பு ஆய்வை மேற்கொண்டு பல புதிய கற்காலத் தடயங்களையும், குறிப்பிட்ட சில இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளிலும் பல தடயங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். மேற்பரப்பு ஆய்வில் நன்கு பளபளப்பான கற்கருவிகளும், வழவழப்பான கூர்முனை கொண்ட கோடாரிகளையும் கிளிப்பான்களையும் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய கற்காலக் கருவிகள் (புகைப்படம் நன்றி: ஆர். ரமேஷ், மேட்டூர்)
கிழக்கிந்தியாவில், புதிய கற்காலத்தின் காலத்தை, கிடைக்கப்பெற்ற கற்கருவிகளைக் கொண்டு கணக்கிடும்போது, கைக்கோடாரிகள், வட்டுகள், கூர்தீட்டும் கருவிகள் (Sharpenning tools), வெட்டுக்கத்தி, கிளிப்பான் போன்ற கருவிகள் நுண் கற்காலத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டு காணப்படுவதால், இதன் காலம் பொ.ஆ.மு. 10,000 முதல் எனக் கருதப்படுகிறது. இக்காலக் கணிப்பு, இடத்துக்கு இடம் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் அடிப்படையில் சற்று மாறுபடுகின்றன. இருப்பினும், நுண் கற்காலத்தைத் தொடர்ந்து புதிய கற்காலம் துவங்கியது என்பதற்கு அண்மைக்கால அகழாய்வுச் சான்றுகளும், தொல்பொருள் சான்றுகளும் உதவுகின்றன. புதிய கற்கால வாழ்விடங்களில் முறையான அகழாய்வுகள் மிகவும் குறைந்த இடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் புதிய கற்கால வாழ்விடங்களில் அகன்ற பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ளுதல் அவசியமாகிறது. அவ்வகையான அகழாய்வு முடிவுகளைக் கொண்டே, இந்தியாவில் பதிய கற்காலப் பண்பாட்டை துல்லியமாகக் கணக்கிடுதல் சாத்தியமாகும் என்பது அறிஞர் கருத்து.
சான்றெண் விளக்கம்
Ghosh.A, An Encyclopaedia of Indian Archaeology, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd. p. 58.
Ashok Vardan Shetty, Excavations at Mangudi, Department of Archaeology, Govt. of Tamilnadu, 2003.
Ramachandran.K.S, Archaeology of South India – Tamil Nadu Sundeep Prakashan Delhi, 1980, p 31
A.Gosh, op.cit., p48
Ibid., pp 52-57
K.S.Ramachandran, op.cit.,
K.V.Soundrarajan. Glimpses of Indian Culture History and Archaeology, Sundeep Prakashan. Delhi-1980.
ரா. பூங்குன்றன், அதியமான் – நள்ளி நாட்டில் ஆவும் ஆயரும், கிருஷ்ணகிரி மாவட்ட கருந்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, மே 2009.
A.Gosh, An Encyclopaedia of Indian Archaeology, Munshiram Manoharlal, Publishers, Pvt. Ltd. P 48.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...