கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 4
காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த பழைய கற்கால மனிதன் உணவு தேடுதலையே தனது தொழிலாகக் கொண்டான். உணவு தேடுதலே அவனது முதன்மை வேலையாக இருந்தது. கூட்டம் கூட்டமாக வாழ்ந்து தம் தேவைகளை நிறைவு செய்துகொண்டனர்.


நுண் கற்காலம்
கற்கால வரலாற்றிலேயே சிறிய சிறிய சில்லுகளைக் கொண்டு, மிகவும் நுண்ணிய கற்கருவிகளை மட்டும் தயாரித்துத் தங்களது வாழ்க்கைக்குப் பயன்படுத்தி வாழ்ந்த காலமான நுண் கற்காலம், கற்கால வரலாற்றில் ஓர் தனியிடம் பெற்று விளங்குகிறது என்பது குறித்து முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டது.
இடைநிலைக் கற்காலப் பண்பாடு என்ற சொல்லாட்சி
இப்பண்பாட்டை பற்றிக் குறிப்பிடும்பொழுது, இது கடை பழையகற்காலம் / நுண் கற்காலம் என்று குறிக்கப்படுவதைக் கண்டோம். இப்பண்பாடு, பழைய கற்காலப் பண்பாட்டுக்கும் புதிய கற்காலப் பண்பாட்டுக்கும் இடையில் காணப்பட்டதால், இது ‘இடைநிலைக் கற்காலம்’ அதாவது Mesolithic Period என்றும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படலாயிற்று. சில ஆசிரியர்களால் இப்பண்பாடு, “கடைநிலை அல்லது மேல்நிலை பழைய கற்கற்காலம் / இடைநிலைக் கற்காலம்” (Upper-Plaeolithic / Mesolithic Culture) என்றும் குறிக்கப்படுகிறது. இக்காலப் பண்பாட்டை நுண் கற்கருவிப் பண்பாடு (Microlithic Culture) என்று அழைப்பர்.
நுண் கற்கருவிகளின் வகைகள்
இப்பண்பாட்டுக்கு உரியதாக அறுப்பான் (Blade), துளைப்பான் (Borer) போன்ற கற்கருவிகளே அதிக அளவில் கிடைத்துள்ளன.

துளைப்பான்

அறுப்பான்

நுண்கற்காலக் கருவிகள்
தொழில்நுட்பம்
இக்காலக் கருவிகளின் அடிப்படியிலேயே, இக்காலப் பண்பாட்டின் தொழில்நுட்பமானது ‘அறுப்பான் மற்றும் துளைப்பான் தொழில்நுட்பம்’ ((Blade-Borer Technique) என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், கருக்கற்கருவிகளில் இருந்து பெயர்த்தெடுத்த சில்லுகளில் இரண்டாவது முறையாக அதன் மீது சிறிய அளவில் அழுத்த முறையில் (Pressure Technique) சில்லுகளை உடைத்து எடுத்து கற்கருவிகளாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
பரவல்
நுண்கற்காலப் பண்பாடு இந்தியா முழுவதும் பரந்து காணக்கிடைக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் தேரிருவேலி*1, மாங்குடி*2, பூதலூர், பிள்ளையார்பட்டி*3 போன்ற இடங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இவ்வகழ்வாய்வுகளின் பயனாக பலவகை நுண்கருவிகள் பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகின்றது*4. அகழாய்வுகள் மூலம் மட்டுமின்றி பல இடங்களில் மேற்பரப்பு ஆய்விலிருந்தும் நுண்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன*5. இவற்றின் அடிப்படையில் இக்காலத்தைக் காணும்பொழுது, நுண்கற்காலப் பண்பாடு தமிழகம் முழுவதும் காணப்படுவதையும், குறிப்பாக தென்தமிழகத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதையும் அறியமுடிகிறது.*6
உலக நிலையும் இந்திய நிலையும்
ஐரோப்பிய நாடுகளிலும் வட ஆப்பிரிக்காவிலும் கடைநிலைப் பழைய கற்காலத்தையே நுண் கற்காலமாகக் கருதியுள்ளனர். இந்தியாவில் சில பகுதிகளில் பொ.நூ. (கி.பி.) பத்தாம் நூற்றாண்டு வரை நுண் கற்கருவிப் பண்பாடு நிலவியிருந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளது என்பர்*7. தமிழகத்தில் நுண் கருவிப் பண்பாட்டு மக்கள் பெரும்பாலும் நிலப்பரப்புகளிலேயே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் தேரிப் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதைக் குறிப்பிடலாம்*8.
மேலும் சில ஆய்வு முடிவுகள்
தென்னிந்தியாவில், பழைய கற்காலத்தை ஆறு காலகட்டங்களாகப் பகுத்து, அதன் பரிணாம வளர்ச்சியை எச்.டி சங்காலியா விளக்கமளித்துள்ளார். அவற்றில் மூன்றாவது மற்றும் நான்காவது காலகட்டத்தில் நுண் கற்கருவிகள் காலம் அமைகிறது*9.
தமிழகத்தின் வடக்கே கொற்றலை ஆற்றுப்படுக்கையில் கிடைத்துள்ளதைப் போலவே, தெற்கே தேரி என்றழைக்கப்படும் செம்மண் குன்றுகளிலும் செம்மண் படிவங்களிலும் கிடைத்துள்ள நுண் கற்கருவிகளின் காலம் பொ.ஆ.மு.10,000 என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இவர்கள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் எச்.டி சங்காலியா அவர்கள் தெரிவிக்கின்றார். அப்பொழுது மேற்கொள்ளப்பட்ட நுண் கற்காலப் ஆய்வில், மனித எழும்புக்கூடுகள் ஏதும் தென்னிந்தியாவில் கிடைக்கவில்லை*10.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைச் சார்ந்துள்ள குண்டாறு பள்ளத்தாக்கில் இடைப் பழையகற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன*11. குடியம் பகுதியில் காணப்படும் மிகப் பழமையான மலைக்குகைகளில் வாழ்ந்த பழைய கற்கால மக்கள் வாழ்விடங்களை அகழாய்வு செய்த கே.டீ.பானர்ஜி அவர்கள், இறுதிக் காலகட்டத்தில் கிடைத்த நன்கு வளர்ச்சியடைந்த அசூலியன் (Post Acheulian) கற்கருவிகள்தான், நுண் கற்கருவிகள் காலத்தின் முன்னோடி என்று காட்டுகிறார். ஏனெனில், மண்ணடுக்குகளில் அசூலியனுக்குப் பின்னர் கிடைக்கக்கூடியவை நுண் கற்கருவிகளே ஆகும்*12. நுண் கற்கருவிகள் தென்தமிழகத்தின் பல பகுதிகளிலும் கம்பம் பள்ளத்தாக்குகளிலும் கண்டறியப்பட்டுள்ளது*13.
மாங்குடி, தேரிருவேலி, மாங்குளம், மயிலாடும்பாறை போன்ற இடங்களில் இயற்கை மண்ணடுக்கின் மேல் பகுதியில் நுண் கற்கருவிகள் கிடைத்துள்ளன. அகழாய்வுகளில் நுண் கற்கருவிகள் கால எலும்புகள் கிடைக்காமை குறித்து முன்னர் குறிப்பிடப்பட்டது. இந்தியாவில் வடகுஜராத் மாநிலத்தில் காணப்பட்ட மண்மேடுகளில் நுண் கற்கருவிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முதன் முதலில் நுண் கருவிக்கால மனித எலும்புகள் காணப்பட்டது*14.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் முள்ளிக்காடு போன்ற இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில இடங்களிலும் நுண் கற்கருவிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், நுண் கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து புதிய கற்காலப் பண்பாடும், அதனைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாடும் தொடர்வதை இங்கு தெளிவாகக் காணமுடிகிறது. இப்பகுதிகளில் நுண் கற்கால மக்கள் மலையடிவாரங்களில், திறந்தவெளிப் பகுதியிலும் வாழ்ந்துள்ளனர். இம்மக்கள் தங்களது வாழ்விடங்களுக்கு அருகாமையிலேயே இறந்தவர்களைப் புதைத்து இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்முதலில் கா14 (C14) முறையில் இதன்காலம் கணக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் நுண்கற்கால மக்கள் வாழ்ந்த காலம் பொ.ஆ.மு.8000 எனக் கணிக்கப்பட்டது*15. இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் (முன்னர் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம்) மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம், இப்பகுதியில் நுண் கற்கால மக்கள் பொ.ஆ.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது*16.
இலங்கைப் பகுதியில் அமைந்த செம்மண் படிவ தேரிநிலப் பரப்புகளில் காணப்படும் நுண் கற்காலப் பண்பாட்டின் ஆய்வுகள் சில வெளியிடப்பட்டுள்ளன. அறிவியல் முறைப்படி, இலங்கையில் பண்டாலா, கிதுல்காலா குகைப்பகுதி, பட்டொம்பலேனா (Bundala, Cave Dwelling of Kitulgala, Batadombalalena near Kuruwita) போன்ற இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில், இவ்விடங்களில் நுண் கற்கால மக்கள் பொ.ஆ.மு. 16000-12000 ஆண்டுகள் அளவில் வாழ்ந்ததையும், தொல்லுயிரிகள் வாழ்ந்த தடயங்களையும் அவை தெளிவுபடுத்தியுள்ளன*17.
நுண்கற்கால மக்கள் வாழ்க்கை முறை
தேரிப் பகுதிகளில் காணப்படும் நுண் கற்கருவிகளுடன் மட்கல ஓடுகளோ, புதிய கற்கால கைக்கோடாரிகளோ கிடைத்தில. இங்கு காணப்படும் நுண் கற்கருவிகள் அறுப்பான் மற்றும் மூலக்கற்கள் மட்டுமே. இங்கு சேகரிக்கப்பட்ட நுண் கற்கருவிகளின் அடிப்படையில், தேரிப் பகுதிகளில் நுண் கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்தமையைக் காட்டுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டும், இங்கு சேகரிக்கப்பட்ட நுண் கற்கருவிகளின் அடிப்படையிலும், இக்காலத்தில் மனிதனின் வனவிலங்குகளுடன் போராடிய காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வீட்டு விலங்குகளை மட்டும் வேட்டையாட முற்பட்டுள்ளான் என்பது தெளிவாகிறது. மேலும், காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்த மனிதன், ஆற்றங்கரையிலும், கடற்கரைப் பகுதிகளிலும் தங்க முற்பட்டான். அவ்வாறு அங்கு தங்க முற்பட்டவன் அங்கு மிகுதியாகக் காணப்பட்ட மீன்களையும், நீர் வாழ் உயினங்களையும் வேட்டையாடி உணவாக உட்கொண்டமை புலப்படுகிறது*18.
இவ்வாறு குறிஞ்சியும் முல்லையும் காணப்பட்ட பகுதியை விடுத்து, மருதமும் நெய்தலும் காணப்பட்ட பகுதிக்கு இக்கால மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்தக் கட்டத்தில்தான், பெரிய அளவிலான கற்கருவிகளை விடுத்து, தாம் வேட்டையாடும் வீட்டு விலங்குகளுக்கு ஏற்ப சிறிய அளவிலான கற்கருவிகளை / நுண் கற்களைப் பயன்படுத்தினர். பெரிய கற்கள் பயன்பாட்டில் இருந்து நீங்கியதால், பெரிய விலங்குகளை வேட்டையாடுவதில் இருந்தும் விலகியிருந்தனர். எனினும் வேட்டையாடும் வாழ்க்கை முறை தொடர்ந்தது.
சிறிய கருவிகள் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் எடுத்துச்சென்று பயன்படுத்த வசதியாக இருந்தாலும், நாளடைவில் உருவான தேவைகளின் அடிப்படையில் நுண் கற்கருவிகளின் பயன்பாடு பயனற்றதாகக் கருதினர். இதனால் இப்பண்பாட்டுக் காலம் விரைவில் மாற்றம் பெற்றது. நுண் கற்கால மக்கள் புதிய கற்காலப் பண்பாட்டை தோற்றுவிக்க முற்பட்டனர். தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நுண் கற்காலப் பண்பாடு வளர்ச்சியுற்றிருந்தது. அதுவும் குறிப்பாக, தேரிப் பகுதிகளில் மட்டுமே காணமுடிந்தது*19. நுண் கற்காலப் பண்பாட்டுக்குப் பிறகு உருவான புதிய கற்காலப் பண்பாடும், பெருங்கற்காலப் பண்பாடும் தமிழகத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
அகழாய்வுகள் காட்டும் பழைய கற்கால மக்களின் வாழ்க்கை முறை
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகள் வெளிப்படுத்தும் பழைய கற்கால மக்களின் வாழ்க்கை முறை என்பது மண்ணடுக்குகளின் தன்மை மற்றும் அவை வெளிப்படுத்தும் தொல்பொருட்களின் அடிப்படையில் அமையப்பெற்றதாகும். அத்திரம்பாக்கம் மற்றும் பரிக்குளம் போன்ற அகழாய்வுகளில் காணப்பட்ட மண்ணடுக்குகளில் கிடைக்கும் கற்கருவிகளே முதல், இடை மற்றும் கடை கற்கால மக்கள் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன என்பதையும், கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு (சாந்திபப்பு 15,00,000 வருடங்கள்) முன்பிருந்தே வாழ்ந்துள்ளனர் என்பதை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் கண்டோம்.
முதல் மற்றும் இடைக் கற்காலத்தைச் சார்ந்த அசூலியன் வகை கற்கருவிகள் செம்மண் கலந்த களிமண்ணில் இருந்து சேகரிக்கப்பட்டதால், இப்பகுதி சதுப்பு நிலமாக இருந்திருக்க வேண்டும். பொதுவாக, இக்கால மக்கள் களிமண் நிறைந்த சதுப்பு நிலப்பகுதி மற்றும் உப்பு நீர் நீறைந்த குளங்கள் ஆகியவற்றை விட்டு விலகியே வாழ்ந்துள்ளனர். இதுபோன்ற நீர் நிலைகளில் அகப்பட்டுக்கொள்ளும் விலங்கினங்களை உட்கொள்ள வரும் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட மட்டும் பழைய கற்கால மக்கள் வந்துள்ளனர் என்பதை இங்கு கிடைத்துவரும் கற்கருவிகள் உறுதிப்படுத்துகின்றன.
மாற்றத்துக்கு உட்பட்ட தட்பவெட்ப நிலையினால், செந்நிற சரளைக்கல் (Laterite gravels) படிவின் கீழ் களிமண்ணும் செம்மண்ணும் காணப்படுவதைக் கொண்டு, இப்பகுதியில் இடை பிளைஸ்டோசீன் (Middle Pleistocene) காலத்தில் நிறைய சிற்றோடைகள் வழிந்தோடியுள்ளன எனக் கூற முடிகிறது*20. அத்திரம்பாக்கம் அகழாய்வில் நீர் எருமை, குதிரை மற்றும் கொம்புகளற்ற மான் போற்றவற்றின் பற்கள் தொல்லுயிர் படிவங்களாகக் (Fossils) கிடைத்திருப்பது மிகவும் அரிதானதாகும்*21. இது, குதிரை மிகப்பழைய காலத்தில் இருந்தே இங்கு வாழ்ந்திருந்த விலங்கினங்களில் ஒன்று என்பதை இது சிறப்பாய் உணர்த்துகிறது.
பழைய கற்கால மக்கள் முதன் முதலில் இயற்கையாகக் கிடைக்கும் கூழாங்கற்களையே பயன்படுத்தியிருக்க வேண்டும், பின்னர் கூழாங்கற்களின் பயன்பாடு குறைந்த அளவே காணப்பட்டதால், அக்கூழாங்கற்களை உடைத்து அதாவது சில சில்லுகளை ஆழமாகப் பெயர்த்துப் பயன்படுத்தும் வளர்ச்சி பெற்றுவிட்ட வாழ்க்கை முறையை அடையாளப்படுத்துகிறது. இக்கற்கருவிகளின் கரடுமுரடான குணம் போலவே இக்கால மக்களின் மனநிலையும் கரடுமுரடானதாக இருந்துள்ளது. இதுபோன்ற கற்கருவிகள் எவரும் எளிதில் செய்து பயன்படுத்தும் வகையில் அமைந்தவை. இருப்பினும், இவை எளிதில் கையாள முடிவதில்லை என்பதையும், நெடுந்தொலைவு எடுத்துச்செல்ல கடினமாக இருந்ததையும், அதிக அளவில் எடுத்துச்செல்ல இயலாததையும் உணர்ந்த நிலையை அடைந்ததையும் அறியமுடிகிறது. இதற்கு அடுத்த காலககட்டம்தான் இடைநிலைப் பழைய கற்காலம். இக்கால மக்கள் கற்கருவிகளை செய்வதற்கென்றே கூழாங்கற்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் சில்லுகளைப் பெயர்க்கும்பொழுது மிகவும் கவனமாக, மேலோட்டமான அளவில் கூழாங்கற்களில் இருந்து பெயர்த்து எடுத்துப் பயன்படுத்தினர்.
இடைப்பழைய கற்கால மக்கள் தயாரித்த கைக்கோடாரிகள் தங்களின் கைகளை உறுத்தாவண்ணமும், மிகவும் நேர்த்தியாகவும் சிறிய அளவினதாகவும், எளிதில் எடுத்துச்சென்று பயன்படுத்துவது போன்றும் வடிவமைத்துள்ளனர். இதுபோன்ற கற்களை பயன்படுத்தும்பொழுது எளிமையாகவும் அதே சமயத்தில் நெடுந்தொலைவில் வரும் விலங்குகளையும் வேகமாக வேட்டையாடுவதற்குப் பயன்பட்டதையும் அறிந்துகொண்டனர். மேலும் எடை குறைவான கூர்மையான இக்கற்கருவிகளை கொண்டு வேட்டையாடுவதற்கு மட்டுமின்றி மரப்பட்டைகளை உரிக்கவும், கிழங்குகளைத் தோண்டவும் பயன்படுத்தினர்.
பழைய கற்கால மக்களின் பொருளாதார நிலை
இதுபோன்ற நேர்த்தியான கற்கருவிகளை அனைவராலும் செய்வதென்பது இயலாத ஒன்று. எனவே ஒரு குழுவினர் கற்கருவிகளை மட்டும் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருக்க வேண்டும். வேட்டைக்குச் செல்லும் மக்கள் இவர்களிடம் கற்கருவிகளைப் பெற்றுக்கொண்டு, அதற்காக தாங்கள் வேடையாடிவரும் விலங்குகளின் ஊனை வழங்கியிருக்க வேண்டும். ஏனெனில், ஒரே மாதிரியான கைக்கோடாரிகள் ஒரே இடத்தில் காணப்படுவதைக் கொண்டு இதனை ஊகிக்க முடிகிறது.
இவ்வாறு முதன்முதல் தோன்றிய பண்டமாற்று வணிகத்தை இடைப் பழைய கற்கால மனிதர்கள்தான் தோற்றுவித்திருக்க வேண்டும். இதனை மெய்ப்பிப்பதுபோல, பரிக்குளம் அகழாய்வில் கூழாங்கற்கள், அவற்றிலிருந்து பெயர்த்தெடுத்த சில்லுகள் (Flakes), முழுமையாகச் செய்த கைக்கோடாரிகள், முழுமை பெறாத உடைந்த கற்துண்டுகள் அனைத்தும் அதிக அளவில் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. இதன்மூலம், பரிக்குளத்தில் சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சூலியன் வகைக் கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடம் ஒன்று செயல்பட்டிருந்ததை உறுதியாக அறியமுடிகிறது. இதன்மூலம், இடைப் பழங்கால மக்கள் தங்கள் வாழ்கை முறையை எவ்வாறு அமைத்துக்கொண்டிருந்தனர் என்பதை அகழாய்வுகள் மூலம் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு அறிய வழி ஏற்படுகிறது.
கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏராளமான கற்கருவிகள் காணக்கிடைப்பதால், இவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருத இடமுள்ளது. வேட்டையாடிய பின்னர், தம் தேவைகள் நிறைவு பெற்றவுடன், கற்கருவிகளை இங்கேயே விட்டுச் சென்றிருக்க வேண்டும். இவர்கள் கருக்கற்களில் இருந்து பெயர்த்தெடுத்த சில்லுகளையும் பயன்படுத்தும் அறிவையும் பெற்றிருந்தனர் என்பது அவர்கள் பயன்படுத்திய சுரண்டிகளும், கத்திகளும், அறுப்பான்களும் நமக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
காய்கனிகளையும், இலைதழைகளையும், கிழங்குகளை உட்கொண்டிருந்த மனிதன் ஒற்றுமையாக வாழ்கிறான். வேட்டைக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடி அதன்மூலம் கிடைத்த ஊனை உட்கொள்ளத் தொடங்கியதும், அவனது பழக்க வழக்கங்களில் சிறிது சிறிதாக மாற்றம் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஊனை உண்ட மனிதன் மீண்டும் மீண்டும் ஊனையே தேட ஆரம்பிக்கின்றான். இந்தச் சமயத்தில்தான் பழைய கற்கால மனிதன் உழைப்பின் பயனை அறிகிறான். அதனால் உழைப்பின் வேகம் அதிகரிக்கின்றது. இந்தக் காலகட்டத்தில்தான், பழைய கற்கால மனிதன் சிந்திக்கத் தூண்டப்படுகிறான். இவனது மூளை, வளர்ச்சி நிலையை எட்டுகிறது. இவையெல்லாம் இயற்கையின் விளைவே அன்றி வேறல்ல. இயற்கையின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து பழைய கற்கால மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள காடுமேடுகளில் வேட்டையாடித் தன் தேவைகளை முடித்துக்கொள்கிறான். பழைய கற்கால மனிதன் தன் தேவைகளைத் தாமே நிறைவு செய்துகொள்ளும் செயலே அவனின் பொருளாதார வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. இவ்வாறு பழைய கற்கால மனிதன் தங்களது பொருளாதார வாழ்வில் பெரும் முன்னேற்றம் கண்டதைக் கொற்றலையாற்றுப் படுக்கையில் ஆரம்பித்த பழைய கற்கால மனிதர்களின் வாழ்க்கைச் சுவடுகளைத் தமிழகமெங்கும் பல இடங்களில் ஆற்றுப் படுக்கைகளின் ஓரங்களில் பரவலாகக் கண்டறிந்துள்ளதையே சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த பழைய கற்கால மனிதன் உணவு தேடுதலையே தனது தொழிலாகக் கொண்டான். உணவு தேடுதலே அவனது முதன்மை வேலையாக இருந்தது. கூட்டம் கூட்டமாக வாழ்ந்து தம் தேவைகளை நிறைவு செய்துகொண்டனர்.
கீழ்நிலைப் பழைய கற்கால மனிதன் நெருப்பின் பயனை அறிந்திருக்கவில்லை. ஆனால், கற்களை உடைக்கும்பொழுதும், பிற இயற்கை நிகழ்வுகள் கொண்டும் அவன் நெருப்பை அறிந்திருக்கக்கூடும். ஆனால், தெளிவான தொல்லியல் சான்று நமக்குப் புதிய கற்காலத்தில்தான் கிடைக்கிறது. இக்காலத்தில் மரப்பட்டைகளையும், இலை தழைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்தான்.
இயற்கையான மலைக்குகைகளிலும், ஆற்றுச் சமவெளிப் பகுதிகளிலும் தங்களது வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்துள்ளனர். குடியம் இயற்கையான குகைப்பகுதி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். குழுக்கூட்டமாக வாழ்ந்த இவர்கள் வேட்டைக்குச் செல்லும் இடத்திலேயே தங்கிவிடுவதும் உண்டு. இறந்தவர்களை அப்படியே விட்டுவிட்டும் சென்றனர். ஆற்றின் போக்கை அடையாளம் கண்டு, அதன் வழியே தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து, இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருந்தனர். இவ்வாறு ஆற்றின் போக்கிலேயே வேறு இடங்களுக்குச் சென்றதை பாலாற்றில் இருந்து ஆரணியாறு மற்றும் அவை செல்லும் இடங்களான அரக்கோணம், ஆர்க்காடு, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் பழைய கற்கால மனிதனின் சான்றுகள் காணக் கிடைக்கின்றன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் சென்றவர்கள் ஆங்காங்கே தங்கி வேறு ஒரு குழுக்கூட்டமாக அமைந்து தம்மை விரிவாக்கம் செய்துள்ளனர் என்பதையும் இதன்மூலம் அறியமுடிகிறது.
பழைய கற்கால மக்களின் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
பழைய கற்கால தேடுதல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள். உணவைத் தேடினர். நீரைத் தேடினர். இவற்கள் கற்களைக் கருவிகளாகப் பயன்படுத்தத் தெரிந்தவுடன், உணவுத் தேடுதல் வேட்டையாக மாறியது. விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டனர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தபோது இவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யவில்லை. தமிழகத்தில் பழைய கற்கால் மக்கள் கொற்றலை ஆறு மற்றும் ஆரணியாற்றுப் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்தார்கள் என்பதற்கு உறுதியான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளமை பற்றியும், இப்பகுதிகளில் மட்டும் 107 இடங்களில் பழைய கற்கால மனிதன் பயன்படுத்தியுள்ளது குறித்தும் முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், பழைய கற்கால மனிதர்களைப் பற்றி பல வரலாற்று உண்மைகள் வெளிக்கொரணப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்களது சமய நிலை பற்றியோ, மேற்கொண்டிருந்த சடங்குகள் பற்றியோ தெளிவாக அறிந்துகொள்ள சன்றுகள் கிடைக்கவில்லை.
சான்றெண் விளக்கம்
Ashokvardanshetty, (Ed), Excavations at Mangudi, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai-113, (2003).
Sitaram Gurumurthy, (Ed), Mangulam Excavation, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai-8, (2008)
வீ. செல்வகுமார், தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் அகழாய்வு - பிள்ளையார்பட்டி, ஆவணம் இதழ்.
Shanthi pappu, Palaeolithic site at Attirampakkam, Thiruvallur Dist, Avanam -13, 2002.
Shanthi pappu, The Palaeolithic archaeology of the Kortallayar river basin, Tamil Nadu, Kalvettu Idal, No.58. Dept. Of Archaeology, Chennai.
துளசிராமன்.து, தமிழ தொல்பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை, (2005).
H.D.Sankalia, Beginning of Civilization in South India, Science Today, April, 1968. pp.30-31
A.Gosh, op.cit. pp.39
H.D.Sankalia, op.cit.,
H.D.Sankalia, Stone Age Tools,Their TechniquesNames and Probable Functions, Deccon College, Poona,1964, pp38-39.
செல்வக்குமார் வீ. குண்டாறு பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு, (1997), ஆவணம், இதழ் 8, ப.138
Indian Archaeology A Review 1962-63, 1963-64.
Vidula Jayaswal, Palaeo History of India, Agam kal prakasam Delhi, 1978.
H.D. Sankalia & Karve, Early primitive microlithic culture and People of Gujarat, Deccon college post Graduate and research, Poona, India.
Ghosh.A, An Encyclopaedia of Indian Archaeology, Munshiram Manoharlal publishers pvt.Ltd., p.43
Rajan.K, Excavations report on mayiladumparai, 2004.
S.U. Deraniyagala, Mesolithic stone tool technology at 28,000B.C.In Sri Lanka.
K.S. Ramachandran, Archaeology of South India, Tamilnadu, Sundeep Prakhasam,1980, p.30
A.Ghosh, op.cit., p.39.
T.S.Sridhar, (Ed), Archaeological Excavations of Tamil Nadu Vol-I Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai-8, (2011), pp 99-144.
Shanthi pappu, Palaeolithic site at Attirampakkam, Thiruvallur Dist, Avanam-13, 2002.
***
நன்றி நவிலல்
இராபர்ட் புரூஸ் புட் FGS

இந்தியத் தொல்பழங்காலத்தின் தந்தை என வரலாற்று ஆர்வலர்களும், தொல்லியல் வல்லுநர்களும் அன்புடன் அழைத்த இராபர்ட் புரூஸ் புட் FGS அவர்கள், 1834-ம் ஆண்டு செல்டன்ஹாம் (Cheltenhn) என்ற இடத்தில் பிறந்தார். இவர் தம் இளம் வயதில் பொ.ஆ.1858-ல், இந்திய மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில் (Geological Survey of India) நில அளவையாளரகப் பணியில் சேர்ந்தார். பொ.ஆ. 1891-ம் ஆண்டு முதுநிலைக் கண்காணிப்பாளராகவும் பின்னர் துணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இராபர்ட் புரூஸ் புட் அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் சில ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். அதுசமயம், ஏற்காடு மலைப்பகுதி இவரை வெகுவாகக் கவர்ந்ததால் அங்கேயே பல ஆண்டுகாலம் குடும்பத்துடன் தங்கி வாழ்ந்துள்ளார்.
இவர் தமிழகத்தில் முதன்முதலாக சென்னைக்கு அருகே பல்லாவரத்தில்தான் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தார். வடஇந்தியாவில் சோகன் பள்ளத்தாக்கில் காணப்பட்ட கல்லாயுதங்களுடன் இவற்றை ஒப்பிட இதனை தனிவகை சென்னை கைக்கோடாரி மரபைச் சார்ந்தது (Madras Stone Industries) என்று வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கு எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கில் ஆய்வு மேற்கொண்ட இவர் பூண்டி அருகே அத்திரம்பாக்கம், வடமதுரை, குடியம், பரிக்குளம் போன்ற பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடாரிகள் காணப்படுவதை முதன்முதலில் வரலாற்று உலகுக்குத் தெரியப்படுத்தினார்.
இராபர்ட் புரூஸ் புட் தம் அயராத உழைப்பில் தென்னிந்தியத் தீபகற்பப் பகுதியில் கண்டுபிடித்த 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும் (Palaeolithic sites), 252 இடங்கள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவைகளாகும். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தேரிப் பகுதிகளில் நுண் கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்து அப்பகுதிகளில் நுண் கற்காலத் தொழிற்சாலை இருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
பழைய கற்கால, புதிய கற்காலக் கருவிகளை அதன் வடிவமைப்பு மற்றும் தொழில் முறையைக் கொண்டும் அவற்றை வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென்னிந்தியாவில் பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து அதற்கான காரணத்தையும் அறியும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட அவரது ஆய்வு சிறப்புவாய்ந்ததாகும்.
இவர், சேலம் மாவட்டத்தில் பொ.ஆ. 1889-ல் சேர்வராயன் மலைப்பகுதி முழுவதும் ஆய்வு செய்துள்ளார். சேலம் மாவட்டம் மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். எனவேதான், சைலம் நிறைந்த பகுதியானதால்தான் இப்பகுதி சேலம் என்று பெயரிட்டு அழைத்தனர்போலும். சேலத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஏற்காடு. அப்பகுதி ஓர் இயற்கை எழில் கொஞ்சும் வாசஸ்தலமாக திகழ்ந்து வருகின்ற பகுதியாகும். ஆங்கிலேயர்கள் பலரும் விரும்பி வந்து தங்கியுள்ளனர். அதுபோலவே இராபர்ட் புரூஸ் புட் அவர்களும் இங்கு தங்கி மலைக்கிராமங்களை ஆய்வு செய்தார். ஆய்வில் பல கிராமங்களில் புதிய கற்காலக் கல்லாயுதங்கள் காணப்படுவதைக் கண்டறிந்துள்ளார்.
மேலும், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி, பர்கூர், கப்பல்வாடி போன்ற பகுதிகளிலும், தருமபுரி மாவட்டம் வத்தல்மலைப் பகுதிகளிலும் புதிய கற்காலக் கருவிகள் காணப்படுவதைக் கண்டறிந்தார். தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பல இவரது குறிப்பினை முன்னோடியாகக் கொண்டு அமைத்து அப்பகுதிகளின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்கிறது.
இப்பெருமகனாரின் மனைவி எலிஸா மெலிஸ் பூட் அவர்கள் பொ.ஆ. 1910 ஜூலைத் திங்கள் 14-ம் தேதி ஏற்காட்டில் காலமானார். அவரை ஏற்காடு தூய டிரினிட்டி ஆலயத்தின் இடது பக்கத்தில் முன்னர், இத்தம்பதியருக்குப் பிறந்த எலிஸா மெலிஸா வெல் அவர்களை பொ.ஆ. 1876-ல் அடக்கம் செய்த இடத்துக்கு அருகிலேயே அடக்கம் செய்துள்ளார்.
பின்னர், இராபர்ட் புரூஸ் புட் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதியாக கொல்கத்தாவில் இருந்தபொழுது இதயச் செயலிழப்பால் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு முன் தன் மனைவின் கல்லறைக்கு அருகிலேயே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கிணங்க, கொல்கத்தாவில் பொ.ஆ. 1912 டிசம்பர், 29-ம் தேதி இறந்த அவரது அஸ்தி ஏற்காடு கொண்டுவரப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி அவரது துணைவியாரின் கல்லறைக்கு அருகில் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை எழுப்பப்பட்டுள்ளது.
கல்லறையும் கல்லறை வாசகமும்

ROBERT BRUCE FOOTE F G S F M U
LATE SUPERINTENDENT, GEOLOGICAL SURVEY OF INDIA
BORN: CHELTENHAM - 22nd SEPTEMBER 1834
DIED: CALCUTTA - 29th DECEMBER 1912
I HAVE FOUGHT A GOOD FIGHT
I HAVE FINISHED MY COURSE
I HAVE KEPT THE FAITH
அருகில் உள்ள அவரது மனைவியாரின் கல்லறையும் வாசகமும்

In Fond Memory of
ELIZA MELISSA FOOTE
THE BELOVED WIFE OF ROBERT BRUCE FOOTE
LATE OF THE GEOLOGICAL SURVEY OF INDIA
BORN 5th NOVEMBER 1841 - DIED 13th JULY 1910.
***
ஏற்காட்டில் உள்ள டிரினிட்டி தேவாலாயத்தில் திருமணப் பதிவேடு மற்றும் கல்லறைப் பதிவேடு ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்பதிவேட்டினை ஆய்வு செய்தபொழுது, இராபர்ட் புரூஸ் புட் அவர்களது இறப்பும் அவர்களது துணைவியார் இறப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது அறியப்பட்டது.

***
இந்தியாவின் தொல்லியல் அறிஞர் பெருமகானார் அவர்கள் தமிழகத்தை நேசித்தவர். அவரது சீரிய கண்டுபிடிப்புகளே தமிழகத்தின் தொன்மை வரலாற்றை இந்த அளவு சிறப்படைய வைத்துள்ளது. இவரது கண்டுபிடிப்பினால்தான், ஆதிமனிதன் முதன்முதலாக இப்பகுதியில் வாழ்ந்துள்ளான் என்ற செய்தியே வெளியானது. இப்பெருமகனாரைப் போற்றி, அவர் அறியச் செய்த தமிழ் மண்ணின் பெருமையை உணருவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...