/

புதிய கற்காலம் – 4

மோதூரில் கிடைத்த தொல்பொருட்கள் இங்கு புதிய கற்கால மக்கள் குழுக்கூட்டமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தமையைக் காட்டுகின்றன.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:15 am

ச. செல்வராஜ்

தென்னிந்தியாவில் புதிய கற்கால மனிதர்களின் வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், தருமபுரி மாவட்டம் மோதூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, பலவகையில் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு போடப்பட்ட 15 அகழாய்வுக் குழிகளில் இருந்து 500 மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வேறு எவ்விடத்தையும்விட தொன்மையான, எண்ணிக்கை மிகுதியான தொல்பொருட்கள், இவ்வகழ்வாய்வில்தான் சேகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அனைத்தும் மண்ணடுக்குகளில் இருந்தே சேகரிக்கப்பட்டன என்பது, வேறு இடங்களுக்கு கிடைக்காத சிறப்பு ஆகும்.

மோதூர் அகழாய்வின் கண்டுபிடிப்புகளின் சிறப்பு காரணமாக, இங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, அவற்றின் மீதான தேசியக் கருந்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதே காலகட்டத்தில், துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆண்டிபட்டி அகழாய்வு நடத்தப்பட்டிருந்தது. துறையின் சிறப்பு ஆணையாளர், முனைவர். டி.எஸ். ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் “மோதூர் - ஆண்டிபட்டி அகழாய்வு கண்டுபிடிப்புகள்” தலைப்பில் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கத்தில் 22.06.2005-ல் நடத்தியது. இக்கருத்தரங்கில், தென்னிந்தியாவின் மாநிலங்களில் இருந்து புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் ஏ.சுந்தரா, பி,நரசிம்மய்யா, டி. சத்தியமூர்த்தி, ஆர். சம்பகலக்ஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். அரங்கில், மோதூர் அகழாய்வாளர் ச.செல்வராஜ் அவர்களின் ‘significance of Excavation at Modur’ கட்டுரையும் வாசிக்கப்பட்டது.

முந்தைய அத்தியாயத்தில், மோதூரில் கிடைக்கப்பெற்ற தாய்தெய்வ சுடுமண் உருவங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த அத்தியாயத்தில், இங்கு கிடைக்கப்பெற்ற பிற வகை தொல்பொருட்களும் அதன் சிறப்புகள் குறித்தும் விளக்கப்படுகின்றன.

மோதூர் அகழாய்வில் காண்டறியப்பட்ட தொல்பொருட்களும் சிறப்புகளும்

மோதூர் புதிய கற்காலத் தடயங்களாக அகழாய்வில் கிடைத்த பிற தொல்பொருட்களையும், கற்கருவிகள் குறித்தும் விரிவாக அறிதல் அவசியமாகிறது. ஏனெனில், இங்கு காணப்பட்ட தொல்பொருட்கள் இதுவரை பிற அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்படாத தொல்பொருட்கள் ஆகும். மோதூரில் கிடைத்த தொல்பொருட்கள் இங்கு புதிய கற்கால மக்கள் குழுக்கூட்டமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தமையைக் காட்டுகின்றன. அவ்வகைக் கருவிகள் பற்றியும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.

கல் வட்டுகள் (Hop Scotches or Stone Hip Hops)

Story image
Story image

சுடுமண் வட்டுகள், உடைந்த மட்கலன்களிலிருந்து வட்டமாகத் தேய்த்து, அதனை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்துவதாகும். இதுபோன்ற சுடுமண் வட்டுகள், தமிழக அகழாய்வுகளில் பொரும்பான்மையான பகுதிகளில் கிடைத்துள்ளன. ஆனால் மோதூர் அகழாய்வில்தான் முதன்முதலாக கல்லால் ஆன கல்வட்டுக்கள் பல கிடைத்துள்ளன.*1

Story image

இவை புதிய கற்காலக் கல் ஆயுதங்களோடு இணைந்து கிடைத்துள்ளதால், இவற்றை புதிய கற்காலத்தின் எச்சமாகவே கருதலாம். இக்காலக்கட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஏனெனில், தமிழகத்தில் நடைபெற்ற பெருங் கற்கால அகழாய்வுகளில் சுடுமண் வட்டுகளே கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தைச் சார்ந்த அகழாய்வில், கல்வட்டுகள் முதன் முறையாகக் கிடைப்பது, குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதாவது, பழைய கற்காலத்தை அடுத்து வளர்ச்சி அடைந்த புதிய கற்காலத்தில் மட்கலன்களின் அறிமுகம் குறைந்த அளவே உள்ளதாகத் தோன்றுகிறது. இதன் காரணமாக, இங்கு பழமை வாய்ந்த கல்வட்டுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன எனலாம். பின்னர் வரும் பெருங் கற்காலப் பண்பாட்டில், சுடுமண் வட்டுகளே நிறைந்து வெளிப்படுவதும் இதனை உறுதிப்படுத்துகிறது.

பள்ளம் பதித்த கல் சுத்தி (Grooved Stone Hammer)

Story image

இவ்வகைக் கருவிகள் பட்டிகளிலும், கால்நடைகளின் கால்களிலும் கட்டப்பட்டு, அவை எங்கும் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்காகப் பயன்படுத்துவதாகும். இங்கு வாழ்ந்த புதிய கற்கால மக்கள், கால்நடைகளை வளர்த்தனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.*2

Story image

வட்ட, முட்டை வடிவ கல் தட்டுகள் (Round, Oval Discoid)

புதிய கற்கால மனிதன் நிலையான இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். அவன், தங்களது தங்கும் இடங்களில் அமைத்த குடிசைகளின் நுழைவுப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் அமைத்த மரக்குச்சிகளின் அடிப்பகுதிகள், காலப்போக்கில் மண் அரிக்காமல் பாதுகாக்க இதுபோன்ற கல் தட்டுகளைப் பயன்படுத்தியுள்ளதை இவ்வகழ்வாய்வு உணர்த்துகிறது.

Story image

திருகைக்கல், அரைப்பன், குழவி (Grinder, pestle)

கடினமான தானியங்களையும் கொட்டைகளையும் நேரடியாக உட்கொள்ள முடியாது என்பதால், திருகைகள், அரைப்பான், குழவி முதலான கற்கருவிகளைக் கொண்டு அவற்றை அரைத்துப் பொடியாக மாற்றி மாவுப் பொருளாக உட்கொள்ள பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.*3

Story image

இது புதிய கற்கால மனிதன், கொட்டைகளைப் பிரித்து எடுக்கவும் இவ்வகைக் கற்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான். எனவேதான் இவை போன்ற தொல்பொருட்கள் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்து வருகின்றன என்பதுடன், இக்கால மனிதன் பயிர்களைத் தேர்ந்து விளைவித்து, தானியங்களையும் அரைத்து உண்டுள்ளான் என்பதையும் புலப்படுத்துகின்றன.

கூர் தீட்டும் கற்கருவிகள் (Sharpening Stone Tools)

Story image

இவை கல்லாயுதங்களையும், கற்கருவிகளையும் கூர் தீட்டப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.*4 இங்கு கிடைக்கப்பெற்ற செவ்வக வடிவிலான கருவிகளில், கூர் படுத்தும் பகுதி பள்ளமாக அமைந்துள்ளது இதன் பயன்பாட்டை நன்கு விளக்கவல்லதாக உள்ளது.

கற்குண்டுகள் (Spheroid Rubber)

உருண்டையான அல்லது முட்டை வடிவக் கற்குண்டுகள், மேற்கண்ட கற்கருவிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகக் கிடைத்துள்ளன.

Story image
Story image

மோதூரில் இவ்வகைக் கற்குண்டுகள், மேற்பரப்பு அகழாய்விலும் மண்ணடுக்கிலும் கிடைத்துள்ளன. இவை, கவன்கல் போன்றவை. இவற்றை காய்கனிகளைப் பறிக்கவும், ஒலி எழுப்பவும் பயன்படுத்தியிருத்தல் கூடும்.

குடிசைகளின் தரைப்பகுதியை தேய்த்து வழவழப்பாக ஆக்க, முட்டை வடிவிலான (Oval Discoids) தட்டைக் கற்களையும் பயன்படுத்தியுள்ளான்.

இங்கு வாழ்ந்த புதிய கற்கால மனிதன், இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட கருவிகளைத் தேவைக்குச் செய்யும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுத் திகழ்ந்துள்ளான். இக்கருவிகள் புதிய கற்கால மனிதனால் பயன்படுத்தப்பட்டவை என்பது அகழாய்வு மூலம் தெளிவுபட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அன்றாட உபயோகத்துக்குத் தேவையான பலவகைக் கற்கருவிகளைத் தாமே உற்பத்தி செய்து பயன்படுத்தியதோடு, உலகுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளான்.

கல் குண்டுமணிகள்

மோதூர் அகழாய்வில் கிடைத்த மற்றுமொரு தொல்பொருள், கல்லால் ஆன குண்டுமணியாகும். இது, உருண்டையாக மணிகள் எவ்வாறு செய்யப்பட்டிருக்குமோ அதேபோல் காணப்படும். ஆனால் இதன் பயன்பாடு மட்டும் வேறு. புதிய கற்கால மக்கள், மேய்த்தல் தொழிலையும் விவசாயத்தையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வினை வாழத் துவங்கியதும், கால்நடைகளின் மீது அதாவது ஆடு, மாடு போன்றவற்றின் மீது தனிக்கவனம் செலுத்தினர். அதன் வெளிப்பாடாக நமக்குக் கிடைத்துள்ளவைதான் இந்தக் கல் குண்டுமணி. இதனை ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் கழுத்தில் அடையாளமாகக் கட்டித் தொங்கவிடுவர். புதிய கற்காலத்திலேயே இப்பயன்பாடு இருந்தமைக்குச் சான்றாக, இந்தத் துளையிடப்பட்ட கல்மணி, மோதூர் அகழாய்வில் மண்ணடுக்கிலேயே கண்டு எடுக்கப்பட்டது. இவ்வாறு மண்ணடுக்கிலேயே கண்டெடுப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதனுடன், சில சுடுமண் பொருட்களும் கிடைத்துள்ளன. இவற்றில் இருந்து, சுடுமண் வளையங்களையும் இவ்வாறு கால்நடைகளின் கழுத்தில் கட்டியமையை அறிந்துகொள்ள முடிகிறது.

Story image

(கல் குண்டுமணி)

சுடுமண் வளையமும் சுடுமண் தேய்ப்பானும்

இவ்வகைத் தேய்ப்பான்கள். மண்தரையை தேய்த்துச் சமன் செய்யவும், தாரைத்தளத்துக்கு சாந்து பூசவும் பயன்படுத்தப்பட்டவை. தருமபுரி மாவட்டத்தில், இன்றளவும் கிராம மக்கள் வீடுகளுக்குத் தரைத்தளம் போட நெல் அறுவடை முடிந்த பிறகு நெற்கதிர்களை அடித்துப் பிரித்த பிறகு மீதமுள்ள செடிப்பகுதிகளை எரித்து அதன் சாம்பலை தரைத்தளத்துக்கும், சுவற்றின் வெளிப்புறத்துக்கும் பூசுவர். அதனைச் சீராகப் பரவச்செய்ய, இதுபோன்ற சுடுமண்ணால் செய்த கடினமான தேய்ப்பான்களைப் பயன்படுத்துகின்றனர். சிலர் கற்களைக் கொண்டு தேய்த்துச் சமன் செய்வர். இவை புதிய கற்கால மக்களின் பழக்கவழக்கத்தின் எச்சமாகவே கருதலாம்.

புகைப்படத்தில் இடம்பெற்ற சுடுமண் வளையங்கள், மேலே குறிக்கப்பட்டதுபோல் கால்நடைகளின் கழுத்தில் கட்டப் பயன்படுத்தப்படுவதாகும்.

Story image

(சுடுமண் வளையமும் சுடுமண் தேய்ப்பானும்)

புதிய கற்கால மட்கலன்கள் (Neolithic Pottery)

தமிழகத்தில் முதன்முதலாக மட்கலன்களைத் தயாரித்துப் பயன்படுத்தத் துவங்கியவர்கள் புதிய கற்கால மக்களே. மோதூர் அகழாய்வில் சொரசொரப்பான சிவப்பு மட்கலன் (Coarse Red Ware), மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்த மட்கலன் (Tan Ware), கையால் வனைந்த மட்கலன் (Hand Made Pot) போன்ற வகைகள் கிடைத்துள்ளன. பி.நரசிம்மய்யா அவர்கள் தொகரப்பள்ளி, முள்ளிக்காடு, தையல்மலை போன்ற இடங்களில் சேகரித்த மட்கலன்களோடு ஒப்பிடும்பொழுது, இவை அனைத்தும் புதிய கற்கால மக்கள் செய்து பயன்படுத்திய மட்கலன்களே என்று கூறமுடிகிறது.*5

மேலும், மோதூர் அகழாய்வில் இம்மட்கலன்களுடன் சாம்பல் நிற மட்கலன்களும் (Painted Grey wares) வண்ணம் தீட்டிய மட்கலன்களும் கிடைத்துள்ளன. இவையும், பெருங் கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்டவை என்பதை மண்ணடுக்குகளும் தெளிவுபடுத்துகின்றன. சாம்பல் நிற மட்கலன்கள் தட்டு வடிவில் கிடைத்துள்ளன. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த மட்கலன்கள் அளவில் பெரியனவாகவும், தடித்தும், விளிம்புகள் தடித்தும், கையால் வனையப்பட்ட நிலையிலும் கிடைத்துள்ளன. இம்மட்கல ஓடுகள், புதிய கற்கால மக்களின் வாழ்விடத்தை ஒட்டிய மண்ணடுக்கில் கிடைத்தவையே.

Story image
Story image
Story image

(ஆரஞ்சு நிற மட்கலன் – கையால் வனையப்பட்டவை)

Story image

(வண்ணம் தீட்டிய சாம்பல் நிற மட்கலன்)

புதிய கற்கால வாழ்வியல்

புதிய கற்காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த மனிதன், நிலையான இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான் என்பது முன்னர் விளக்கப்பட்டது. இப்பண்பாட்டுக்கு முன்னர், உணவைத் தேடி திரிந்தான். உறவுகளைப் பொருட்டாக கருத அறிவு ஆணையிடாத நிலையிலும் இருந்தான். இவற்றில் அதிரடி மாற்றம் பெற்றான் புதிய கற்கால மனிதன். உணவைத் தானே உற்பத்தி செய்ய உழவுத்தொழிலைத் துவக்கினான். காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்த நிலையில், உயிர் துறத்தலை மனத்தில் கொண்டு, கொடிய விலங்குகளை வேட்டையாடுவதை விடுத்து, வீட்டு வாழ்விலுள்ள அமைதியான விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான். இந்த வகையில் ஆடு, மாடு, எருது, கோழி என வீட்டு விலங்குகளை வளர்த்த இவன், அவற்றை தங்களது விவசாயத் தொழிலுக்கும் பயன்படுத்தினான். அவற்றையே உணவாக உட்கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டான். உறவுகளைப் பிரிய மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்டான்.

ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்த நிலையில், சிந்திக்கும் ஆற்றல் பெருகியது. அப்பொழுது முதலே, மூளையும் வளர்ச்சி அடையத் தொடங்கியது. தானியங்களைப் பயிரிட்டான். பயிரிட்ட தானியங்களைச் சேகரித்து, வருங்காலத்துக்கு என சேமித்து வைக்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்றான். வாழ்வியலில் தனது முன்னேற்றத்தை முத்திரையாகப் பதித்து, வருங்கால மக்களுக்கு வழிகாட்டியுள்ளான். இதற்குச் சான்றாக பெரிய பெரிய மட்கலன்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். இவை தானியங்களைச் சேமிக்கப் பயன்படுத்தியதே ஆகும். முதலில் மண்ணால் செய்த மட்கலன்களைத் தயாரிக்கும் கலையை இவன் கற்றான். இவற்றை தானியங்கள் சேகரிப்புக்கு மட்டுமின்றி, நீர் நிலைகளில் இருந்து நீரை எடுத்து வரவும் பயன்படுத்தியுள்ளான். மட்கலன்களை முதலில் கையாலும், கால வளர்ச்சியில் சக்கரம் கொண்டும் வனைய முற்பட்டான். பின்னர், வனைந்த மட்கலன்களை உறுதியாக்கும் பொருட்டு, அவற்றை தீயிலிட்டு சுட்டுப் பயன்படுத்தினான்.

இக்காலத்தில், தான் பயன்படுத்திய அனைத்துவகையான கற்கருவிகளையும் கூர்மையாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் அமைத்துக்கொள்ள முற்பட்டான். இவை, அவனது கற்பனை மற்றும் கலை உணர்வையும், பயன்பாட்டு அறிவுத் திறனையும் காட்டுகின்றன. மேலும், புதிய கற்காலத்தில் இவன் பல்வேறு திறமைகளைப் பெற்றுத் திகழ்ந்தான் என்பதற்குச் சான்றுகளாகவும் இவை விளங்குகிறன.

புதிய கற்கால மக்களின் சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள்

புதிய கற்கால மக்கள் வேட்டையாடும் தொழிலை விடுத்து விவசாயத்தை செய்தனர். விலங்குகளை விரட்டிச் சென்றதை மாற்றி, தன்னைச் சுற்றி காணப்பட்ட விலங்குகளைப் பழக்கி, அதனை தங்களிடம் உணவுக்காக நாடி வரச்செய்தனர். பின்னர் அவற்றை தங்களது வீட்டு விலங்காக மாற்றி, தங்களுடனே வளர்த்தும் தங்களது உழவுத் தொழிலுக்கும், வேட்டைக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்திக் கொண்டனர். பையம்பள்ளி அகழாய்வில் ஆடு, கோழி, மாடு போன்றவற்றின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது இதனை உறுதி செய்கிறது.*6 இதனால் இவனது வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. உணவு தானியங்களைச் சேமிக்க முற்பட்டபோதே இவனது பொருளாதார நிலை உயர்ந்தது.

நிலையான இருப்பிடத்தை அமைக்கக் கற்றுக்கொண்டது, அவனது தொழில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தம் குடிசைக்கான இடத்தை தரைமட்டத்தைவிட தாழ்வாக அமைத்துக்கொண்டது, கூரை வீடுகள் கட்டுதல், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளல், தங்களுக்குத் தேவையான கற்கருவிகள், மட்கலன்கள் ஆகியவற்றை தாங்களே நேர்த்தியுடன் தயாரித்துக்கொள்ளல் போன்ற செயல்கள், இக்கால மக்கள் நாகரிக வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.

எனவேதான், புதிய கற்கால மக்கள் தங்களது கைக்கோடாரிகளை வழவழப்பானதாகவும், அளவில் சிறியதாகவும், நேர்த்தியானதாகவும் அமைத்துக்கொண்டனர். அன்றாட தேவைக்கு உணவு தயாரிக்கவும், தம் தொழிலுக்கும் தேவையான பல்வேறு விதமான கற்கருவிகளைப் படைத்துக்கொண்டது மூலம், தம் வாழ்வியலை எளிமையானதாகவும் மேம்பட்டதாகவும் அமைத்துக்கொண்டனர். முரட்டுத்தன்மை நீங்கப்பெற்று உடலமைப்பும் மென்மைத்தன்மை பெற்றுவிட்ட நிலையை இக்காலத்திய கருவிகளும் வெளிப்படுத்துகின்றன. இவையே இம்மக்களின் சமூக வாழ்வையும் அடையாளப்படுத்துகின்றன.

புதிய கற்கால மக்களின் சமய நிலை

புதிய கற்கால மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் குடிசைகள் அமைத்து வாழத்துவங்கினர். இவர்கள் இயற்கையையும், தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கைக்கோடாரிகளையும் போற்றி வணங்கியுள்ளனர். வேட்டையாடச் செல்லும் மக்கள், தங்களுக்கு இன்னல் வரக்கூடாதென்றும், வேட்டையில் அதிக அளவில் விலங்குகள் கிடைக்க வேண்டும் என்றும் தங்களது கைக்கோடாரிகளை மண்ணில் நட்டுவைத்து வணங்கியிருக்கலாம். ஏனெனில், இதன் தொடர்ச்சியோ அல்லது எச்சமோ, இன்றளவிலும் புதிய கற்காலத் தடயங்கள் அதிகமாகக் காணப்படும் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்டங்களில், மக்கள் புதிய கற்காலக் கைக்கோடாரிகளை மண்ணில் நட்டுவைத்து வணங்குவதைக் காணலாம். குறிப்பாக மோதூர், மல்லசமுத்திரம், மல்லுப்பட்டி, கல்லாவி போன்ற ஊர்களில் இதன் தொடர்ச்சியை இன்றும் காணலாம்.

Story image
Story image

(வழிபாட்டில் உள்ள புதிய கற்காலக் கருவிகள். புகைப்படங்கள் நன்றி - ரமேஷ், மேட்டூர்)

சுடுமண்ணால் செய்த தாய்தெய்வ உருவ பொம்மை ஒன்று மோதூர் அகழாய்வில் காணப்பட்டது. (இது குறித்து முந்தைய அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). இது, அக்கால மக்கள் பெண்களைத் தெய்வமாகப் போற்றி வழங்கியமையைக் காட்டுகிறது. மேலும், இது புதிய கற்காலம் முதலே தாய்தெய்வ வழிபாடு துவங்கிவிட்டது என்பதையும் உணர்த்துகிறது.*7 இயற்கையையும், இனவிருத்தி செய்யும் பெண் இனத்தையும் கடவுளாகக் கருதி வழிபட்டமை தெளிவாகிறது. இந்த வளமைச் சடங்கை, இக்கால மக்கள் போற்றிப் பாதுகாத்தமையையும் இவை வலிமையாகச் சுட்டுகின்றன.

தாய்தெய்வ சுடுமண் உருவங்கள்

Story image

(கர்-இ-மார் (Gar-I-Mar) ஆப்கானிஸ்தான்)

Story image

(மோதூர்)

சான்றெண் விளக்கம்

1. Selvaraj.S, Significance of Excavations at Modur, Seminar Paper,2005, p.4

2. T.S. Sridhar, Excavations of Archaeological Series, Tamil Nadu, Modur, Department of Archaeology, Chennai, 2005,

3. Ibid., pp.6-9.

4. செல்வராஜ். ச, தருமபுரி மாவட்டத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், பிக்கன்னஅள்ளி, கல்வெட்டு இதழ், தமிழ்நாடு அரசு கல்வெட்டுத் துறை, சென்னை, 8.

5. Narasimaiah,B, Neolithic and Megalithic Cultures in Tamil Nadu, Sundeep Prakashan, New Delhi, 1980,

6. Ancient India, op.cit.,

7. Selvaraj.S, Significance of Excavations at Modur Seminar Paper-2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.