நீர் வற்றிய குளம்: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்


நீர்வற்றிப் போனதொரு குளத்தைக் கண்டேன்
நிலம்வறண்டு கலைந்ததொரு ஓவி யம்போல்
சீர்கெட்டுப் போனதொரு நல்ல வன்போல்
சிந்தைகெட்ட பைத்தியமாய் குப்பை யோடு
பேர்கெட்டுப் பிழைக்காத பெண்ணைப் போல
பெரியதனம் நழுவவிட்ட குடும்பத் தைப்போல்
ஊர்நடுவே இருப்பதற்கு வெட்க முற்றும்
ஓலமிடும் கதைசொல்லக் கேட்டுக் கொண்டேன்.
நீர்நிறைந்த குளத்துநீரோ ஊரின் தாகம்
நிறைமனதாய்த் தணித்ததுவே பறவைக் கூட்டம்
ஊர்வலமாய்ச் சுற்றிவரும் இரையைத் தேடும்,
உறவுகளாய்ப் பூமரங்கள் குளத்தைச் சுற்றி
சீர்வண்ணங் காட்டுகின்ற அழகுக் காட்சி
சித்திரமாய்த் தோன்றிடுமே மீன்கள் நீந்தி
ஆர்வமுடன் தண்ணீரைத் தூய்மை யாக்கும்
அழுக்கின்றிப் படிகம்போல் தெளிய வைக்கும்.
குளமிருக்கும் நிலப்பரப்பில் கண்ணை வைத்துக்
குப்பைகளைக் கொட்டியதை வறண்டு போன
தளமாக்கிப் பாழ்படுத்தி அபக ரிக்கும்
தரங்கெட்ட எண்ணத்தால் மேலி டத்தை
வளமாக்கிக் கையூட்டித் திட்டம் போட்டு
மனையாக்கிக் கூறுபோட்டு விற்று விட்டார்
களத்தினிலே வீட்டுவசதி வாரி யத்தால்
கச்சிதமாய்ச் செய்துகுளம் மறைத்து விட்டார்.
கண்ணீரைச் சிந்தவைக்கும் கதையைக் கேட்டேன்
கனக்கின்ற இதயத்தால் நொந்து போனேன்
முன்னோர்கள் வெட்டிவைத்த நீர்நி லைகள்
முழுதுமாக அழிப்பதனால் இயற்கை கெட்டு
பின்வருந்த லைமுறைகள் தண்ணீ ரின்றிப்
பெரிதளவில் பாதிக்கப் படுவர் என்னும்
எண்ணமின்றி மனிதர்தான் இருக்கின் றாரே
இவராலே நீர்ப்பஞ்சம் தீர்வ தெங்கே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...