இரண்டாவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்வு
தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தை புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது.


தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தை புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்து 61,980.72-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 6.25 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 18,409.65-இல் முடிவடைந்தது. இருப்பினும், வர்த்தகத்தின் போது நிஃப்டி 18,442.15 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது.
சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தாலும், பிற்பகலில் முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
108 புள்ளிகள் உயர்வு:
சென்செக்ஸ் காலையில் 164.36 புள்ளிகள் குறைந்து 61,708.63-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 62,052.57 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 107.73 புள்ளிகள் உயர்ந்து 61,980.72-இல் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
கோட்டக் பேங்க் அபாரம்: பிரபல தனியார் வங்கியான கோட்டக் பேங்க் 2.73 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்குஅடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனி லீவர், டாக்ர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், பவர் கிரிட், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு:
அதே சமயம், பிரபல தனியார் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 1.89 சதவீதம் மற்றும் டாடா ஸ்டீல் 1.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, என்டிபிசி, பஜாஜ் ஃபின் சர்வ் 1.20 சதவீதம் வரை குறைந்தன. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், டைட்டன் உள்ளிட்டவை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.86 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.284.31லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.221.32 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...