புதிய தரச்சான்றுக் கொள்கை: ஆபத்தை எதிர்நோக்கி பேருந்துக்கு கூண்டு கட்டும் தொழில்
மத்திய அரசின் புதிய தரச்சான்று பெறும் கொள்கையால் கரூரில் செயல்படும் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.


மத்திய அரசின் புதிய தரச்சான்று பெறும் கொள்கையால் கரூரில் செயல்படும் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
தமிழகத்தில் தொழில் வாய்ந்த நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. இங்கு வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி, கொசுவலை நிறுவனங்கள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வீட்டு உபயோக ஜவுளி உற்பத்திக்கு அடுத்தாற்போல கரூரில் அதிகளவில் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்குதான் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் எனும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள், பயணிகள் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் போன்றவற்றிற்கு கூண்டுகள் கட்டப்படுகின்றன. கரூர் நகர் பகுதியில் உள்ள சுமார் 70 நிறுவனங்கள் மூலம் மாதந்தோறும் சுமார் 400 பேருந்துகளுக்கு கூண்டுகள் கட்டப்படுகின்றன. ஒரு பேருந்துக்குத் தோராயமாக ரூ. 7 லட்சம் வரை செலவாகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 7,000 கோடி வருவாயை ஈட்டித் தரும் இத்தொழிலில் பெயின்ட்டர், தச்சு வேலை செய்பவர், வெல்டர், எலக்ட்ரீஷியன்கள் என கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி போன்ற அண்டைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கெனவே பேருந்துக்கு கூண்டு கட்டுவதற்கு முக்கிய மூலப்பொருளான இரும்பின் விலை அவ்வப்போது உயர்ந்து வரும் நிலையில் தற்போது இத்தொழிலுக்கு முட்டுக்கட்டையாக மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிதாக AIS052 என்ற தரச்சான்றிதழ் பெற்றால் மட்டுமே தங்களது உற்பத்தியை தொடர முடியும் என்ற அறிவிப்பை கடந்த ஜன. 1-ஆம் தேதி வெளியிட்டது. மேலும் தரச்சான்றிதழ் பெறுவதற்காக ஜூலை 1-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தரச்சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும், இதனால் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கரூரைச் சேர்ந்த பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவன உரிமையாளர் வெங்கடேசன் கூறுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பின்படி இந்த தரச்சான்றிதழ் பெற ஒவ்வொரு நிறுவனமும் மாதிரி வண்டி உருவாக்க ரூ. 50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது மாதிரி வண்டியின் சேஸிஸ் ரூ. 25 லட்சத்திற்கும், கூண்டு கட்ட ரூ. 7 லட்சம் என ரூ. 32 லட்சம் முதலில் செலவாகும். பின்னர் தரச்சான்று ஆய்வுக்கு ரூ. 18 லட்சம் செலவு செய்ய வேண்டும்.
பேருந்துகளுக்கு கூண்டு கட்டப் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை, ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற எந்தெந்த நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் எனக் கூறுகிறார்களோ அவர்களிடம் இருந்து வாங்கிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
அவ்வாறு வாங்கும்போது எப்போதும் வாங்குவதை விட அப்பொருள்களின் விலை பல மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது. அவ்வாறு வாங்கி கட்டிய கூண்டுகள் தரமானதாக இருக்கிறதா என சான்றிதழை புணேவில் உள்ள
ARAI (Automative Research Association of India), CIRT (Central Institute of Road Trasport) ஆகிய சாலைப் போக்குவரத்து ஆய்வு மையங்கள் மூலம் முதற்கட்ட ஆய்வு, இரண்டாம் கட்ட ஆய்வு செய்த பின்னரே அவர்கள் தரச்சான்று கொடுப்பார்கள். இந்த இரு ஆய்வுக்கும் ரூ. 18 லட்சம் ஆய்வுக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
ஏற்கெனவே ஒரு சாதாரண பேருந்துக்கு கூண்டு கட்ட ரூ. 7 லட்சம் வரையிலும், சொகுசுப் பேருந்துகளுக்கு ரூ. 15 லட்சம் வரையும் செலவாகிறது. மற்ற மாநிலங்களை விட கரூரில் தரமாகவும், குறைந்த செலவிலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேருந்துகள் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்படுவதால்தான் கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலத்தவர்கள் இங்கு வந்து ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி ஒரு சாதாரண பேருந்துக்கு கூண்டு கட்டும்போது ரூ. 10 லட்சம் வரையும், சொகுசுப் பேருந்துகளுக்கு ரூ. 20 லட்சம் வரை செலவாகும் வாய்ப்பு உள்ளது. இந்தச் செலவு அனைத்தும் ஆர்டர் கொடுப்பவரின் மேல்தான் வைக்க வேண்டி வரும். இதனால் அவர்கள் தங்களது மாநிலத்திலேயே உருவாக்கப்படும் நிறுவனங்களுக்கு சென்று விடுவார்கள்.
இதன் மூலம் கரூர் நகரில் செயல்படும் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைக்காது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்க நேரிடும்.
மத்திய அரசின் ஆணை இன்னும் வரவில்லை, இந்த ஆணையானது டாடா, அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் எங்களைப் போன்று சிறு,குறு தொழில் திட்டத்தில் குறைந்த அளவு கூண்டுகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்த வாய்ப்பில்லை. மத்திய அரசு கூறியதுபோல இந்த தரச்சான்றினை பெற்றுதான் தொழிலை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் ஆய்வுக் கட்டணத்திலாவது 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட வேண்டும். இப்போது வண்டிகளுக்கு மேற்கூரைக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு விலை தற்போது 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இரும்பின் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து அடிக்கடி விலையேறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த தொழிலை அழிவுப் பாதையில் இருந்து ஓரளவாவது காப்பாற்ற முடியும் என்றார்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் சங்க முன்னாள் மாவட்டச் செயலரும், தற்போதைய உறுப்பினருமான சக்தி கோச் நடராஜ் கூறுகையில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கொண்டு வந்துள்ள இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகள் டாடா, அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும். 13 பயணிகள் அமரும் வகையில் உள்ள எந்தவொரு வாகனத்துக்கு கூண்டு கட்டினாலும் இந்தச் சான்றிதழ் வாங்கியே ஆக வேண்டும். சான்றிதழ் பெற்ற பின்புதான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தைப் பதியவே முடியும். இச் சட்டத்தின்படி ஒரு மாடல் வாகனத்திற்கு கூண்டு கட்டும்போது ரூ. 30 லட்சம் வரை செலவாகும். பெரு நிறுவனங்கள் 4 மாடல்கள் மட்டுமே கட்டுகிறார்கள். ஆனால் கரூரில் உள்ள நிறுவனங்கள், பள்ளி வாகனங்கள், ஏசி சொகுசுப் பேருந்துகள் என 50 மாடல்கள் கட்டுகிறார்கள். ஒரு மாடலுக்கு ரூ. 30 லட்சம் என்றால் 50 மாடல்களுக்கு ரூ. 15 கோடி வேண்டும்.
சிறு,குறு தொழில் பட்டியலில் உள்ள இந்த நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும். வரும் ஜூலைக்குள் கட்டாயம் சான்றிதழ் பெற்றால் மட்டுமே பேருந்துக்குக் கூண்டு கட்ட முடியும் என அரசு தெரிவித்துவிட்டது. இதனால் கட்டாயம் சான்றிதழ் பெற்று ஆக வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் இப்போதே ஆர்டரை குறைத்துவிட்டோம். மேலும், முன்பு போல 50 மாடல்களுக்கு கூண்டு கட்ட முடியாது. இதனால் ஓரளவுக்குதான் தொழில் செய்ய முடியும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கொண்டு வரும் இத்திட்டத்தில் சலுகைகள் அறிவித்தால் மட்டுமே இத்தொழிலைக் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...