சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புதிய நெருக்கடியில் தோல் தொழில்

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான தோல் மற்றும் தோல் பொருள்களின் மதிப்பு ரூ. 35,000 கோடியாகும்.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:31 am

எம். அருண்குமார்

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான தோல் மற்றும் தோல் பொருள்களின் மதிப்பு ரூ. 35,000 கோடியாகும்.
சுற்றுச்சூழல் மாசு காரணத்தைக் கூறி நாட்டின் தோல் தொழில் ஏற்கெனவே நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, யூரோ கரன்சி மதிப்பு வெகுவாக குறைந்தது. இது நமது ஏற்றுமதியை பாதித்துள்ளது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பிலிருந்து தோல் தொழில் முற்றிலும் விடுபடவில்லை.
இந்த நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட கால்நடை விற்பனை கட்டுப்பாடு ஆணையானது தோல் தொழிலைப் புதிய நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் தோல் மூலப் பொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தோல் மூலப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒரு சில மாதங்களில் தோல் மூலப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது. அதனால் தோல் தொழிலில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நமது தோல் பொருள் உற்பத்திக்கு உள்நாட்டிலிருந்து தேவையான மூலப் பொருள் கிடைத்து வந்தது. இதுவரை வெளிநாட்டிலிருந்து தோல் இறக்குமதிக்கு அவசியம் ஏற்பட்டதில்லை.
இப்போது தோல் பொருள் உற்பத்திக்காக வட மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தில் மாட்டு இறைச்சி அறுவைக் கூடங்களிலிருந்தும் தோல்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் தற்போது மத்திய அரசின் ஆணை காரணமாக தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தோல் வருவது அடியோடு நின்றுபோய் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு தோல் தொழில் அடியோடு பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தமிழகத்தில் அத்தொழிலில் ஈடுபட்டோர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாகத் தோல் பொருள் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தோல் தொழிலுக்கு இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள திட்டமும் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன என்று இத்துறையில் ஈடுபட்டுள்ள சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆம்பூர் நிப்ராஸ் குழுமத்தின் தலைவர் மதார் கலீலுர் ரஹ்மான் கூறியது:
இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் தோல் தொழில்கள் மூலம் 2,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
தற்போதைய நிலையில், அந்த இலக்கை நாம் எட்டுவோமா என்ற கேள்வியை புதிய ஆணை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆணையை வெளியிடுவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், தோல் தொழிலதிபர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும்.
மத்திய அரசின் ஆணை முழு அளவில் பின்பற்றப்பட்டால் சில மாதங்களிலேயே இந்திய தோல் தொழில் வர்த்தகம் குறைந்து விடும். இந்திய தோல் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய வர்த்தக ஒப்பந்தங்கள் வியட்நாம், வங்கதேசம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு கிடைத்துவிடும். அதனால் இந்திய தோல் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு அதனுடைய ஏற்றுமதி தற்போதைய நிலையைவிட பாதி அளவுக்குக் குறைந்துவிடும். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
பிரெக்ஸிட், பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் தோல் வர்த்தகம் ஏற்கெனவே சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அண்டை நாடான வங்கதேசத்தில் தோல் தொழில் அதிகரித்தது. தோல் தொழில் அந்த நாட்டில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போதைய ஆணையால் பயன் பெறப் போவது வங்கதேச தோல் தொழில் நிறுவனங்கள்தான் என்றால் அது மிகையில்லை.
உள்நாட்டு மூலப்பொருள் விநியோகம் குறைந்து மூலப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தோல் தொழிற்சாலைகள் தள்ளப்படும். நமது இக்கட்டான சூழலில், இறக்குமதி செய்யக் கூடிய மூலப்பொருட்கள் விலை அதிகமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் சுமார் 2,500 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்திய தோல் தொழிற்சாலைகள் மூலப் பொருட்கள் கிடைக்காமல் மூடக் கூடிய நிலை கூட ஏற்படலாம். அதன் காரணமாக, நாடு முழுவதும் அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும்.
இத்தொழிலைச் சார்ந்துள்ள சார்புத் தொழில்களான தோல் காலணி தயாரிப்பு, தோல் தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரம் தயாரித்தல், காலணி தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரம் தயாரித்தல், தோல் பதனிடுவதற்குத் தேவையான ரசாயனம் தயாரித்தல், காலணி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு சார்புத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகும்.
அதனால் தோல் தொழிற்சாலைகள், அதன் சார்புத் தொழில்கள், தொழிலாளர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கால்நடை விற்பனைக் கட்டுப்பாடு உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.