நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஸ்டார்ட்-அப் என்னும் விந்தை!

தொடக்கநிலை (ஸ்டார்ட்-அப்) நிறுவனம் என்பது வணிக நிறுவனம், பங்குதாரர் நிறுவனம் எனப் பல்வேறு முறைகளில் இயங்குவதாகும். தொழில்நுட்பம், சேவை, உற்பத்தி, மென்பொருள்

News image
Updated On :22 ஜூலை 2025, 9:32 am

ந.முத்துமணி

தொடக்கநிலை (ஸ்டார்ட்-அப்) நிறுவனம் என்பது வணிக நிறுவனம், பங்குதாரர் நிறுவனம் எனப் பல்வேறு முறைகளில் இயங்குவதாகும். தொழில்நுட்பம், சேவை, உற்பத்தி, மென்பொருள், சில்லறை விற்பனை என்று எந்தத் துறையிலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்படுவதாக இருக்கும்.
பெரும் முதலீடு இன்றி, மிகச் சிறு தொகை கொண்டு தொடங்கி மாபெரும் வெற்றிகளைக் குவித்த மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்றவை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகத்தான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.
தனி நபர் பெரும் தொழிலதிபராகும் விந்தையின் வித்துதான் ஸ்டார்ட்-அப்.
இந்தியாவில் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல், பிக்பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் தொடக்கநிலை வணிக நிறுவனங்களாகப் பிறந்தவைதான். சில்லறை வணிகத்தின் போக்கை மாற்றிக் காட்டியுள்ள இந் நிறுவனங்கள், நுகர்வோரின் வாங்கும் பாணியையும் மாற்றிக் காட்டியுள்ளன. ஆடை முதல் ஆபரணங்கள் வரை செயலி வழியாகப் பதிவுசெய்து, வீட்டுக்கு பொருள் வந்ததும் பணம் செலுத்தும் வகையில் வணிகத்தில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இது போன்ற தொடக்கநிலை வணிக நிறுவனங்கள் பெங்களூரில் பெருகிவருகின்றன. இதன் காரணமாக தொடக்கநிலை வணிகத்தின் தொட்டில் என்று பெங்களூரு புகழ்பெற்றுள்ளது. இந்திய அளவில் தொடக்கநிலை வணிக நிறுவனங்கள் அதிக அளவில் செயலாற்றி வருவது பெங்களூரில் என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும். இந்திய அளவில் 10 ஆயிரம் தொடக்கநிலை வணிக நிறுவனங்களைக் கட்டமைக்க நாஸ்காம் திட்டமிட்டு, அதற்கான செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தொடக்க நிலை வணிகங்களைப் பெருக்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்காக 2015 ஆக.15-ஆம் தேதி முதல் தொடக்கநிலை வணிக இந்தியா திட்டத்தை தொடங்கி தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தன்னியல்பாய் இயங்கும், இந்தியாவில் பதிவுசெய்த நிறுவனங்களை தொடக்கநிலை நிறுவனமாக இத் திட்டம் கருத்தில் கொள்கிறது. மத்திய வணிக மற்றும் தொழில்துறையின் கட்டுப்பாட்டில் ஊக்குவிக்கப்படும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் http://startupindia.gov.in  என்ற வலைதளத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். உயிரித் தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்கள் தொடங்கி பத்தாண்டுகளுக்குள் ஆகியிருந்தால் அவற்றை தொடக்கநிலை நிறுவனமாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. இதர துறை சார்ந்த நிறுவனங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தால் மட்டுமே தொடக்கநிலை நிறுவனங்களாகக் கருதப்படும். நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ.25 கோடிக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். புத்தாக்கம், பொருள்கள் மேம்பாடு அல்லது வளர்ச்சி அல்லது புதிய வகை சேவைகள், அதிக வேலைவாய்ப்பு அல்லது சொத்துகளை உருவாக்கும் சிறிய அளவிலான வணிகமாக இருப்பதும் அவசியமாகும். ஏற்கெனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களைப் பிரித்து புதிதாக தொடங்கப்பட்டால் அதை தொடக்கநிலை வணிகமாகக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட தகுதிகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், வங்கிகள் மூலம் குறைந்த வட்டியிலான கடன் உதவியும் அளிக்கப்படுகிறது.
புதுமையான யோசனைகளை வணிக வடிவமாக்கி, நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திடுவதும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும்தான் தொடக்க நிலை வணிக இந்தியா திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
தொடக்கநிலை வணிகத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் 2016 ஜன.16-ஆம் தேதி மத்திய அரசு செயல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
தொடக்க நிலை வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் வரிவிலக்கு, சாதாரண கட்டணத்தில் உள்கட்டமைப்புடன்கூடிய தாற்காலிக அலுவலகம், வங்கி நிதியுதவி, சந்தைப்படுத்துதலுக்கு உதவி, பொருள்களை மேம்படுத்த ஆலோசனை போன்ற வசதிகளைப் பெற இயலும். தொடக்கநிலை வணிக நிறுவனங்களைப் பதிவு செய்வதால் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்ட சுய சான்றிதழைப் பெறலாம்; 80 சதவீத கட்டணச் சலுகையுடன் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம்; அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகளில் வணிக வாய்ப்புப் பெற முன்னுரிமை; மூன்று ஆண்டுகால வருமான வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். தொடக்க நிலை வணிக நிறுவனம் தொடங்குவதற்கு ஆலோசனை கொடுப்பது தவிர, அந் நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடவும் தனி வலைதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
தேசிய தொழில்நுட்ப மையங்கள்
(என்ஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப மையம்(ஐஐஐடி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (ஐஐஎஸ்இஆர்), தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(என்ஐபிஇஆர்) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நாடெங்கும் 75 தொடக்க நிலை வணிக நிறுவனங்களுக்கான ஆதரவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் நிறுவனம் நிதி உதவி

இந்தியாவின் தொடக்கநிலை வணிக நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளதால், இவற்றில் ஜப்பானின் சாஃப்ட்பேங்க் நிதி நிறுவனம்
ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும் ரூ.1000கோடியை முதலீடு செய்யவும் இந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூகுள், ஆரக்கிள் உள்ளிட நிறுவனங்கள் பெங்களூரு, சென்னை, குர்கான், ஹைதராபாத், மும்பை, நொய்டா, புணே, திருவனந்தபுரம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் தொடக்கநிலை வணிக நிறுவனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
இரண்டாம்நிலை நகரங்களில் தொடக்கநிலை வணிக நிறுவனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை கர்நாடகம் மேம்படுத்தி வருகிறது. ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு தொடக்கநிலை வணிக நிறுவன முதலீடுகளைப் பெருக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான தொடக்க நிலை வணிக நிறுவன வளாகத்தை தெலங்கானா உருவாக்கியுள்ளது. 17 ஆயிரம் சதுர அடியில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பூங்காவை ஆந்திர மாநிலம் அமைத்துள்ளது. இதுதவிர, ஆரம்ப புத்தாக்க நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களும் தொடக்க நிலை வணிக நிறுவன வளர்ச்சியில் கவனம் செலுத்திவருகின்றன.

வெற்றிக்கொடி!

கல்வி, சுகாதாரம், உணவு, வேலைவாய்ப்பு, நிதி, சில்லறை விற்பனை, மருந்து, முதலீடு, ஆடை, போக்குவரத்து உள்ளிட்ட எண்ணற்ற தொழில்களில் தொடக்க நிலை நிறுவனங்கள் தினந்தோறும் பிறப்பெடுத்தவண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் தொடக்கநிலை வணிக நிறுவனங்களைத் தொடங்க பயிற்சி பெற 1,51,765 பேர் பதிவுசெய்துள்ளனர். 2,000 தொடக்கநிலை வணிக நிறுவனங்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை http://www.startupindiahub.org.in என்ற வலைதளத்தில் பதிவிட்டுள்ளன.
தொடக்க நிலை வணிக நிறுவனமாக 2,401 நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ள ன. இந்திய அளவில் ஃபேர்சென்ட், ஸ்டாக்யூ, ஃபிரெஷ்டூஹோம், ஐடிஃபுட்ஸ், ஃபிரெஷ்மெனு, கேப்பிட்டல்ஃப்ளோட், அன்பிஎக்ஸ்டி, ஹெல்திஃபைமி, ஃப்ளைரோப், ஃபினோமினா உள்ளிட்ட தொடக்க நிலை வணிக நிறுவனங்கள் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியுள்ளன. உங்களிடமும் புதிய வணிக யோசனை பொறி தட்டியுள்ளதா? அப்படியானால் உணவுப் பொருள், தொழில்நுட்ப சேவை, உணவகம், கல்வி அல்லது தனிப் பயிற்சிக்கூடம், துப்புரவு, மின் மேலாண்மை, மகளிர் சுகாதாரம், வேலைவாய்ப்புப் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான தொழில்கள், வணிக வாய்ப்புகளில் நீங்கள் ஈடுபடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.