சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நசியும் நிலையில் கோரைப் பாய் தயாரிப்பு

மூலப்பொருளின் கடுமையான விலையேற்றம் மற்றும் ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் அடியோடு நசியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:31 am

எம். அருண்குமார்

மூலப்பொருளின் கடுமையான விலையேற்றம் மற்றும் ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் அடியோடு நசியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய பொருளாக கோரைப் பாய் கருதப்படுகிறது. கோரை எனப்படும் மூலப்பொருளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. கோரை என்பது ஒருவகைப் புல்லாகும். இது காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்றது.
ஆவூர், கரூர், ஓமலூர், மேச்சேரி, முசிறி, திருநெல்வேலி பத்தமடை, கயத்தாறு, வேலூர் மாவட்டம் அகரம்சேரி, வாணியம்பாடி, பொன்னேரி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாய் தயாரிப்புத் தொழில் நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பு கைத்தறி மூலம் பாய்கள் நெய்யப்பட்டன. தற்போது இயந்திரங்கள் மூலம் பாய் நெய்யப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வரை வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். கோரையைப் பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது, வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களை சுருட்டிக் கட்டாகக் கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணிகளைச் செய்து வருகின்றனர். தற்போது கோரையின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்ற பொருளாக இருப்பதால் காவிரியில் நீர் இருந்தால்தான் கோரை விளைச்சல் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் பருவமழை பொய்த்து வறட்சி காரணமாக காவிரி தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதனால் கோரை விளைச்சலும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

5 மாதங்களில் 2 மடங்கு விலை உயர்வு

தற்போது கோரை விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கடந்த 5 மாதங்களில் கோரையின் விலை 2 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான விலையேற்றமாகும். மூலப்பொருள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதால் கோரைப் பாய் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அத்தொழிலைத் தொடர முடியாமல் தொழிற்சாலைகளை மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரிய கட்டு (பண்டல்) கோரையின் விலை ரூ. 750 ஆக இருந்துள்ளது. தற்போது அது ரூ. 1,700 முதல் ரூ. 1,900 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெரிய கட்டு கோரையில் 6 சிறிய கட்டுகள் (திருகு) இருக்கும். ஒரு லாரியில் 130 பண்டல்கள் முதல் 150 பண்டல்கள் வரை ஏற்றிச் செல்லலாம். ஒரு லாரி லோடு விலை சுமார் 150 பண்டல்கள் கொண்டது. அது ரூ.1.12 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ. 2.55 லட்சத்திலிருந்து ரூ. 2.85 லட்சம் வரையில் விற்பனையாகிறது. இவ்வாறு கோரையின் விலை கடந்த 5 மாதங்களில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

விற்பனை விலையில் ஏற்றம் இல்லை

ஒரு பாயின் விற்பனை விலை சுமார் ரூ. 90-ஆக இருந்தது. மூலப்பொருள் மிகக் கடுமையான விலையேற்றம் கண்டுள்ள நிலையில், தற்போது ரூ. 120-க்கு விற்பனை செய்வதற்கே சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. மிகச் சிறிய அளவில் தொழில் நடத்தி வந்தவர்கள் பலர் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். பெரிய அளவில் தொழில் நடத்தி வருபவர்கள் மட்டுமே தொடர்ந்து சிரமத்துடன் தொழிலை நடத்தி வருகின்றனர்.

ஜிஎஸ்டி விதிப்பு

கடந்த காலங்களில் கோரைப் பாய்க்கு விற்பனை வரி இல்லை. தற்போது கோரையின் விலையேற்றம் காரணமாகத் தொழில் நலிவடைந்து வரும் சூழ்நிலையில், அடிக்கு மேல் அடியாக கோரைப் பாய்க்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரிவிதிக்கப்பட்டுள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறி வருகின்றனர். வரிவிலக்கில் இருந்த பாய்க்கு தற்போது 12 % வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி விதிப்பில் "4601' என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களில் பாய் (மேட்) வருவதாகவும் கூறப்படுகிறது. வரியே இல்லாமல் இருந்த மூலப்பொருள் கோரைக்கு 5 சதவீதமும், கோரைப் பாய்க்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மூலப்பொருள் கடுமையான விலையேற்றம் கண்டதாலும், கோரைப் பாய் தயாரிப்புத் தொழில் அடியோடு நசிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாய் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள அகரம்சேரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் கூறியதாவது:

கோரைக்கு 5 சதவீதமும், கோரைப் பாய்க்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாய் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாய் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து நஷ்டத்தை தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த பாய் தொழில் தயாரிப்புத் தொழிற்சாலை நடத்தி வரும் ஆசைத்தம்பி கூறியதாவது: வாட் வரிவிதிப்பு முறையில் பாய்க்கு வரி இல்லை. கோரையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். தற்போது ஜிஎஸ்டியால் பாய் தயாரிப்புத் தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்தப் பொருளைப் பெரும்பாலும் வாங்கிப் பயன்படுத்துவது ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு மக்கள். விலையேற்றம் அவர்களை பாதிக்கும். தமிழகத்தின் பாரம்பரியமான பொருளான கோரைப் பாய் தயாரிக்கும் தொழிலை நலிவிலிருந்து மீட்கவும், அதனை லாபத்தோடு தொடர்ந்து இயக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.