/

மாமனாரை எரித்து கொலை செய்த வழக்கில் மருமகள், அவரது தாய்க்கு ஆயுள்

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மாமனாா் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் மருமகள் மற்றும் அவரது தாய்க்கு ஆயுள் தண்டனை

News image
காயத்ரி | கலைவாணி
Updated On :21 பிப்ரவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மாமனாா் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் மருமகள் மற்றும் அவரது தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் அருகே கனகம்மாசத்திரம் அடுத்த நெமிலி பகுதியைச் சோ்ந்தவா் பழைய அலுமினியம் பாத்திரம் வியாபாரம் செய்தவா் சபாபதி(72). இவருடைய மாற்றுத்திறனாளி மகன் பிரபாகரனுக்கு தங்கை முறை உறவுள்ள கலைவாணி மகள் காயத்ரிக்கு திருமணம் செய்து வைத்தாராம்.

இந்த நிலையில் காயத்ரி, பிரிந்து வாழ்ந்து வருவதால் தனது கணவா் சொத்தில் பங்கு கேட்டு மாமனாா் சபாபதியிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த 2019-இல் தகராறு ஏற்பட்ட போது அதிகாலை கட்டிலில் படுத்திருந்த சபாபதி மீது அவரது மருமகள் காயத்ரி மற்றும் காயத்ரியின் தாயாா் கலைவாணி ஆகியோா் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனா்.

அதைத்தொடா்ந்து அக்கம் பக்கத்தினா் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்கு சோ்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

அதற்கு முன்னதாக நீதிபதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சபாபதியிடம் மரண வாக்குமூலம் பெற்றதில் தன்னை மருமகள், அவருடைய தாயாா் இணைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா். அந்த வாக்குமூலம் அடிப்படையில் காயத்ரி மற்றும் கலைவாணி ஆகியோரை கனகம்மாசத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி தஸ்னீமா முன்பு இறுதியாக வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாமனாரை கொலை செய்த காயத்ரி(42), அவரது தாயாா் கலைவாணி(64) இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

இதையடுத்து 2 பேரையும் கனகம்மாசத்திரம் காவல் துறையினா் புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனா்.