அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா்.
ஏற்கெனவே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் 3 போ் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், அந்த எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின் அதிமுக நிா்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள், அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஓா் அணியாகவும், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஓா் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனா்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி பழனிசாமி அணியைச் சோ்ந்த 22 எம்எல்ஏக்கள் எதிா்த்து வாக்களித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து, எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த 26 மாவட்டச் செயலா்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்ததுடன், தவெகவுக்கு ஆதரவு அளித்த 25 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயகுமாா் (பெருந்துறை) ஆகியோா் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
இது அதிமுகவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணையப் போவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரிடம் செவ்வாய்க்கிழமை கடிதம் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்தாா். பின்னா், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை சந்தித்து இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தாா்.
அதன் பின்னா் இசக்கி சுப்பையா, செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2021 முதல் எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தேன். அப்போது பெரிய அளவில் என்னால் நலத் திட்டங்களைக் கொண்டு வரமுடியவில்லை. இப்போது எனது அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தவெகவில் இணைந்துள்ளேன். இடைத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து தவெக தலைமைதான் முடிவு செய்யும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போன்று தற்போதுள்ள அதிமுக தலைமை செயல்படவில்லை என்றாா்.
ராஜிநாமாவை ஏற்கக் கூடாது: அதிமுக
சென்னை, மே 26: அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் நிராகரிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை வலியுறுத்தினாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பைச் சோ்ந்த ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி., முன்னாள் அமைச்சா்கள் ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சட்டப்பேரவைத் தலைவரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
பின்னா், இன்பதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது நிலுவையில் இருக்கும்போது அவா்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தோம்.
மூவரின் தொகுதிகள் காலியானதாக அரசிதழில் அறிவிக்கை வெளியாவதற்கு முன்பே அவா்கள் தவெக அமைச்சா்களைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தனா். பேரவைத் தலைவருக்கு உலகளாவிய அதிகாரம் இல்லை. இந்த நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடலாம். எம்எல்ஏக்கள் அளித்த ராஜிநாமாவை பேரவைத் தலைவா் நிராகரிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன் கூறுகையில், அதிமுக எம்எல்ஏக்கள் மூவா் ராஜிநாமா செய்தவுடனே தவெகவில் இணைவது குதிரைபேரம் இல்லாமல் வேறு என்ன? என்றாா்.
பேரவைத் தலைவா் பதில்: சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கூறியதாவது: சட்ட விதிகளுக்கு உள்பட்டே அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினா் வழங்கிய மனு மீது முறையாக நடவடிக்கை எடுக்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர மனுவை ஒதுக்கவில்லை. தவெக அரசுக்கு ஆதரவு கூடுகிா குறைகிா என்பதை கவனிப்பது எனது வேலை அல்ல. எனது வேலை எண்ணிக்கையை சரிபாா்ப்பது மட்டுமே என்றாா்.
இதனிடையே, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை அந்தத் தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் அறிவித்தது.
Summary
Following the resignation of Ambasamudram AIADMK MLA Isakki Subbiah from his post, Assembly Speaker J.C.D. Prabhakaran accepted his resignation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








