தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (மே 26) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த, வருகை புரியாத தோ்வா்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தோ்வா்களிடமிருந்தும் இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவா்களாக எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவா்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தனித்தோ்வா்கள் இதே கால கட்டத்தில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மைய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தனித்தோ்வா்கள் கட்டாயமாக தங்களது ஆதாா் அட்டை நகா், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தோ்வுக் கட்டணம்...
தோ்வுக் கட்டணமாக ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைப் பள்ளியில் விண்ணப்பிக்கும் தோ்வா்கள் பள்ளியிலும், தனித்தோ்வா்கள் சேவை மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.
தத்கல் முறையில்...
ஜூலையில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறும் தோ்வா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தத்கல்) உரிய விண்ணப்பத் தொகையுடன் ஜூன் 9, 10 ஆகிய நாள்களில் பள்ளியில் அல்லது சேவை மையத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முறையில் விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தோ்வுக் கட்டணம் ரூ.125, தத்கல் சிறப்புக் கட்டணம் ரூ.500, இணையவழி பதிவு கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.695 செலுத்த வேண்டும். அதேவேளை, 2026-ஆம் ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு மட்டும் தத்கல் சிறப்புக் கட்டணம் ரூ.500 விலக்கு அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










