17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தர்காவை அகற்றுவதே வலதுசாரிகளின் நோக்கம்: கம்யூ.

திருப்பரங்குன்றத்தில் தூணில் தீபமேற்ற தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

News image

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 2:16 pm IST

திருப்பரங்குன்றத்தில் தூணில் தீபமேற்ற தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், மாநில அரசின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைபாட்டை ஜூன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது கவலை அளிக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடப்பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென வலதுசாரி அமைப்பை சேர்ந்த சிலர் வற்புறுத்தி மோதல் நிலையை உருவாக்கி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

அந்த சர்வே தூண் நடுவதற்கு முன்பிருந்தே அப்பகுதியில் சிக்கந்தர் தர்கா இருந்து வந்துள்ளது. அந்த சர்வே தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளின் மூலம் அந்த தர்காவை எதிர்காலத்தில் அகற்றிட வேண்டும் என்று அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்தை சீர்க்குலைத்து, மக்களை மத ரீதியாக அணிதிரட்டி, பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதே வலதுசாரி சக்திகளின் நோக்கமாகும்.

வலதுசாரி சார்புள்ள சில நீதி அரசர்களும் இந்நோக்கத்துக்கு துணை நிற்பது நீதி பரிபலான முறையில் ஏற்பட்டுள்ள பேராபத்தாகும் என்பதை, மதச்சார்பற்ற கொள்கை வழி அரசு கருத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை பயன்படுத்தி, அரசியல் சட்டத்துக்கு முரணான தங்களது தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் சர்வே தூணில் தீபம் ஏற்றலாம் என்ற கருத்தை அடிப்படையிலேயே நிராகரிக்க வேண்டும்.

இத்தகைய முயற்சி நமது அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும், மத நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும்.

அது மட்டுமல்ல, 1991 வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 (The Places Of Worship (Special Provisions) Act,) 1991-க்கும் எதிரானதாகும்.

இச்சட்டப்படி, 1947 ஆகஸ்டு 15-க்கு முன்னர் வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். 1947 ஆகஸ்டு 15-க்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், வரும் காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

வலதுசாரிகள் மற்றும் வலது சாரி சார்புடைய நீதியரசர்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் சட்ட ஒழுங்கையும், மதச்சார்பற்ற கொள்கை நிலையில் நின்று, சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்.

இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில், சிக்கத்தர் தர்கா அருகில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" என்று கூறியுள்ளனர்.

Summary

CPI urges the TVK government to remain firm on its stance regarding the Thiruparankundram Deepam issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.