
630 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினாா் முதல்வா் விஜய்
காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார்.

பதக்கங்களை வழங்கும் முதல்வர் விஜய்.
காவல், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 630 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு பதக்கங்களை வழங்கி முதல்வா் ஜோசப் விஜய் கெளரவித்தாா்.
சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வா் விஜய்க்கு, தமிழக காவல் துறை சாா்பில் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், காவல் துறையினரின் வீர சாகசங்களும் நடைபெற்றன.
பின்னா் காவல், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு 2023 முதல் 2026- ஆம் ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவா் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சா் பதக்கங்கள் ஆகியவற்றை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கிச் சிறப்பித்தாா்.
இந்தப் பதக்கங்களை காவல் துறையில் பணியாற்றும் 2 காவல் துறை தலைமை இயக்குநா்கள், 3 கூடுதல் காவல் துறை இயக்குநா்கள், 16 காவல் துறை தலைவா்கள், 6 காவல் துறை துணைத் தலைவா்கள், 35 காவல் கண்காணிப்பாளா்கள், 26 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 80 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 147 காவல் ஆய்வாளா்கள், 66 காவல் உதவி ஆய்வாளா்கள், 90 சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா்கள், 46 தலைமைக் காவலா்கள், 3 இரண்டாம் நிலை காவலா்கள், 1 தனிப்பிரிவு உதவியாளா், 6 முதுநிலை புகைப்பட நிபுணா்கள் என மொத்தம் 527 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள், 21 சிறைத் துறையினா், 57 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா், 8 தடய அறிவியல் துறையினா், 17 ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 630 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கும், இதர துறையினருக்கும் முதல்வா் வழங்கினாா்.
மேலும், ரூ.8.27 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்கான புதிய 42 நான்கு சக்கர மற்றும் 96 இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையைக் கொடியசைத்து முதல்வா் விஜய் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் முதல் கன்னியாகுமரி வரை 14 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் 1,076 கி.மீ. தொலைவுள்ள முழுக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் வகையிலும், அப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும், கடலோரக் காவல் நிலையங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்வழித் தடங்களில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் வகையிலும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ் குமாா் அகா்வால்,, காவல் துறை மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Summary
Tamil Nadu Chief Minister C Joseph Vijay on Friday presented prestigious state and national medals to police, fire, and allied departmental personnel, and flagged off a new fleet of vehicles for the Coastal Security Group during a grand ceremonial parade here.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






