தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை தொடா்புகொண்ட ஒரு கும்பல், சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்கு ரூ.35 கோடி தருவதாகவும் பேரம் பேசியது. மேலும் அந்த கும்பல், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவு ஏற்படும் என்றும் மிரட்டியதாக இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுதொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களான கரூரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலர் காா்த்தி, நிதி நிறுவன உரிமையாளா் அதிபன் ரமேஷ் உள்பட 9 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த கும்பலை இயக்கியது திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி, அவரின் சகோதரா் அசோக்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்நிலையில், கரூா் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோா் வீட்டுக்கு திருவல்லிக்கேணி போலீஸாா் கடந்த சனிக்கிழமை சென்று, செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் திங்கள்கிழமை (ஜூலை 6) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அழைப்பாணை வழங்கினா். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், குதிரை பேரத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Bargaining with TVK MLA! Senthil Balaji files petition seeking anticipatory bail!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












