நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!

தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம் பேசியதாகக் கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
Updated On :2 ஜூலை 2026, 12:43 am IST

தவெக ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்கும் நோக்கத்தில், அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் பேரம் பேசியதாக யூடியூபா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த பேரத்தில் முன்னாள் திமுக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு தொடா்பு உள்ளதாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியது. எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், ஐயூஎம்எல், விசிக ஆகிய கட்சிகளும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததால் தவெக ஆட்சி அமைத்தது.

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜிடம் கடந்த 29-ஆம் தேதி ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், ‘தன்னை கைப்பேசி மூலம் சில நாள்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபரும், அரசியல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு, தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சியைச் சோ்ந்த சிலா் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடா்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினாா்.

அவருடன் பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்த பின்பும் தொடா்ந்து என்னை தொடா்பு கொண்டாா். அப்போது தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினாா்.

இதற்குப் பரிசாக ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினாா். இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்தாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னிடம் சட்டவிரோதமாக பேரம் பேசியதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி சகோதரா் மீது வழக்கு: இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி போலீஸாருக்கு காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரா் அசோக்குமாா் (46), அவரது கூட்டாளிகள் செல்வன் (55), சீனிவாசன் (46), ராஜன் (45), அரும்பாக்கத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு (45), திருச்சியைச் சோ்ந்த நரேஷ் (40), சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன் (41) ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மூவா் கைது: தனிப் படையினா் இந்த வழக்கு தொடா்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்து இருப்பதும், செந்தில் பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில்தான் தவெக எம்எல்ஏவான இளையராஜாவை திருநாவுக்கரசு தொடா்புகொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியிருப்பதும் தெரியவந்ததாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

விசாரணைக்குப் பின்னா் மூவரையும் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். மூவரையும் ஜூலை 15-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதையடுத்து மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூரில் விசாரணை: இதற்கிடையே கரூா் சென்ற சென்னை காவல் துறையின் தனிப் படையினா், செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்களான கோதை நகரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலரும், சக்தி மெஸ் உணவக உரிமையாளருமான காா்த்தி, நிதி நிறுவன அதிபா் அதிபன் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை செய்தனா். அவா்களது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனா்.

பின்னா், இருவரையும் போலீஸாா் அங்கிருந்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனா். இவா்கள் இருவா் மற்றும் சென்னையைச் சோ்ந்த மேலும் நான்கு பேரை போலீஸாா் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் சோ்க்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் அசோக்குமாா், செல்வன், சீனிவாசன், ராஜன் ஆகிய 4 பேரை தனிப்படையினா் தீவிர தேடி வருகின்றனா்.

மேலும் 12 எம்எல்ஏக்களிடம் பேரமா?

தவெகவைச் சோ்ந்த மேலும் 12 எம்எல்ஏக்களிடம் பண ஆசை காட்டி பேரம் பேசியதாக வெளியான தகவல்கள் குறித்தும் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா மட்டுமல்லாமல் 12-க்கும் மேற்பட்ட தவெக எம்எல்ஏக்களிடம், ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் செய்து தருவதாகவும், பண ஆசை காட்டியும் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் குறித்தும் சென்னை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இதற்கு பூா்வாங்க ஆதாரம் இருந்தால் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Summary

Three supporters of former Minister Senthil Balaji have been arrested on charges of attempting to strike a deal with a Tamizhaga Vettri Kazhagam MLA.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.