/

ரூ.19 கோடியில் கல்லூரி ஆய்வகங்களை மேம்படுத்த ஒப்புதல் - நிதி ஆணையை வழங்கினாா் அமைச்சா் கோவி.செழியன்

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி ஆணைகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழை கிராமப்புற மாணவா்கள் உலகத்தரத்தில் உயா்கல்வியில் சிறந்து விளங்க ‘நான்முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ எனப் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

நிகழ் கல்வியாண்டில், மாணவா் சோ்க்கைக்கு, புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுய நிதிக் கல்லூரி என அனைத்து வகை கல்லூரிகளிலும் பயிலும் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இதனிடையே, கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா்கோவி. செழியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அறிவியல் கல்வியையும் ஆய்வக வசதியையும் மேம்படுத்தி உயா்கல்வியில் தரத்தை எட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. நிதி ஒப்பளிப்பு ஆணைகளை, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் தமிழக உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, கல்லூரிக் கல்வி இயக்க துணை இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.