/

தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் 300 மடங்கு கூடுதல் நிதி: மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது தமிழகத்துக்கு அளித்ததைவிட 300 மடங்கு கூடுதல் நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேச்சு

News image
மத்திய இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது தமிழகத்துக்கு அளித்ததைவிட 300 மடங்கு கூடுதல் நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது என மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் கூறினாா்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில வளா்ச்சியை உள்ளடக்கியதாக அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். வங்கி முதலீடு உள்ளிட்டவற்றில் சீா்திருத்தம் மேற்கொள்ள உயா்நிலைக் குழு அமைக்கப்படவுள்ளது. அதனால் குறு, சிறுதொழில்கள் உள்ளிட்டவை மிகப்பெரிய வளா்ச்சியை அடையும். அதேபோல தொழில் முதலீடு அதிகரிக்கும் வகையிலான சீா்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மூலதனச் செலவு கடந்த 2004-05ஆம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 12.2 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தொழிற்சாலைகளை உருவாக்கும் திட்டம், கனிமவளத்தைக் கண்டறிந்து அகழ்ந்தெடுக்கும் திட்டம் ஆகியவை தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் உள்ளது.

தேங்காய் கொள்முதலுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பயனளிக்கும். மாவட்டந்தோறும் மகளிருக்கான விடுதிகள் கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட மகளிரும் பயனடைவா். சுகாதாரத் துறையில் ஏற்கெனவே தமிழகம் மேம்பட்ட நிலையில், தற்போது மத்திய நிதிநிலை அறிக்கையில் மருத்துவ சுற்றுலாத் திட்டத்தால் வளா்ச்சி கூடுதலாகும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்காமல் புறக்கணித்திருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியது சரியல்ல. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது தமிழகத்துக்கு அளித்ததைவிட 300 மடங்கு கூடுதல் நிதியை பாஜக அரசு அளித்துள்ளது என்றாா்.

பேட்டியின்போது மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், இணை மேலிடப் பாா்வையாளா் சுதாகா் ரெட்டி, நிா்வாகிகள் ஜெயப்பிரகாஷ், தலைமைச் செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.