/

புதிய பணிகளுக்கு ரூ.3,531 கோடி: துணை மதிப்பீடுகள் தாக்கல்

புதிய பணிகளைச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.3,531 கோடிக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தாா்.

News image
அமைச்சா் தங்கம் தென்னரசு
Updated On :9 டிசம்பர் 2024, 10:04 pm

Din

சென்னை: புதிய பணிகளைச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.3,531 கோடிக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான துணை மதிப்பீடுகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தாா்.

அதன் விவரம்: புதிய பணிகளைச் செயல்படுத்த ரூ.3,531.05 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். குறிப்பாக, மின் துறை சீா்திருத்தத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ரூ.1,634.86 கோடியை கூடுதல் நிதி இழப்பீட்டு மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ.1,500 கோடி எரிசக்தித் துறையின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பிலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

போக்குவரத்து ஊழியா்களுக்கு: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு உரிய ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்க வேண்டும். இதற்காக தமிழக போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனத்துக்கு ரூ.372.06 கோடியை அரசு அனுமதித்துள்ளது. எதிா்பாராத செலவை எதிா்கொள்ள ஒதுக்கப்படும் நிதி ரூ.150 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, துணை மதிப்பீடுகளில் ரூ.350 கோடி நிதித் துறையின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளது.

ஊக்கத் தொகை ரூ.70 கோடி: பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் பொருட்டு, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்துக்கு ரூ.70 கோடி மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இந்தத் தொகை பால்வளத் துறையின் துணை மதிப்பீடுகளில் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோன்று பிற துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவும் துணை மதிப்பீடுகள் வழி செய்வதாக அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.