காவிரி நீர்ப் பங்கீடு: 131 ஆண்டுகளாக தொடரும் சட்டப் போராட்டம்!
காவிரி ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து (ஆண்டு: 1892) 131 ஆண்டுகளாக கர்நாடகம்- தமிழகம் இடையே தீராத பிரச்னை இருந்து வருகிறது.


காவிரி ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து (ஆண்டு: 1892) 131 ஆண்டுகளாக கர்நாடகம்- தமிழகம் இடையே தீராத பிரச்னை இருந்து வருகிறது.
குறிப்பாக, 1892-இல் அன்றைய மதராஸ் மாகாணத்துக்கும், மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையே காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பாக கருத்து முரண்பாடு உருவெடுத்தது; அப்போதுமுதல் 1986-இல் தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது என சட்டப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.
இதன் வரலாற்றுச் சுவடுகளைக் காண்போம்...
1986: தமிழகம்-கர்நாடகம் இடையே நடந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை; இதையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
1990: உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 1990-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து அன்றைய பிரதமர் வி.பி.சிங் உத்தரவிட்டார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி காவிரி நடுவர் மன்றத்தை தமிழகம் அணுகியது. இதை நடுவர் மன்றம் நிராகரித்தது; அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்குமாறு நடுவர் மன்றத்துக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1991: தமிழகத்தின் மனுவை ஏற்ற காவிரி நடுவர் மன்றம், 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி இடைக்கால தீர்ப்பை அளித்தது. 1980 முதல் 1990 வரையில் தமிழகத்துக்குச் சென்ற நீரின் அளவைக் கணக்கிட்டு, ஆண்டுக்கு 205 டிஎம்சி நீரை கர்நாடகம் அளிக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது. மேலும் கர்நாடகத்தின் பாசனப் பகுதியை 11.2 லட்சம் ஏக்கருக்கு (4500 சதுர கி.மீ.) அதிகமாக விரிவாக்கக் கூடாது என்றும் கூறியது. அதே ஆண்டு டிச. 11-ஆம் தேதி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை மத்திய அரசு தனது அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை நிகழ்ந்தது. கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
1993: நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை விடுவிக்கக் கோரி எம்ஜிஆர் நினைவிடத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.
1995: கர்நாடகத்தில் போதுமான மழை பெய்யாததால், இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தமிழகம் அணுகியது; நடுவர் மன்றத்தை அணுகும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தமிழகத்துக்கு 11 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்தது.
அரசியல் ரீதியான தீர்வு காணும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தையை அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
1997: நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்த, காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்குமாறு தமிழகம் கோரியது.
1998: பிரதமர் தலைமையில் கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதிநீர் ஆணையம், பொறியாளர்கள், அதிகாரிகள் அடங்கிய காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
2002: அந்த ஆண்டின் செப். 8-ஆம் தேதி அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு 9,000 கன அடி தண்ணீரைத் திறக்க அறிவுறுத்தியது. இதை ஏற்காத தமிழகம், உச்சநீதிமன்றத்தை அணுகியது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. அதே ஆண்டு செப்.25-இல் காவிரி கண்காணிப்புக் குழு கர்நாடகத்தில் காவிரி அணைகளை ஆய்வு செய்தது.
2005: ஜூலை 17-ஆம் தேதி பேரிடர்க்கால (பற்றாக்குறைக்காலம்) நீர்ப்பகிர்வுத் திட்டத்தை ஏற்க மறுத்த கர்நாடகம், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது.
2006: ஏப். 13-இல் கர்நாடகம், தமிழக முதல்வர்கள் இடையே 6 சுற்றுகளாக நடந்த பேச்சு தோல்வி அடைந்தது.
2007: 16 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப். 5-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. 1892, 1924ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்ட காவிரி நடுவர் மன்றம், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுச்சூழலுக்கு 14 டிஎம்சி தண்ணீர் என ஒதுக்கியது.
பிப். 12-இல் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மார்ச் 18-இல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி ஜெயலலிதா, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
2008: ஜூலை 30-இல் காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசு அதிகாரிகளை அதன் மூத்த வழக்குரைஞர்கள் சந்தித்துப் பேசினர்.
2012: மே 19-ஆம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினார்.
செப்.19-இல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 7-ஆவது காவிரி நதி ஆணையக் கூட்டம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழகத்துக்கு உடனடியாக 9,000 கன அடி நீரை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும், அன்றைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் மறுத்தனர்.
செப்.28-இல் பிரதமரின் உத்தரவுக்கு இணங்கி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடகத்தை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
நவ. 30: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பெங்களூரில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அன்றைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
2013: பிப்.29-ஆம் தேதி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது அரசிதழில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
மார்ச் 10: காவிரி நதிநீர்ப் போராட்டத்தில் வென்றதற்காக தஞ்சாவூரில் நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவுக்கு காவிரித்தாய் பட்டம் வழங்கப்பட்டது.
மார்ச் 19: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அதன்படி, மே 24-இல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தது.
மே 28-இல் நடுவர் மன்ற உத்தரவை அமல்படுத்தாதற்கான இழப்பீடாக ரூ.2,480 கோடியை கர்நாடகம் வழங்க உச்சநீதிமன்றத்தை தமிழகம் அணுகியது.
ஜூன் 26-இல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு தாக்கல் செய்தது.
ஜூன் 28-இல் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழகம் தாக்கல் செய்தது.
2014: காவிரி நடுவர் மன்ற நீதிபதியாக செளஹான் பதவியேற்றார்; தனது இறுதித் தீர்ப்பை அமல்படுத்தாதது குறித்து காவிரி நடுவர் மன்றம் கேள்வி எழுப்பியது.
2015: மார்ச் 30-இல் காவிரியின் குறுக்கே புதிதாக மேக்கேதாட்டு அணை கட்டப் போவதாக அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
செப்.6-இல் காவிரி விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடிக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
2016: ஆக. 16-இல் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்தது.
செப். 5-இல் தமிழகத்துக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.7-இல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டம் நடந்தது.
செப்.11-இல் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனுதாக்கல் செய்தது.
2017: முந்தைய 2012-13-ஆம் ஆண்டுகளில் காவிரிநீரைத் திறக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு கர்நாடகம் ரூ. 2,480 கோடி வழங்கக் கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகமும், தமிழகமும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
2018: பிப்.16-இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகம் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கியிருந்த 419 டிஎம்சி தண்ணீரில் 14.75 டிஎம்சி-ஐ உச்சநீதிமன்றம் குறைத்துவிட்டது. அதன்மூலம், தமிழகத்திற்கு 404.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்தது.
ஜூன் 1-இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. சில வாரங்களுக்குப் பிறகு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது.
2023: ஆக. 10-இல் கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.
ஆக.11-இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடியது. ஆகஸ்ட் மாதத்தில் 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிட முடியும் என்று கர்நாடகம் கூறியது. அதை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டது.
ஆக.12-இல் ""கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 114.57 டிஎம்சி. இதில் 93.53 டிஎம்சி தண்ணீர் இருப்பு (82%) உள்ளது. தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். ""ஜூன் 1முதல் ஆக.11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 53.77 டிஎம்சி தண்ணீர் வழங்குவதற்கு பதிலாக, 15.79 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்னும் 37.97 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்'' என்று துரைமுருகன் தெரிவித்தார்.
இரு மாநிலங்களுக்கும் இடையே முடிவில்லாமல் நிலவும் காவிரிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல், நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும், சட்டப் போராட்டமாக நீடித்து வருகிறது. இது குறுவை பயிருக்கு காவிரி நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழக விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.14) வழக்கு தொடரப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...