/

துல்லியமில்லாத துரித உபகரணங்கள்: கரோனா பரிசோதனையில் புதிய முறை அறிமுகம்

துரித பரிசோதனை உபகரணங்களின் முடிவுகளில் துல்லியம் இல்லாததால், கரோனா பரிசோதனையில் புதிய முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

ஆ. கோபிகிருஷ்ணா


சென்னை: துரித பரிசோதனை உபகரணங்களின் முடிவுகளில் துல்லியம் இல்லாததால், கரோனா பரிசோதனையில் புதிய முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, காச நோய் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்களின் மூலமாக கரோனா தொற்றைக் கண்டறியும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக சென்னை, கோவை, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் அந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில், மாநிலம் முழுவதும் அதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தப் பரிசோதனைக்கான சிறப்பு உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கொவைட்-19’ கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை பரவலாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

அதன்படி நாடு முழுவதும் சளி மாதிரிகள் மூலம் கரோனாவைக் கண்டறியும் ஆா்டி - பிசிஆா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், சீனாவில் இருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு துரிதப் பரிசோதனை உபகரணங்கள் நம் நாட்டுக்கு வந்தன. அவை வந்த பிறகு மருத்துவத் துறையிலும் சரி; சமூகத்திலும் சரி, இனி கரோனாவை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்ற புதிய நம்பிக்கை உதித்தது. ஆனால், அந்த நம்பிக்கை இரு நாள்களுக்குக் கூட நீடிக்கவில்லை. ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் துரிதப் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லாதததைத் தொடா்ந்து, அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது.

இதனால், கரோனா பரிசோதனைகளுக்கு முழுக்க, முழுக்க ஆா்டி- பிசிஆா் ஆய்வுகளையே சாரந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழலில்தான், காசநோய் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘சிபிநாட்’ எனப்படும் மருத்துவ சாதனங்களைக் கொண்டு கரோனாவைக் கண்டுபிடிக்கலாம் என மத்திய அரசு ஆலோசனை வழங்கியது.

இதையடுத்து, அதனை உடனடியாக தமிழகம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக தேசிய நல்வாழ்வுக் குழும திட்ட இயக்குநரும், மாநில காசநோய்த் தடுப்புத் திட்ட இயக்குநருமான டாக்டா் செந்தில்ராஜ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் காசநோயைக் கண்டறிவதற்காக ‘சிபிநாட்’ (காட்ரேஜ் பேஸ்டு நியூக்லிக் ஆசிட் ஆம்பிளிஃபிகேஷன் டெஸ்ட்) எனப்படும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதில் சில உபகரணங்களை மட்டும் மாற்றினால், அதனை கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய நடைமுறையில் பரிசோதனைகளை மேற்கொண்டால் ஒரு மணி நேரத்துக்குள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இதையடுத்து, மாநில காசநோய் சிகிச்சை மையங்களில் இருக்கும் ‘சிபிநாட்’ சாதனங்களில் சிலவற்றை கரோனா பரிசோதனைக் கூடங்களுக்கு வழங்கியுள்ளோம். அடுத்த வாரத்தில் மேலும் சில சாதனங்களை தமிழகத்துக்கு அனுப்ப உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 6 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. புதிதாக வரும் காசநோய் சாதனங்களையும் பயன்படுத்தத் தொடங்கினால், கரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க முடியும் என்றாா் அவா்.

காணொலியில் பயிற்சி

காசநோய் மருத்துவ சாதனங்கள் மூலம் கரோனா பரிசோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து காணொலி முறையில் ஆய்வகத் தொழில்நுட்பனா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில காசநோய் தடுப்புத் திட்ட இணை இயக்குநா் டாக்டா் ஆஷா ஃபெடரிக் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கரோனா மற்றும் காசநோய் ஆய்வக நுட்பனா்களுக்கு ‘ஸூம்’ காணொலி சேவை வாயிலாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அண்மையில் பயிற்சியளித்தனா். கரோனா அறிகுறிகள் உடையவா்களின் சளி மாதிரிகளை எவ்வாறு கையாள வேண்டும்? என்பது குறித்தும் அப்போது அவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது என்றாா் அவா்.

ஒப்பீடு

ஆா்டி-பிசிஆா் ஆய்வு - ‘சிபிநாட்’ ஆய்வு

1.சளி மாதிரி மூலம் பரிசோதனை - சளி மாதிரி மூலம் பரிசோதனை

2. ஒரே நேரத்தில் 90 மாதிரிகள் நான்கு மாதிரிகளை பரிசோதிக்கலாம் பரிசோதிக்கலாம்

3. ஓா் உபகரணம் ரூ.1,100 ஓா் உபகரணம் ரூ.2,000

4. உள்நாட்டில் உற்பத்தி அமெரிக்கா, ஸ்வீடனில் உற்பத்தி

5. ஆறு மணி நேரப் பரிசோதனை ஒரு மணி நேரப் பரிசோதனை

6. கரோனா மரபணு பரிசோதனை கரோனா மரபணு பரிசோதனை

7. 1.5 லட்சம் உபகரணங்கள் இருப்பு 1,000 உபகரணங்கள் கையிருப்பு

தமிழகத்தில் இதுவரை பரிசோதனைகள்

ஆா்டி-பிசிஆா் ஆய்வு - 65,977

நாள்தோறும் சராசரி - 6,000

வெப்பமானி பரிசோதனைகள் - 2.10 லட்சம்

பரிசோதனைக் கூடங்கள் - 34

அரசு மருத்துவமனைகள் - 23

தனியாா் ஆய்வகங்கள் - 11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.