/

நீலகிரியில் தீர்வு காண முடியாமல் தொடரும் பிரச்னை

தமிழகத்திலேயே இதுவரை தீர்க்க முடியாத நிலப் பிரச்னை ஒன்று உண்டென்றால், அது கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நிலவும் செக்ஷன் 17 எனப்படும் நிலங்கள் குறித்த பிரச்னைதான் எனலாம். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:13 am

ஏ. பேட்ரிக்

உதகை: தமிழகத்திலேயே இதுவரை தீர்க்க முடியாத நிலப் பிரச்னை ஒன்று உண்டென்றால், அது கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நிலவும் செக்ஷன் 17 எனப்படும் நிலங்கள் குறித்த பிரச்னைதான் எனலாம். 
கேரள மாநிலம், நிலம்பூர் கோவிலகம் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் கேரளம்  மற்றும் தமிழகத்தின் மலைப் பகுதிகளில் பரவலாக இருந்தன. இந்த நிலப் பகுதிகள் கடந்த 1845-ஆம் ஆண்டு டிசம்பரில் அப்போது ஆட்சியிலிருந்த சிற்றரசர்களால் குத்தகைக்கு விடப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து, காலப்போக்கில் அவர்களிடமிருந்த நிலங்கள் சில பெரிய நிறுவனங்களால் குத்தகைக்கு வாங்கப்பட்டன. இவ்வாறு குத்தகைக்கு வாங்கப்பட்ட பகுதிகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஏராளமான விலை உயர்ந்த மரங்கள்  வெட்டிக் கடத்தப்பட்டன. வனங்களாக இருந்த பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளையும் தோட்டங்களாக மாற்றப்பட்டன.
இந்நிலையில், 1969-ஆம் ஆண்டில் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, நிலம்பூர் கோவிலகத்துக்கு சொந்தமான சுமார் 80,088 ஏக்கர் நிலங்களும் கைப்பற்றப்பட்டு செக்ஷன் 17 என்ற புதிய பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த நடவடிக்கை ஜென்மி சட்டம் என்றழைக்கப்பட்டது. அதுவே ஜென்மம் ஒழிப்பு சட்டம் எனவும் அழைக்கப்படலாயிற்று. ஜென்மம் ஒழிப்பு சட்டத்தின்கீழ் ஜென்ம நிலங்களை அந்தந்த மாநில அரசுகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. கேரள மாநில அரசு தனது கைவசமிருந்த ஜென்ம நிலங்கள் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தது.
ஆனால், தமிழக அரசு இந்நிலங்களில் 28,000 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கத் தீர்மானித்தது. அதில் 12,000 ஏக்கர் நிலங்களை தங்கள் நிலம் என வனத் துறை உரிமை கோரியது. இதையடுத்து,  இந்நிலங்கள் விவாதத்துக்குரிய பகுதிகள் என அறிவிக்கப்பட்டது.
செக்ஷன் 17-இன் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து 9 பெரிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன. 
செக்ஷன் 17 நிலப் பகுதியில் புதிதாக வளர்ச்சித் திட்டங்களோ, விவசாயமோ மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,  இந்நிலங்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பட்டா வழங்கவோ, கையகப்படுத்தவோ யாருக்கும் அதிகாரமில்லை எனவும், ஏற்கெனவே விவசாயம் செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் சிறிதளவு கூட ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது. அதன் பின்னர், உச்சநீதிமன்றம் கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியிட்ட மற்றோர் உத்தரவில்  இந்நிலங்களில் எத்தகைய சட்டவிரோத செயல்களும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் உள்ள செக்ஷன் 17 நிலங்களில் நீண்டகாலமாக விவசாயிகள் பயிர் செய்தும், வாழ்ந்தும் வருகின்றனர். 1969-ஆம் ஆண்டு ஜென்மம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நிலம்பூர் கோவிலகத்திடமிருந்து தமிழகம், கேரளத்தில் கையகப்படுத்தப்பட்ட 80,088 ஏக்கர் நிலங்களில் 19, 000 ஏக்கர் பரப்பில் பெரிய நிறுவன எஸ்டேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. 35,000  ஏக்கரில் சுமார் 16,000  குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலங்களில் வசிப்போருக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. 
இதை வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.  மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நிலப்பட்டா வழங்க முன்வராத நிலையில், தமிழக அரசு அண்மையில் செக்ஷன் 17 நிலங்கள் முழுவதையும் வனத் துறைக்கு மாற்றம் செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் கடந்த ஜனவரி 
8-ஆம் தேதி நிறைவேற்றியுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களின் மீது தொடுத்துள்ள நேரடியான தாக்குதல் என கூடலூர், பந்தலூர் வட்டங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இது தொடர்பாக நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதாவது: தமிழக அரசின் அரசாணைகளில் மலைப் பகுதிகளில் நிலப் பட்டா வழங்கத் தடை, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், வன விலங்குகள், சரணாலய சட்டங்கள், வன உரிமைச் சட்டம் அமலாகாத நிலை என பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது இப்பகுதி மக்களின் நிலைமையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஜென்மம் நிலங்களை வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். மலைப் பகுதிகளில் பட்டா வழங்கத் தடை விதிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
இப் பிரச்னை குறித்து கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி கூறியதாவது: கூடலூரில் உள்ள ஜென்ம நிலங்களை பிரிவு 53ன் கீழ் கொண்டு வருவது குறித்த சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலங்களைப் பிரிவு 53ன் கீழ் கொண்டு வந்தால் ஏழை, எளிய மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படும். எனவே, இந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடக் கூடாது' என்றார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஜென்மம் நிலங்கள் பிரிவு 17 மற்றும் பிரிவு 53 ஆக உள்ளன. இதில், பிரிவு 17 நிலங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். பிரிவு 53 நிலங்கள் முழுவதும் வனத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய சட்டத் திருத்தத்தின்படி வனமாக உள்ள பிரிவு 53 நிலங்கள் மட்டுமே தொழில்நுட்பக் காரணங்களுக்காக பிரிவு 16ஆக மாற்றப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. யாரும் அச்சப்படத் தேவையில்லை. அரசியல் லாபத்துக்காக சிலர் மக்களை திசை திருப்பி வருகின்றனர் என்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத்  தெரிவித்துள்ளார். 
செக்ஷன் 17 நிலங்களுக்கு பட்டா தேவை என்ற குரல் தொடர்ந்து ஒலிப்பதும், தேர்தல் நேரங்களில் இதை நிறைவேற்றித் தருவதாக அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிப்பதும் தொடர்கதையாகி வரும் சூழலில்  எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் செக்ஷன் 17 நிலங்கள் தொடர்பான பிரச்னை பூதாகரமாக எதிரொலிக்கும் என நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.