/

கோயில் கும்பாபிஷேக பிரச்னை: அறநிலையத் துறை செயல் அலுவலர் விடுப்பில் செல்ல முடிவு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள குலத்தவர்களுக்குச் சொந்தமான

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:37 pm

ஆா்.ராதாகிருஷ்ணணன்

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள குலத்தவர்களுக்குச் சொந்தமான குப்பயண்ண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மற்றும் உப தெய்வங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புதிதாகக் கோயில் கட்டப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து முடிந்தது.

கும்பாபிஷேக தேதியை முடிவு செய்வதில் கோயில் குலத்தவர்கள் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது 5.2.2020 தேதியில் கும்பாபிஷேகம் நடத்த சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அனுமதி வழங்கினார். 

இந்நிலையில் வெள்ளக்கோவிலில் உள்ள கோயிலின் செயல் அலுவலர் மு.ரத்தினாம்பாளைத் தொடர்பு கொண்ட உயரதிகாரிகள், நிர்வாக காரணங்களால் அனுமதி வழங்கிய தேதியில் கும்பாபிஷேகம் நடத்த முடியாதென கையெழுத்திட்டு கோயிலில் நோட்டீஸ் ஒட்டுமாறு தெரிவித்தனர். ஆணையர் அனுமதி வழங்கிவிட்டு, தான் கையெழுத்துப் போட்டு தேதியை ரத்து செய்தால் சட்டச் சிக்கல் ஏற்பட்டும் என்பதால் அவர் கையெழுத்துப் போடாமல் நோட்டீஸ் ஒட்டினார்.

இதனைத் தொடர்ந்து தேதியை மாற்றக் கூடாதென நோட்டீஸ் ஒட்டிய செயல் அலுவலரை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது. அரசியல், உயரதிகாரிகள், குலத்தவர்களிடையே மாட்டிக் கொண்ட பெண் செயல் அலுவலர் விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.