/

யானை வழித்தட ரிசார்ட்டுகள் : நீலகிரியில் தொடரும் சிக்கல்

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் கடும் நடவடிக்கைகளால், இம்மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:29 pm

ஏ. பேட்ரிக்


உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் கடும் நடவடிக்கைகளால், இம்மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வனப் பகுதிக்குள் அமைதியான சூழல், சுத்தமான காற்று, விருப்பப்படும் உணவு கிடைக்கும் வசதி, வன விலங்குகளின் வாசம், தொலைபேசி அழைப்புகளின் தொந்தரவின்மை உள்ளிட்ட காரணங்களால் நீலகிரியில் திடீரென வளர்ச்சியடைந்ததுதான் ரிசார்ட் சுற்றுலா.
இத்தகைய ரிசார்ட்டுகளில் வந்து தங்குவோர் யார் என்று மற்றவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு ரகசியமானவையாக, அதிகப்படியான கட்டணங்களுடன் ஒரு சிலருக்கு மட்டுமே ரிசார்ட்டுகள் பரிச்சயமாக இருந்தன. அதனால்தான் பிரபல திரைப்பட நட்சத்திரங்களிலிருந்து, முக்கிய அரசியல் பிரபலங்களின் குடும்பங்கள் வரை தங்கிச் செல்லாத ரிசார்ட்டுகளே இல்லையெனும் அளவுக்கு நீலகிரியில் ரிசார்ட் சுற்றுலா பிரபலமடைந்தது. 
வெளி மாநிலங்களில் ஐ.டி. துறைகளில் பணியாற்றுவோர் அவ்வப்போது குழுக்களாகவும் வந்து செல்வதால் இந்த ரிசார்ட் சுற்றுலா பிரபலமடைந்தது. இதன் காரணமாக மசினகுடி, பொக்காபுரம், செம்மநத்தம் உள்ளிட்ட 15 கிராமங்களில் 120-க்கும் மேற்பட்ட ரிசார்ட் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், யானை வழித்தடப் பிரச்னை 2008 ஆம் ஆண்டிலேயே எழுப்பப்பட்டதாகும். வழக்குரைஞர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், குடியிருப்புகளுக்கு அனுமதி பெற்று வணிக நோக்கிலான ரிசார்ட்டுகளை நடத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் திசை மாறும் யானைகளைப் பாதுகாக்கவும், யானை வழித்தட நிலங்களை மீட்டெடுக்கவும் கோரி இந்த வழக்கை அவர் தொடுத்திருந்தார். 
இந்த வழக்கில் 2009இல் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், யானை வழித்தட நிலங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. யானை வழித்தட நிலங்களாக சுமார் 580 ஏக்கர் மட்டுமே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதன்பின்னர் சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பை யானை வழித்தட நிலங்களாக அறிவித்துள்ளதால் இதுதொடர்பாக அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்தி யானை வழித்தட நிலங்கள் எவை என்பதை உறுதி செய்ய வேண்டுமென, தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
சுமார் 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், யானை வழித்தட நிலங்களிலுள்ள கட்டடங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ஆட்சியர் எடுத்த கணக்கெடுப்பில், 39 ரிசார்ட் வளாகங்கள், 390 குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி மற்றும் மருத்துவமனைகளுடன், 77 விவசாய நிலங்களும் யானை வழித்தடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
இதில் குடியிருப்பு என அனுமதி பெற்றுவிட்டு வணிக நோக்கிலான ரிசார்ட்டுகளாக 39 ரிசார்ட் வளாகங்கள் இயங்குவது கண்டறியப்பட்டிருந்ததால், அவற்றை 48 மணி நேரத்துக்குள் சீல்' வைக்க வேண்டுமென கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
இதில் சம்பந்தப்பட்ட 39 ரிசார்ட் வளாகங்களில் 27 பேர் நீதிமன்றத்துக்கே வரவில்லை. 12 பேர் மட்டும் தங்களிடம் ரிசார்ட்டுகளுக்கான ஆவணங்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தனர். அதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகாத 27 ரிசார்ட் வளாகங்களுக்கு உடனடியாக சீல்' வைக்கும்படியும், 12 ரிசார்ட்டுகளின் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதைத் தொடர்ந்து 27 ரிசார்ட் வளாகங்களுக்கு திங்கள்கிழமை காலை வரை சீல்' வைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 12 ரிசார்ட்டுகளின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் திங்கள்கிழமை இரவு வரை தொடர்ந்தன. அப்பணிகள் முழுமையாக முடிவடையாததால் இந்த 12 ரிசார்ட் வளாகங்களின் மீதான நடவடிக்கை செவ்வாய்க்கிழமைதான் தெரிய வரும். தற்போது ஆய்விலுள்ள 12 ரிசார்ட்டுகளில், பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான ரிசார்ட் வளாகமும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் போராட்டத்தை அவர்தான் முன்னின்று நடத்தி வருகிறார்.
இதனிடையே சிங்காரா முதல் சீகூர் வரையிலான இந்த யானை வழித்தட நிலப்பரப்பில் உள்ள ரிசார்ட்டுகளை சீல்' வைப்பதற்கு எதிராக, மசினகுடி உள்ளிட்ட 15 கிராம மக்கள் 3 நாள் முழு அடைப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர். ரிசார்ட்டுகளை மூடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தனியார் ஜீப் ஓட்டுநர்கள், வணிகர்கள், அனைத்து ரிசார்ட் நிர்வாகங்களும் பங்கேற்றதோடு தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தும் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். அத்துடன் தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கவன ஈர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர். 

ரிசார்ட்டுகளுக்கு

ரிசார்ட்டுகளுக்கு


யானை வழித்தட நிலங்களை மீட்டெடுப்பது ஒன்றே முக்கியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், யானை வழித்தட நிலங்களிலுள்ள 39 ரிசார்ட் வளாகங்களைத் தவிர எஞ்சியுள்ள கட்டடங்கள், விவசாய நிலங்கள் குறித்து தெளிவாக ஏதும் தெரிவிக்கப்படாததால் மசினகுடி உள்ளிட்ட 15 கிராமங்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. 
12 ரிசார்ட் வளாகங்களின் மீது அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்தே எஞ்சிய பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யானை வழித்தட நிலங்கள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.