ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்ட தாமிரவருணி!

வரலாற்று சிறப்பு மிக்கதும், தொன்மை வாயந்த நதியுமான தாமிரவருணியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் அதன் தடம் தொலைந்து நிற்கிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:46 pm

ஆர். முருகன்

வரலாற்று சிறப்பு மிக்கதும், தொன்மை வாயந்த நதியுமான தாமிரவருணியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் அதன் தடம் தொலைந்து நிற்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையில் தோன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவநதியாக விளங்குவது தாமிரவருணி. இதுமட்டுமல்லாது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பிரதான பாசனமாகவும் விளங்குகிறது.
இதன் பாசனப் பகுதி 5,942 சதுர கிலோ மீட்டர். நீர்ப்பிடிப்பு பகுதி 4,500 சதுரகிலோ மீட்டர். 125 கி.மீ. நீளமுள்ள இந்த நதியானது 75 கி.மீ. தொலைவு திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,725 மீட்டர் உயரமுடையது. 8 நீர்த் தேக்கங்கள், 11 கால்வாய்கள், 12 துணை ஆறுகளும் உள்ளன. 71,064 கிணறுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. திருநெல்வேலியில் தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம்,புன்னைக்காயல் வரை பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது. 
நதியின் தேவை: தாமிரவருணி நதியின் வடிநிலத்தில் சராசரி ஆண்டு மழையளவு 1082 மி.மீ. நதியின் மொத்த வடிநிலப்பரப்பு 5,969 சதுர கி.மீ. இதில் 5,317 கி.மீ. (89%) திருநெல்வேலி மாவட்டத்திலும் 652 சதுர கி.மீ. (11%) தூத்துக்குடி மாவட்டத்திலும்உள்ளது. திருநெல்வேலியில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
நதியின் வடிநிலப்பகுதியின் மொத்த நிலத்தடி நீர் இருப்பு 744.19 மில்லியன் கன மீட்டர். நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் அளவு 1,375.36 மில்லியன் கன மீட்டர். மொத்தம் 2119.55 மில்லியன் கன மீட்டர். இதில் பாசனத்துக்கு 2,645.00 மில்லியன் கன மீட்டர்; வீட்டு உபயோகத்துக்கு 48.72 மில்லியன் கன மீட்டர்; தொழிற்சாலைகளுக்கு 32.98 மில்லியன் கன மீட்டர்; கால்நடை, மீன் வளர்ப்பு மற்றும் இதர உபயோகங்களுக்கு 21.32 மில்லியன் கன மீட்டர் என மொத்தம் 2,748.02 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், இப்போதைய சூழலில் 628.47 மில்லியன் கன மீட்டர் பற்றாக்குறை உள்ளது.
74 இடங்களில் ஆக்கிரமிப்பு: இந்த சூழலில் இயற்கை மற்றும் செயற்கை ஆக்கிரமிப்புகளால் நதியின் அகலம் 74 இடங்களில் சுருங்கிவிட்டது. செயற்கைக் கோள் கேமரா உதவியுடன் நதியில் 35 கி.மீ. தொலைவுக்கு ஆய்வு செய்ததில் 2006ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுக்குள் 33 சதம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரோ நிறுவனம் கடந்த 2005இல் விண்ணில் செலுத்திய காட்ரோசாட்1 என்ற செயற்கைக் கோள் உபயத்தில் டிஜிட்டல் எலிவேசன் முறையில், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய நிலப்பரப்பு தரவுகளை ஆதாயமாக வைத்து இந்த ஆய்வை திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில், 2006ஆம் ஆண்டு 4,75,345 சதுர மீட்டர் இருந்த ஆக்கிரமிப்புகளின் அளவு 2014இல் மட்டும் 7,09,642.82 சதுர மீட்டாராக உயர்ந்துள்ளது. மொத்தம் 33 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இதில், இயற்கையாக வளர்ந்த மரங்கள், முட்புதர்கள், மணல் திட்டுகள், அமலைச் செடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளும், மனிதர்களால் செயற்கையாக கட்டடங்கள், செங்கல் சூளைகள், குடிசைகள் என பல்வேறு நிலைகளிலான ஆக்கிரமிப்புகளும் அடங்கியுள்ளன. குறிப்பாக தருவையில் தாரமிரவருணியின் அகலம் 164 மீட்டரிலிருந்து 44 மீட்டராக சுருங்கிவிட்டது. சுத்தமல்லியில் 58 மீட்டராகவும், கோபாலசமுத்திரத்தில் 78 மீட்டராகவும் சுருங்கியுள்ளது. கருங்குளம், கீழநத்தம் பகுதிகளில் நதியின் அகலத்தை தேடும் அவலநிலை வந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 33 சதவீத ஆக்கிரமிப்புகள் என்று கணக்கிட்டால், ஆய்வுக்கு பிந்தைய மேலும் 3 ஆண்டுகளை சேர்த்து 2017இல் இந்த விகிதாசாரம் பாதிக்குப் பாதியாக அதிகரித்திருக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர் தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத்தினர்.
செப்பறை, வண்ணார்பேட்டை பாலம், கருங்குளம் பகுதியில் 2006இல் 6711 சதுர மீட்டராக இருந்த ஆக்கிரமிப்புகள் 2014இல் 7,842 ஆக அதிகரித்துள்ளது. சட்ட விரோத மணல் கடத்தலும் இதற்கு காரணமாக உள்ளது.
இதே பகுதிகளில் சில இடங்களில் 2500 சதுரமீட்டராக இருந்த ஆக்கிரமிப்புகள் 8542 சதுர மீட்டராக 70 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது. மேலும்,2006 ஆம் ஆண்டில் 27558 சதுர மீட்டராக இருந்த ஆக்கிரமிப்பு 2014 ஆம் ஆண்டில் 59109 சதுர மீட்டராக அதிகரித்துள்ளது.
தீர்வு என்ன? இதுதொடர்பாக, திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக் கழக டீன் ஜி. சக்திநாதன் கூறியது:
எங்களது பல்கலைக் கழக மாணவர்கள் 2006 முதல் 2014 வரை நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்ததில் பெரும்பான்மையாக 33 சதவீதமும், ஒரு சில இடங்களில் 70 சதம் வரையிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
செயற்கை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், நதியின் ஒட்டுமொத்த 125 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. தொலைவில் எடுக்கப்பட்ட ஆய்விலேயே 3 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. 
நதி முழுமையும் கணக்கிட்டு அவற்றை அகற்ற தொடர் திட்டமானது அவசியமானது. அதற்கான பரிந்துரையை ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தொடர்ச்சியான திட்டப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.