அரசியல் கலப்பில்லாத குடிமராமத்து
நீர் நிலைகளைப் பாதுகாக்க பண்டைய காலத்தில் இருந்த குடிமராமத்து முறை தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.


நீர் நிலைகளைப் பாதுகாக்க பண்டைய காலத்தில் இருந்த குடிமராமத்து முறை தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் எவ்வாறு செயல்படுத்தப்பட்டதோ, அதேபோன்று அரசியல் தலையீடு இல்லாமல் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயத்தின் அடிப்படைத் தேவையாக நீர் ஆதாரம் உள்ளது. நீர் ஆதாரங்களாக விளங்கிய ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் பலவும் வருவாய்த் துறை ஆவணங்களிலேயே இல்லை. அன்றைக்கு கண்மாய், ஏரி, குளம், ஊரணி என பல்வேறு பெயர்களில் நம் முன்னோர்கள் அமைத்த நீர் நிலைகள் அனைத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை, நிலவியல் தன்மை அறிந்து உருவாக்கப்பட்டவை.
தமிழகத்தில் வற்றாத உயிர் ஆறுகள் என எவையும் இல்லாத சூழலில், பருவ காலத்தின்போது பெய்யும் மழைநீர் மட்டுமே தமிழகத்தின் ஒற்றை நீர் ஆதாரமாக இன்றளவும் உள்ளது. அந்த நீரை சரியான முறையில் சேமித்து, ஆண்டு முழுவதும் பயன்படுத்த ஏற்றாற்போல் பல்வேறு தொழில்நுட்ப உதவியோடு மன்னர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை இப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
குறைந்துபோன பாசனப் பரப்பு: இக் கட்டமைப்புகளில் அனைத்தும் கி.மு. 8 முதல் 5-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை என வரலாறும், கல்வெட்டுச் சான்றுகளும் கூறுகின்றன. 17-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் காலூன்றுவதற்கு முன் வரை அனைத்து நீர்நிலைகளும் மக்களின் நிர்வாகத்தால் செம்மை பெற்று இருந்தன.
ஆண்டுக்கு ஒருமுறை ஊர்கூடி புனரமைப்பு செய்யும் குடிமராமத்து நடக்கும். ஆனால், ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இது மறைந்துபோனது. இதனால், நீர் நிலைகளுக்கும், மக்களுக்கும் இருந்த தொடர்பு துண்டித்துப்போனது. மேலும், நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்புக்கு அதுவே தொடக்கப் புள்ளியாகவும் அமைந்துவிட்டது.
தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மூலமான நீர்ப் பாசனப் பரப்பு 1950-ஆம் ஆண்டு 7 லட்சம் ஹெக்டேர். ஆனால், 2015-இல் 4 லட்சம் ஹெக்டேருக்கும் கீழ் குறைந்துவிட்டது. பாசன நிலங்கள் குறைந்ததால், வேளாண் பொருளாதாரமும், கண்மாய்களைச் சார்ந்து வாழ்ந்த கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்நிலையும் சீர்குலைந்தது.
இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. 1960-இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஏறத்தாழ 40 சதவீதத்தைக் கொண்டிருந்த விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள், 2015-இல் 10 சதவீத்துக்கும் கீழ் குறைந்து விட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் நீர்ப்பாசனப் பரப்பு 50 சதவீதம் அளவுக்குக் குறைந்து, விளைநிலங்கள் விலை நிலங்களாகி விட்டன. இதனால் கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழ்ந்தோர் பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு புலம்பெயர்ந்து நகருக்குச் சென்றுவிட்டனர்.
அழிந்துபோன கிராமப் பொருளாதாரம்: தமிழகத்தில் காவிரி, தாமிரவருணி, வைகை, தென்பெண்ணை உள்ளிட்ட 17 ஆற்றுப் படுகைகளில் அணைகளின் கொள்ளளவு சுமார் 21 லட்சம் மில்லியன் கன அடி, ஆனால், தமிழகத்தில் பரவலாக உள்ள 40,000 ஏரி, குளங்கள், கண்மாய்களின் நீர் கொள்ளளவு சுமார் 17 லட்சம் மில்லியன் கன அடி. பெரிய அணைகளைக் காட்டிலும் இதுபோன்ற சிறிய நீர்நிலைகள் ஆபத்தில்லாதவை. மேலும், மண்ணுக்கும், சூழலுக்கும் மிகுந்த பயன்தரக் கூடியவை.
சுதந்திரத்துக்குப் பிறகு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை, தொடர் பராமரிப்பின்மை, வண்டல் படிவு, சிதிலமடைந்த கரைகள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் ஏரி, குளங்களைச் சார்ந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிட்டது.
ஏரிகள், குளங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பயன்களை தொடர்ந்து அளித்து வருகின்றன. பயிர் விளைச்சல், மீன் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு என பல்வேறு நேரடி வருவாய் மூலமாக ஊராட்சிகள் வலுப்பெறுகின்றன. இதனால் கிராமப் பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது. இதுமட்டுமின்றி, நிலத்தடி நீர் அதிகரித்தல், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் பெருகுதல் போன்ற விவசாயம் எதிர்நோக்கும் சவால்களையும் வேரறுக்கிறது.
தேவை குடிமராமத்து: ஆண்டுதோறும் ஏரிகள், குளங்கள், நீர்வழிப் பாதைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அங்கு பணிகள் நடைபெற்றது என்பதற்கான அடையாளம் மட்டும் இருக்குமே தவிர, பயன் ஏதும் இருக்காது. இப்படி மக்கள் பணம் வீணடிப்பதற்குப் பதிலாக, நம்முடைய முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்த குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
குடிமராமத்து என்பது கிராமங்களில் ஏரி, குளம், கண்மாய், கால்வாய்கள் போன்ற நீர் நிலைகள் அனைத்துமே அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கட்டுப்பாட்டில்தான் முன் இருந்தன. ஆண்டுதோறும் கோடை காலத்தில் வீட்டுக்கு ஒருவர் என ஏரி, குளங்களைத் தூர் வாருவார்கள். இதற்குதான் குடிமராமத்து என்று பெயர்.
இதன்மூலம் நீர் நிலைகளைத் தூர்வாருவதற்கு வெளியிலிருந்து நிதி உதவி தேவையில்லை. நீர் நிலைகளில் மழை நீர் தேங்கி பாசன நீர், நிலத்தடி நீர் உயரும், தூர் வாருவதற்காக தோண்டப்பட்ட சத்தான வண்டல் மண், வயல்களுக்கு உரமாக மாறும்.
நீர் நிலைப் பராமரிப்பை, பைசா செலவில்லாமல் ஒரு புரட்சியாகவே நடத்தி வந்தனர் மக்கள். ஆனால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் போன பிறகு தூர்வாரப்படாததோடு, ஆக்கிரமிப்புகளும் பெருகிவிட்டன.
விவசாயிகள் ஒன்றுபட வேண்டும்: இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலர், முன்னோடி விவசாயி எம்.ஜி.ராஜேந்திரன் கூறியது, இப்போது நீர் நிலைகளை புனரமைக்கும் வகையில் பண்டைய குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இத் திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் 1,159 பணிகள் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குடிமராமத்துப் பணி மக்கள் பங்களிப்புடன் நடைபெற வேண்டும். இப்போது உடல் உழைப்பு மூலம் பங்களிப்பைப் பெற வேண்டிய தேவை இல்லை. இயந்திரங்கள் மூலம் பணிகளை எளிதிலும், விரைவாகவும் செய்து முடிக்க முடியும். இதனால் பொதுப்பணித் துறை மேற்பார்வை அலகாக மட்டுமே இருந்து திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை, பாசனதாரர்கள் வசமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும். குடிமராமத்து நடக்கும் ஒவ்வொரு ஏரி, குளங்களிலும் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறைப் பொறியாளரை செலவின அலுவலராக நியமித்து, வங்கிக் கணக்கு மூலம் நிதியை செலவு செய்யலாம்.
குடிமராமத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஏரியில் உள்ள அனைத்து தண்ணீர் வரத்து வாய்க்கால்களையும் முழுமையாக தூர் வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும், இரண்டாவதாக ஏரி, குளங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, கலிங்கு, மதகுகளைச் சீரமைக்க வேண்டும். விவசாயம் என் காலத்திலேயே அழிந்துவிட்டது என்ற அவச்சொல் வரக் கூடாது என்பதை இப்போதுள்ள விவசாயிகள் உணர்ந்து, ஒருங்கிணைந்து குடிமராமத்துப் பணிகளை அரசியல் கலக்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
விவசாயிகள் பங்களிப்பு: குடிமராமத்து திட்டம் குறித்து பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் கூறியது, குடிமராமத்தில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான திட்ட மதிப்பீட்டில் பணிகள் செய்யப்படவுள்ளன. இதற்காக பாசனதாரர்கள் 10 சதவீதப் பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். குடிமராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.
வரும் 2017-18-ஆம் ஆண்டில் குடிமராமத்துப் பணிக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அப்போது ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் குடிமராமத்துத் திட்டத்தில் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...