கானல் நீராகி வரும் தொழிற்கல்வித் திட்டம்
மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் 1937, அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டில் மகாத்மா காந்தியால் அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி கொள்கைத் திட்டம் மெல்ல மெல்ல நீர்த்துப் போகும் நிலைக்கு வந்துள்ள


மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் 1937, அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டில் மகாத்மா காந்தியால் அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி கொள்கைத் திட்டம் மெல்ல மெல்ல நீர்த்துப் போகும் நிலைக்கு வந்துள்ளது.
ஏட்டுப் படிப்புடன், உடல் உழைப்பும் தேவை என்பதை உணர்ந்து பொது அறிவு, தாய்மொழிக் கல்வி, கைத் தொழில் என மூன்று நிலைகளில் கல்வித் திட்டத்தை வடிவமைக்க வேண்டும் எனவும் 1937இல் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பின்னர், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1948-49இல் அமைக்கப்பட்ட டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பல்கலைக் கழக கல்விக் குழுவும், தொழிற்கல்வி அவசியம் என பரிந்துரைத்தது.
தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் 1976இல் அமைக்கப்பட்ட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்சிஇஆர்டி) பரிந்துரை, 1977இல் பி. சபாநாயகம் தலைமையிலான குழுவின் பரிந்துரை, 1978இல் மால்கம் எஸ். ஆதிசேஷய்யா தலைமையிலான குழுவின் பரிந்துரை, 1986இல் கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரை என அனைத்துமே தொழிற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தின. இதுமட்டுமல்லாது கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, கே. கோபாலன், டாக்டர் லாரன்ஸ் ஆகியோரது தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களும் தொழிற்கல்வி அவசியத்தை உணர்த்தின. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் தொழிற்கல்வி திட்டம் இப்போது கானல் நீராகி வருகிறது.
1955இல் வெளியிடப்பட்ட தமிழக அரசாணையில் பொதுக்கல்வி, தொழிற்கல்வி என இருமுனைக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 1965-66இல் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்புகளில் இரு வகையான கல்வி அமல்படுத்தப்பட்டது. பொதுக் கல்வி என்றும், அலுவலக செயலரியல், பொறியியல், விவசாயம், மனையியல், இசை, ஓவியம், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்டவையும் இருமுனை பாடங்களாக அறிமுகம் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 1978-79இல் தமிழகத்தில் இருந்த 709 மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி அறிமுகம் செய்யப்பட்டபோது 1.14 லட்சம் மாணவர்களில் 24 ஆயிரம் பேர் தொழிற்கல்வி கற்றனர் (21.49 சதவீதம்). 66 வகையான தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர், 1985-86இல் 44 பாடப் பிரிவுகளாக குறைக்கப்பட்டன. 2009-10ஆம் கல்வியாண்டு முதல் 12 பாடப் பிரிவுகளாக சுருங்கிவிட்டன.
பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும், வேளாண் செயல்முறைகள், உணவு மேலாண்மையும், குழந்தை வளர்ப்பும், நர்சிங், அலுவலக செயலரியல், கணக்குப்பதிவியலும், தணிக்கையியலும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆட்டோ மெக்கானிக் என 12 வகையான தொழிற்கல்வி பாடங்களானது கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையால் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 1,605 மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே தொழிற்கல்வி கற்றுத் தரப்படுகிறது. இந்தப் பள்ளிகளிலும் 600-க்கும் மேற்பட்ட தொழிற்கல்விஆசிரியர் காலிப் பணியிடங்களால் அத்தகைய பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தர முடியாத நிலையே உள்ளது. மேலும், 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. இப்போது பணியில் உள்ள ஆசிரியர்களும் அடுத்த 5 ஆண்டுகளில் பணிநிறைவு பெறும் நிலையில் உள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 95 சதவீத பள்ளிகளில் தொழிற்கல்வியே இல்லாத நிலை உருவாகும் (இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 1.50 லட்சம் மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் நிலை உள்ளது).
பட்டம் படித்த மாணவர்களே வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வரும் சூழலில் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி மட்டுமே மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வடிகாலாக அமையும். எனவே, நிகழாண்டு தரம் உயர்த்தப்படவுள்ள 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவுகள் தொடங்க வேண்டும். 600 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், புதிய பணியிடங்களுக்கும் விரைந்து ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர், மாணவர் சமுதாயத்தின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலர் செ.நா. ஜனார்த்தனன் கூறியது: 1978-79இல் தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும் என்பதற்காக 4,324 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்களால் அனைவரும் பணிவரன்முறைப்படுத்தப்பட்டனர். பின்னர், 2007இல் 435 ஆசிரியர்கள் காலமுறை ஊதியத்தில் நிர்ணயிக்கப்பட்டனர். இதன்பிறகு 10 ஆண்டுகளாக பணிநியமனம் இல்லை. புதிய பணியிடமும் உருவாக்கப்படவில்லை. இன்றைய சூழலில் 600 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களை விரைந்து பூர்த்தி செய்யவேண்டும். வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்க அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவுகளை தொடங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...