பணத்துக்காக தனியார் நிறுவன அதிகாரி கடத்தல்: சினிமா பாணியில் போலீஸார் அதிரடி
சென்னையில் ரூ.17 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை: சென்னையில் ரூ.17 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ராமன் (32). அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். ராமன் காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டுக்குச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அவரை காஞ்சிபுரத்தில் ஒரு மர்மகும்பல் காரில் கடத்திச் சென்றது. இதைத் தொடர்ந்து அந்தக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ராமனின் செல்லிடப்பேசியின் மூலம் அவரது மனைவியைத் தொடர்பு கொண்டு ரூ.17 லட்சம் கொடுத்தால் ராமனை விடுவிப்போம் இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டினராம்.
இதைத் தொடர்ந்து மேலும் இருமுறை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ரூ.17 லட்சத்தை எடுத்துக் கொண்டு சென்னை அசோக்பில்லர் அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு தனியாக வருமாறு ராமனின் மனைவியிடம் கூறியுள்ளனர். இதற்கிடையே ராமனின் மனைவி தனது கணவர் கடத்தப்பட்டது குறித்தும், அசோக்பில்லர் அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு பணம் எடுத்து வரச் சொன்னது குறித்தும் காஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதையடுத்து போலீஸார் அசோக்நகர் காவல்நிலையத்துக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் ராமனின் மனைவியிடம் ரூ.17 லட்சம் பணத்தை கொடுத்தனுப்பினர். அவர் பணத்தை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் கூறியபடி அசோக்பில்லர் அருகே உள்ள விடுதிக்குச் சென்றார்.
அப்போது பணப்பெட்டியை வாங்குவதற்காக மர்ம கும்பலைச் சேர்ந்த இருவர் வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் அந்த இருவரையும் கைது செய்தனர். இதைப் பார்த்து மர்ம கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தப்பியோடினர். அவர்களையும் போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராமனை போலீஸார் மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...