திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வெறிநாய்க் கடி உயிரிழப்பு: ஆசியாவில் இந்தியா முதலிடம்!

வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கையில், ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:27 pm

கே.விஜயபாஸ்கா்

வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கையில், ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ரேபிஸ் உயிர்ப் பலி எண்ணிக்கையில் ஆசிய அளவில் இந்தியா முதலிடத்தையும், வங்கதேசம் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. இந்தியாவில் வெறிநாய்க் கடியால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வெறிநாய்களை அழிப்பது அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. பெரும்பாலான நகராட்சிகளில் கருத்தடை வசதிகூட முழுமையாக இல்லை. இதனால், நாய்க் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரேபிஸ் நோய் 90 சதவீதம் வெறிநாய்கள் கடிப்பதன் மூலம் ஏற்படுகிறது. 10 சதவீதம், எலி, பூனை கடித்தால் ஏற்படும். வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவீதம் இறக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அதைத் தடுக்க மருத்துவச் சிகிச்சை முறைகள் உள்ளன.

இதுகுறித்து அரசு மருத்துவர் எம்.ராஜேந்திரன் கூறியதாவது:
நாய், பூனை, மாடுகள் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், வீட்டுப் பிராணிகளைக் கையாள்பவர்கள் முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அவர்கள் 3 முறை தடுப்பூசிகள், அதாவது முதல் நாளில் ஒன்று, 3-ஆவது நாளில் ஒன்று, 28-ஆவது நாளில் ஒன்று எனப் போட்டுக் கொண்டால் போதும். வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முறை கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

வெறிநாய் கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்பு போட்டு ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும்போது மேலும் காயம் ஏற்படாத வகையில் கழுவ வேண்டும். பின்னர், அதன் மீது எந்தக் கட்டும் போடக் கூடாது. சுண்ணாம்பு, காபி பொடி போன்றவற்றையும் வைக்கக் கூடாது.

நாயின் வாயில் உள்ள உமிழ்நீரில்தான் ரேபிஸ் என்ற வைரஸ் கிருமி உற்பத்தி ஆகிறது. ஒருவரை நாய் கடிக்கும் போது, கடிபடக் கூடிய இடத்தில் அதன் உமிழ்நீர் உள்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான், வெறிநாய் கடித்ததும் முதலில் கடிபட்ட இடத்தை சுத்தம் செய்வது அவசியம்.

சுத்தம் செய்ததும், முடிந்தவரை அன்றைய தினமே தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மறு நாளாவது கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட நாள்களுக்குள் 5 முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், வெறிநாய் கடித்துக் குதறியிருந்தால், அந்த நபர் முதலில் கடிபட்ட இடத்தை சுத்தமாகக் கழுவுவதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், எதிர்ப்பு ஊசியும் (இமினோ குளோபின்) உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும்.

வெறிநாய் கடித்துக் குதறியிருந்தால் அந்த நபருக்குப் போடப்படும் தடுப்பூசி மருந்து உடலில் செயலாற்ற சிறிது கால அவகாசம் எடுத்தாலும், எதிர்ப்பு ஊசி உடனடியாக ஒரு சில நாள்கள் வரை பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கச் செய்யும்.
இந்தச் சிகிச்சை முறைகளைச் சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால், வெறிநாய் கடித்தவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், வலிப்பு ஏற்படும். தண்ணீரைக் கண்டதும் பயம் (ஹைட்ரோ போபியா) ஏற்படும்.

தண்ணீர் தாகம் எடுத்தாலும், அதைக் குடிக்க முடியாது. மேலும், வெறிநாய் கடித்ததில் பாதிப்புக்குள்ளானவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். எனவே, முறையான சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டால், ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்றார் அவர்.

சாலையில் திரியும் நாய்கள்: இரவு 10 மணிக்குப் பிறகு நகரின் சாலைகளில் நடந்து செல்வோர் கட்டாயமாக நாய்களின் அச்சுறுத்தலுக்கோ, நாய் கடிபட்டு சிகிச்சை பெற்றவர்களாகவோ இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள நாய்களில் 65 சதவீத நாய்கள் சாலைகளில்தான் சுற்றித் திரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், தெரு நாய்களின் நடமாட்டத்தைக் குறைப்பதன் மூலமே, நாய்க் கடியால் பொதுமக்கள் பாதிப்படைவதைத் தடுக்க முடியும். இதற்காக சட்ட ரீதியான வழிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்து, அவற்றை மாநில அரசுகள் செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றார் நாமக்கல்லைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். பிரணவகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.