/

தரமான ஷூ வழங்காததால் காவலர்கள் அவதி

காவல் துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு அரசு சார்பில் ஷூ, ஆடை, தடி (லத்தி), தொப்பி ஆகியவை வழங்கப்படுகின்றன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:45 pm

வி. முத்துராமன்

காவல் துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு அரசு சார்பில் ஷூ, ஆடை, தடி (லத்தி), தொப்பி ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றில், ரப்பரால் வடிவமைக்கப்பட்ட ஷூக்களை போலீஸார் தொடர்ந்து அணிவதால், காலில் அரிப்புத்தன்மை ஏற்படுவதுடன் கொப்புளங்களும் உருவாகின்றன. எனவே, தரமான ஷூக்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது லார்டு மெக்காலேயால் காவல் துறை சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் காவலர்கள் மிடுக்குடன், தனித் தன்மையுடன் அனைவருக்கும் உதாரணமாகத் திகழ வேண்டும் என்பதற்காக அரைக்கால் டவுசர், ஷூ, தடி போன்றவை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, உடையில் மட்டும் மாற்றம் செய்து முழுக்கால் பேண்ட்டாக வழங்கி வருகின்றனர்.
தமிழகக் காவல் துறையில் 13 பட்டாலியன் காவலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதப் படைக் காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் என சுமார் 1.20 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு வார விடுமுறை, விழாக் கால விடுறை எதுவும் கிடையாது. அதேபோல, தினமும் எத்தனை மணி நேரம் பணி என்ற வரன்முறையும் கிடையாது.
பணியின் போது கட்டாயம் ஷூ அணிந்திருக்க வேண்டும். இதனால், இவர்கள் இரவு, பகலாக ஷூ அணிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆண்டுதோறும் ஷூ, உடை, தொப்பி, தடி ஆகியவை அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாயிலாக வழங்கப்படுகின்றன.
காவலர்களுக்கு வழங்கப்படும் ஷூக்கள் தரம் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ரப்பரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஷூவை தொடர்ந்து 5 மணி நேரம் அணிந்திருந்தால், வெப்பத்தன்மை அதிகரித்து காலின் மேல் புறத் தோல்களில் அரிப்பு ஏற்படுவதால் தோல் நோய் பரவுகிறது.
மேலும், காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களில் பெரும்பாலானோர் சுமார் 40 வயதைக் கடந்தவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் உள்ளதால், இதுபோன்ற ஷூக்களை தொடர்ந்து அணிவதால் கால்கள் வியர்க்க தொடங்கி மயக்க நிலையை அடைகின்றனர். இதன் காரணமாக, சில போலீஸார் வேறு வழியின்றி கடைகளில் பணம் கொடுத்து ஷூக்களை வாங்கி அணிந்து வருகின்றனர்.
ஆனால், சில காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உயர் அதிகாரிகள், இதுபோன்று கடைகளில் ஷூ வாங்கி அணிந்து வரும் காவலருக்கு அனுமதி தருவதில்லை.
இதனால், ஏற்கனவே விடுமுறை மற்றும் ஓய்வின்றி பணிபுரியும் காவலர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். எனவே, தரமான ஷூக்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர்(பொ) துரைராஜ் கூறியதாவது:
காலில் ஷூ அணிந்து கொள்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஷூக்களை கழற்றி மாட்டுவதால் பெரிய பிரச்னை இல்லை. சர்க்கரை நோய் பாதித்தவர்கள் ஷூ தொடர்ந்து அணியும் போது, அதிக வெப்பத்தின் காரணமாக காலில் கொப்புளங்கள் ஏற்படுவதோடு, நரம்புகள் சுருண்டு விடுவதற்கும் வாய்ப்புண்டு. தரமான ஷூக்கள் அணிவதால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.