பாதை விரிவாக்கம்: 18 ஆண்டுகளாகப் போராடும் தியாகி குமரனின் வாரிசுகள்
அரசு கொடுத்த நிலத்துக்கான பாதையை விரிவாக்கம் செய்யக் கோரி, 18 ஆண்டுகளாக திருப்பூர் குமரனின் வாரிசுகள் போராடி வருகின்றனர்.


அரசு கொடுத்த நிலத்துக்கான பாதையை விரிவாக்கம் செய்யக் கோரி, 18 ஆண்டுகளாக திருப்பூர் குமரனின் வாரிசுகள் போராடி வருகின்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த எண்ணிலடங்கா தியாகிகளில் முதன்மை இடத்தில் இருப்பவர் திருப்பூர் குமரன். உயிர் பிரியும் நிலையிலும், தாய்நாட்டின் கொடியைக் கையில் தூக்கிப் பிடித்து, அதன் மானத்தைக் காத்ததால் கொடி காத்த குமரன் என இன்றும் போற்றப்படுகிறார்.
அன்றைய கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சாதாரண நெசவு குடும்பத்தில் 4.10.1904-இல் நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் திருப்பூர் குமரன். பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் குமாரசாமி. விடுதலைப் போரில் ஈடுபட்டு திருப்பூரில் அமரர் ஆன பிறகு, திருப்பூர் குமரன் என அவரை அழைக்கத் தொடங்கினர்.
நெசவுத் தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால் மாற்றுத் தொழில் தேடி ஈரோடு, பள்ளிப்பாளையம் போன்ற ஊர்களில் சில காலம் வாழ்ந்தார். பின்னர், திருப்பூர் சென்று தனியார் பஞ்சாலையில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
திருப்பூரில் 1932, ஜனவரி 10-இல் நடைபெற்ற விடுதலைப் போராட்டப் பேரணியில் பங்கேற்ற போது காவலர்களால் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் 11.1.1932-இல் காலமானார்.
இந்த நிலையில், தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது, தியாகி குமரனின் தியாகத்தைக் கெüரவிக்கும் வகையில், குமரனின் தம்பி ஆறுமுகத்திடம் 9.9 ஏக்கர் நிலத்தை வழங்கினார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட காசிபாளையம் பகுதியில் புகளூர் வாய்க்காலுக்கு கிழக்கே இந்த நிலம் வழங்கப்பட்டது.
இந்த நிலத்துக்குச் செல்வதற்கு கரூர் பிரதான சாலையில் இருந்து காசிபாளையம் புகளூர் வாய்க்கால் பாலம் வரை 30 அடி அகல மண் சாலை இருந்தது. இந்தச் சாலையை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டிவிட்டனர். இதனால் 30 அடி சாலை 8 அடியாகச் சுருங்கிவிட்டது. அந்தப் பாலத்தில் இருந்து தோட்டத்துக்கு 10 அடி வழித்தடம் உள்ளது.
புகளூர் வாய்க்கால் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால், சரக்கு வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தைக் கடக்க முடியாமல் உள்ளன. குறுகலான பாலம், குறுகலான சாலை காரணமாக தோட்டத்தில் விளையும் பொருள்களை தலைச் சுமையாகவோ அல்லது இரு சக்கர வாகனங்களிலோதான் கொண்டு வர வேண்டும்.
குறுகலான பாலத்தையும், குறுகலான சாலையையும் விரிவாக்கம் செய்யக் கோரி 1997-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் தியாகி குமரனின் வாரிசுகள் மனு அளித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்தப் பாலத்தை விரிவாக்கம் செய்யுமாறு திருச்சி மண்டலப் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளருக்கு சென்னை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் (பாசனம்) அசோகன் 27.9.2013-இல் உத்தரவிட்டார். ரூ.19.20 லட்சத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து தியாகி குமரனின் தம்பி ஆறுமுகத்தின் மகன் அண்ணாதுரை கூறியதாவது:
காமராஜர் அளித்த 9.9 ஏக்கரில் அரை ஏக்கர் நிலம் 6 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கன்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நீர்அரிப்பால் சேதமடைந்து தடம் தெரியாமல் போய்விட்டது. விளைபொருள்களை கொண்டு செல்ல பாதை விரிவாக்கம் செய்யக் கோரி, 18 ஆண்டுகளாகப் போராடியும் இதுவரை முயற்சி கைகூடவில்லை.
தியாகி குமரனின் பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று 14.9.2015-இல் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்மூலம், தியாகி குமரனின் தியாகத்தை அவர் பெருமைப்படுத்தினார். 18 ஆண்டுகளாகப் போராடும் எங்களுக்கு முதல்வர் நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...