தனியாருக்கு மடை மாற்றப்பட்ட தாமிரவருணி!
"பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி' என கம்பரால் புகழப் பெற்ற தாமிரவருணி நதி, தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாரை வார்க்கப்பட்டு வளம் குன்றி வருகிறது.


"பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி' என கம்பரால் புகழப் பெற்ற தாமிரவருணி நதி, தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாரை வார்க்கப்பட்டு வளம் குன்றி வருகிறது. இந்த ஆலைகளுக்காக வழங்கப்பட்டுள்ள, நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதே தாமிரவருணி தரணியின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பூங்குளம் தடாகத்தில் அகத்தியர் கோயில் அருகே உருவெடுத்து பாணதீர்த்த அருவியில் தலைகாட்டி பல்வேறு ஆறுகளை இணைத்து, தோன்றிய மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் சிறப்புப் பெற்ற நதியாக உள்ளது தாமிரவருணி.
வற்றாத ஜீவநதியின் இந்தத் தண்ணீரால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமல்லாது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 60 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இப்போது, இவையனைத்தும் கேள்விக்குறியாகும் நிலைக்கு வந்து நிற்கிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில், ஆராயாமல் அளிக்கப்பட்ட அனுமதிகளே இந்த அவலநிலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
முதலில் "கோக்': திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லாததால், கங்கைகொண்டான் பகுதியில் "சிப்காட்' வளாகத்தைத் தொடங்கி, மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிப்காட் வளாகத்தில்
2005-இல் தொடங்கப்பட்ட கோக் நிறுவனத்தின் ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் எடுக்கும் அனுமதி உத்தரவுதான் தாமிரவருணியை மடை மாற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக அமைந்தது. இந்த அனுமதியின்படி நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது கோக் நிறுவனம்.
அடுத்து பெப்சி: இப்போது, பெப்சி நிறுவனத்துக்கும் தண்ணீர் உறிஞ்ச அனுமதியளிக்கப்பட்டு, தாமிரவருணி முழுமையாக தனியார் ஆலைகளுக்கு மடை மாற்றப்பட்டுவிட்டது. பெப்சி நிறுவனத்துக்காக கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண் பி-65 முதல் பி-76 வரையிலும் சர்வே எண்: 1641பிடி, 1903பிடி,1904பிடி என்ற எண்களில் 36 ஏக்கர் பரப்பளவு நிலமும் வழங்கப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து, மினரல் குடிநீர், குளிர்பானங்கள் தயாரிக்க 20.01.2014-இல் பெப்சி நிறுவனம் அனுமதி கோரியது. இதற்குத் தமிழக அரசு 05.02.2014-இல் அனுமதி அளித்தது. இதற்காக 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 36 ஏக்கரில் கட்டட வேலைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது பெப்சி நிறுவனம்.
சந்தை நிலவரம்: அரசு மதிப்பீட்டில் சிப்காட் வளாகத்தில் உள்ள 36 ஏக்கர் நிலம் ரூ. 5 கோடியே 40 லட்சம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சந்தை மதிப்பில் இதன் விலை ரூ. 15 கோடியாக உள்ளது. இவ்வளவு கோடி மதிப்புள்ள நிலத்தை பெப்சி நிறுவனம் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் 36 ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 36 மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 36 வீதம் 98 ஆண்டுகளுக்கு குத்தகை செலுத்த வேண்டும். 99ஆம் ஆண்டில் இருந்து ஏக்கருக்கு ரூ. 2 என விலை நிர்ணயம் செய்து, ஆண்டுக்கு ரூ. 72 வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் ரூ. 15 கோடி வரையுள்ள நிலத்துக்கு பெப்சி நிறுவனம் சுமார் 100 ஆண்டுகளுக்கு அனுபவத்தில் எடுத்துக் கொண்டு அரசுக்கு வெறும் ரூ. 3,600 மட்டுமே செலுத்துகிறது.
இது மட்டுமல்லாது, தாமிரவருணி ஆற்றில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு நீரேற்றும் பம்புகள் மூலம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பெப்சி குளிர்பான ஆலைக்கு தண்ணீர் வழங்கவும் தனியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீரை பெப்சி ஆலை உறிஞ்சும். இதற்காக ஆயிரம் லிட்டருக்கு ரூ. 37 மட்டுமே அரசுக்கு செலுத்தும். ஆனால், இங்கு உற்பத்தியாகவுள்ள மினரல் குடிநீர் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை ரூ. 20 ஆக உள்ளது.
சீவலப்பேரியில் தடுப்பணை: தனியார் ஆலைகளுக்குத் தண்ணீர் வழங்குவதற்கு உதவிடும் வகையில், சீவலப்பேரியில் ரூ. 11 கோடியில் தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து தேக்கப்படும் தண்ணீரையே பெருமளவு உறிஞ்சும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்துக்காகவும், குடிநீர் ஆதாரத்துக்காகவும் தேக்கப்படுவதாகக் கூறி கட்டப்பட்ட தடுப்பணை, இப்போது மடை மாற்றப்பட்டு குளிர்பான ஆலைகளுக்கே பெருமளவு செல்லும் நிலை உள்ளது.
போராட்டங்கள்: கோக், பெப்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபரில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இருப்பினும், ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:
கோக், பெப்சி ஆலைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பெயரளவுக்கே உள்ளன. கட்சிகளும், அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலேயே இந்தப் போராட்டங்கள் உள்ளன. மாறாக, ஆலை மூடும் வரையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வலுவான தலைமை தேவைப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது என விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாவட்ட மக்கள் என அனைவருக்கும் ஆதங்கம் உள்ளது. இவர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய அரசு முன்வரும் என்றார் அவர்.
வளம் குன்றிய விவசாயம்!
தாமிரவருணியில் இருந்து குளிர்பான ஆலைக்கு மட்டுமல்லாது, சிப்காட் வளாகத் தொழிற்சாலைகள் மற்றும் இதர வகைகளில் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று போகம் விளைந்த விளைநிலங்கள் அனைத்தும் இருபோகங்களைக்கூட சரிவர எட்டவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு போகத்துக்கே மல்லுக்கட்டும் நிலை உள்ளது. பாசனப் பரப்பும் 30 சதவீதம் குறைந்துவிட்டது. கடற்கரையோரக் கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் குடம் குடிநீர் ரூ. 5 வரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளது. மாநகரப் பகுதிகளிலேயே வாரம் இரு முறைதான் குடிநீர் விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கோடை காலங்களில் மாவட்டம் முழுவதும் குடிநீருக்குத் தட்டுப்பாடு என்பது வாடிக்கையாகிவிட்டது. இனியும் தாமிரவருணியை பாதுகாக்கவில்லையெனில் நதி இருந்த தடம் மட்டுமே மிஞ்சும் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...