கூடங்குளத்தில் கூடி வராத முதல் அணு உலை
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளில் முதல் உலை குறித்தே பல்வேறு சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில், கூடுதல் உலைகள் சாத்தியமாகுமா என்ற கேள்வியும் நீடித்து வருகிறது.


கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளில் முதல் உலை குறித்தே பல்வேறு சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில், கூடுதல் உலைகள் சாத்தியமாகுமா என்ற கேள்வியும் நீடித்து வருகிறது.
இந்திய- ரஷிய ஒப்பந்தப்படி, கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான திட்டம் 1988-இல் உருவாக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு 1996-இல் புத்துயிர் அளிக்கப்பட்டது. 1998-இல் கூடங்குளத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 2001-இல் ரூ.13,500 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டு, 2002-இல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. 2011-இல் முதல் உலையில் சோதனை ஓட்டம் தொடங்கியபோதே, அணு உலைக்கு எதிரான இடிந்தகரை பகுதி மக்களின் போராட்டமும் தொடங்கியது.
பல்வேறு போராட்டங்களைக் கடந்து 22.10.2013-இல் முதல் அணு உலையில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 7.6.2014-இல் முதல் அணு உலையானது அதன் முழுத் திறனை எட்டியதுடன் 1,011 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது. 31.12.2014 அன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது.
அதன்பிறகு, 2015 ஜூன் 25ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்புப் பணிகளுக்காக 60 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, 5 மாதங்களுக்கு மேலாகியும் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2016, ஜனவரி 21ஆம் தேதி மீண்டும் கிரிட்டிகாலிட்டி (அணுப் பிளவு) நடைபெற்று உற்பத்தி தொடங்கியது. ஆனால், இதுவரை முழுத் திறன் எட்டப்படவில்லை. தரமற்ற உதிரிப்பாகங்களால் இத்தகைய நிலை இருப்பதாக, அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இருப்பினும், கூடுதல் உலைகள் அமைக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இரண்டாவது உலையில் இந்த மாத இறுதியில் அணுப் பிளவு நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியில் 3,4-ஆவது உலைகளுக்கு ஒப்பந்தம் முடிந்து பூர்வாங்கப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 5,6-ஆவது உலைகளையும் அமைத்து, ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகமாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"முதல் உலையில் முழுத் திறனை எட்டியுள்ளதாக உலை நிர்வாகத் தரப்பிலோ, இந்திய அணு மின் கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ வெளியிடப்படவில்லை. ஜனவரி 21-ஆம் தேதி அணுப் பிளவு நடந்தது மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் உலையின் 2015-16ஆம் ஆண்டுக்கான உற்பத்திப் பட்டியலிலும் ஏப்ரல் 2016 வரை 98 சதவீத திறனை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தி குறித்த அறிவிப்பும் இல்லை. எனவேதான், முதல் உலையிலேயே முழுக் கொள்ளளவு எட்டப்படவில்லை என்கிறோம்; இதில், அடுத்தடுத்த உலைகள் சாத்தியமில்லை' என்றும் கூறுகின்றனர் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர்.
கட்டமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள், தரமற்ற உதிரிப்பாகங்களே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனருமான சுப. உதயகுமாரன் கூறியதாவது:
ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தை கருத்தில் கொண்டு, கூடங்குளத்தில் அமையும் 3, 4-ஆவது உலைகளை
புகுஷிமா விபத்தை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்துடன் கட்டமைப்பதாக ரஷிய அணு உலை நிர்வாகத்தின், இந்தியத் திட்டத்துக்கான அலுவலர் விளாடிமிர் ஏஞ்சலோ கூறியுள்ளார். மேலும், இதே தொழில்நுட்பத்தை கூடங்குளத்தின் முதல், இரண்டாவது உலைகளிலும் புகுத்துவதற்கான பணிகளும் நடைபெறும் என்கிறார். எனவே, முதல் இரு உலைகள் முழுமையான தொழில்நுட்பத்தில் இல்லை என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிடுகிறார்.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், முதல் இரு உலைகள் தரமற்றவை என்றால் திட்டம் முடங்கிவிடும் என்பதால், வெளிப்படையாக தெரிவிக்காமல் உள்ளனர். 3,4-ஆவது அணு உலைகளைக் கட்டமைத்த பிறகு பராமரிப்புப் பணி எனக் கூறி தரமற்ற முதல் இரு உலைகளையும் மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். எனவேதான், கூடங்குளம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதற்குச் செவி மடுக்கவில்லை. 5 ஆண்டுகளாக போராடியும் பலன் இல்லாததால் அரசியல் கட்சி தொடங்கி அனைத்து மட்டத்திலும் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளோம். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
அமெரிக்கத் தொழில்நுட்ப உலையை குஜராத்தில் அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்துக்கு மாற்றம் செய்துள்ளது மத்திய அரசு. கூடங்குளத்தில் உள்ள குளறுபடிகளை மூடி மறைக்கவே முயற்சிகள் நடைபெறுகின்றன. உளவுத் துறை போலீஸார் இடிந்தகரை மக்களை பல்வேறு வழிகளில் சமாதானப்படுத்தி, எதிர்ப்பு நடவடிக்கையை கைவிடச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அணு உலைகள் முழுவதும் மூடப்படும் வரையில் எதிர்ப்பை நாங்கள் வலுவாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார் அவர்.
யாருக்கு எவ்வளவு?
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் இரு உலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் மத்திய தொகுப்பில் சேர்க்கப்படும். பின்னர், அங்கிருந்து தமிழகத்துக்கு 562.50 மெகாவாட், ஆந்திரத்துக்கு 50 மெகாவாட், கர்நாடகத்துக்கு 221 மெகாவாட், கேரளத்துக்கு 133 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட் மின்சாரம் எனப் பிரித்து வழங்கப்படுகிறது. முதல் உலையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் மூலம் கூடங்குளத்துக்கு இதுவரை சுமார் ரூ.1,800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அணு உலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப். 22 முதல் முழுத் திறன் கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியதாவது:
கூடங்குளத்தின் முதல் உலையில் 2016 பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதியே முழுத் திறன் எட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அதே நிலையில் உற்பத்தி நடைபெறுகிறது. டிசம்பர் 2014-இல் தொடங்கி இதுவரை 9 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கு மேல் (900 கோடி யூனிட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுஅணுப் பிளவுக்குத் தயாராகவுள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த மாத இறுதியில் அணுப் பிளவு நடைபெறும். தொடர்ச்சியாக மின் உற்பத்தி நடைபெறும். இரு உலைகளும் தரமாக உள்ளன என்றார் அவர்.
-ஆர். முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...