கெயில் எரிவாயுத் திட்டம்: கொந்தளிக்கும் கொங்கு மண்டல விவசாயிகள்
கெயில் எரிவாயுத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், கொங்கு மண்டல விவசாயிகள்


கெயில் எரிவாயுத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், கொங்கு மண்டல விவசாயிகள் இடையே கொந்தளிப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் விவசாயிகளுக்கு அடுத்து கடின உழைப்பாளிகள் எனப் பெயர் பெற்றவர்கள் கொங்கு மண்டல விவசாயிகள். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களைக் கொண்ட கொங்கு மண்டல விவசாயிகளுக்கு மத்திய அரசின் பொதுத் துறை எரிவாயு நிறுவனமான கெயில் நிறுவனத்தால் இப்போது தலைவலி உருவாகியுள்ளது.
கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு, தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 310 கி.மீ. தொலைவு விளை நிலங்கள் வழியாக திரவ எரிவாயுவைக் கொண்டு செல்ல 2012-ஆம் ஆண்டில் கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
குழாய் பதிக்க ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கொங்கு மண்டல விவசாயிகளின் தீவிர போராட்டத்தால் இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறுத்திவைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கு கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் திரும்பியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த கொங்கு மண்டல விவசாயிகள் சங்கங்கள் தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளதால், அரசியல் கட்சிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆயத்தமாகிவிட்டன.
இதுகுறித்து தற்சார்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கி.வே.பொன்னையன் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் சுமார் 6,000 விவசாயிகளிடம் இருந்து 1,500 ஏக்கர் வரை நிலத்தைக் கையகப்படுத்தியுள்ள கெயில் நிறுவனம், மேலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்டால் குழாய்க்கு இரு பக்கமும் தலா 35 அடி தொலைவுக்கு வேர்விடும் பயிர்களை சாகுபடி செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாவட்டங்களைப் பொருத்தவரை, மரவகைப் பயிர்களை மட்டுமே நம்பி வாழும் நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், கரும்புத் தோட்டங்கள்தான் அதிகமாக உள்ளன. இந்தக் குழாய் பதிக்கப்படும் பகுதிகளில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
ஓர் ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஓர் ஏக்கர் அல்லது 2 ஏக்கரில் நடுப் பகுதியில் குழாய் பதிக்கப்படும்போது கிணறு உள்ள பகுதியில் இருந்து குழாய்க்கு மறு பகுதியில் உள்ள பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாது. அப்படியானால் அங்கு பயிரிட முடியாது.
கெயில் நிறுவனம் வழங்கும் இழப்பீடு குழாய் பதிக்கப்படும் பகுதியில் இருபுறமும் 35 அடி தொலைவுக்கு மட்டும்தான். ஆனால், விவசாயியின் விளைநிலத்தில் முற்றிலும் பயிரிட முடியாத நிலை உருவாகிறது.
பிற மாவட்டங்களைவிட, கொங்கு மண்டலத்தில் நில மதிப்பு அரசு வழிகாட்டி மதிப்பைவிட பல மடங்கு அதிகம். குறைந்தபட்சம் ஓர் ஏக்கர் ரூ.25 லட்சம் முதல் கோடிக்கணக்கில் விலை போகிறது. ஆனால், கெயில் வழங்கும் இழப்பீடு ஒரு சில லட்சம் ரூபாய் மட்டும்தான். இதை எப்படி ஏற்க இயலும்? பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கெயில் நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் மேலும் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் மகிம் தாசிர் எரிவாயுத் திட்டம், குஜராத்தில் சார்கட்ஜ் எரிவாயுத் திட்டம், உத்தரப் பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி- கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல். நிறுவனங்கள் ஆமதாபாத்- வதோதரா நெடுஞ்சாலையிலும்தான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.
இந்தத் திட்டத்தை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது. மத்திய அரசும் இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...