திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நூற்பாலைகளில் மீண்டும் சுமங்கலித் திட்டம்?

தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் நிகழாண்டில் மட்டும் 18 வயதுக்கும் குறைவான 200-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:54 pm

கே.விஜயபாஸ்கா்

தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் நிகழாண்டில் மட்டும் 18 வயதுக்கும் குறைவான 200-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சுமங்கலித் திட்டம் மீண்டும் தலைதூக்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணையில் அம்பலம்: சுமங்கலித் திட்டத்தால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண் குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் போன்றவர்களை உள்ளடக்கி கடந்த 2003- 2005-ஆம் ஆண்டு வரை நடத்திய பொது விசாரணைகள் மூலமாக, இந்தத் திட்டத்தின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள் தொடர்பான பல்வேறு சட்டமீறல் நிகழ்வுகள் வெளிஉலகுக்குத் தெரிய வந்தன.
தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை, தொழில் பழகுநர் என்ற பெயரில் அந்த நிறுவனத்தின் அத்தியாவசியமான, அடிப்படைப் பணிகள் அனைத்தையும் செய்ய வைத்தல், பாலியல் ரீதியான தொந்தரவுகள் போன்றவை தெரிய வந்தன.
இதுபோல, போனஸ் வழங்காதது, பெற்றோரைப் பார்க்க அனுமதிக்காதது, உரிய தங்குமிட வசதியின்மை, சுத்தமில்லாத உணவு, இரவு நேரங்களிலும் வேலை வாங்குதல், வார விடுமுறை வழங்காதது, ஒப்பந்தக் காலமான மூன்றாண்டுகளுக்கு முன்பே நிறுவனத்தைவிட்டு வெளியே அனுப்புவது, ஒப்பந்தப் பணம் கொடுக்காமல் தவிர்த்தல் போன்ற சட்ட மீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் மூலம் தெரிய வந்தது.
அரசு போட்ட கடிவாளம்: இந்த விசாரணை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், மேலும் இதுதொடர்பாகக் கிடைத்த பல்வேறு தகவல்களைக் கொண்டும், கடந்த 2006-ஆம் மதுரை உயர் நீதிமன்றத்தில் சிஐடியு தொழிற்சங்கம் வழக்குத் தொடுத்தது. இந்த பிரச்னை தொடர்பாக உரிய தொழிலாளர் நல அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறி, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக, தமிழக அரசு கடந்த 2006-ஆம் ஆண்டில் எதுவெல்லாம் நூற்பாலை என்பது உள்ளிட்ட பல்வேறு அரசாணைகளை இயற்றியது. இதன் தொடர்ச்சியாக, சுமங்கலித் திட்டம், திருமகள் திருமணத் திட்டம் என்ற பெயர்களில் உண்டு, உறைவிட கூலி முறை நூற்பாலைகளில் நடைமுறையில் உள்ளது என தமிழக அரசுக்கு தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர் அறிக்கை அனுப்பினார்.
60 சதவீதம் பேர் சிறுமிகள்: அதன்படி, 13- 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் அந்த நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் 60 சதவீதம் வரை தொழில் பழகுநர் என்ற பெயரில் 3 ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும்,
ஈரோடு, கோவை, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல். திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இந்தத் திட்டதின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் எனவும், உடனடியாக இந்தத் திட்டத்தை ஒழிக்க முடியாது எனவும், மாறாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், நூற்பாலைகளில் பணிபுரியும் சிறுமிகளை மீட்க ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்தது.
தலையிட்ட மனித உரிமை ஆணையம்: இதனிடையே, கடந்த 2007-இல் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு, சுமங்கலித் திட்டத்தின் மூலமாக மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான புகார் ஒன்றை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பியதன் காரணமாக, அந்த ஆணையம் சுமங்கலித் திட்டம் தொடர்பான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
சட்டத் திருத்தம்: இதைத் தொடந்து, தனியார் நூற்பாலை, பஞ்சாலை நிறுவனங்களில் சுமங்கலித் திட்டத்தின் கீழ், ஒப்பந்தக் காலமான மூன்றாண்டுகளும், பணியாளர்கள் அனைவரும் தொழில் பழகுநர்களாக வைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த 2008-ஆம் ஆண்டில் தொழிலக வேலைவாய்ப்புச் சட்டம், 1946-இல் தொழில் பழகுநராக 6 மாதங்களுக்கும் கூடுதலாக எவரும் வைக்கப்படக் கூடாது என தமிழக அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், நூற்பாலைகளில் தொழில் பழகுநர்களாக பணிபுரியும் இளம் பெண்களுக்கு, தினக் கூலியாக ரூ.110 வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தவிட்டது.
அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நூற்பாலைச் சங்கங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2009-இல் வழக்குத் தொடுத்தன. இந்த உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கதே என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நூற்பாலைகள் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீட்டில், தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைக் கொடுக்கவில்லையெனில், நூற்பாலை நிறுவனங்களுக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், நிறுவனத்தை நடத்துவதை நியாயப்படுத்துவதற்கும் எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கூறியதோடு மட்டுமன்றி, ஏற்கெனவே தனி நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பும் உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தொடர் சோதனைகள் காரணமாக, 2010-ஆம் ஆண்டு முதல் நூற்பாலைகளில் சிறுமிகள் பணியமர்த்தப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது.
மீண்டும் தலை தூக்குகிறதா? இந்த நிலையில், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், நிகழாண்டில் நூற்பாலைகளில் மட்டும் 18 வயதுக்கும் குறைவான 200-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இது சுமங்கலித் திட்டம் மீண்டும் தலைதூக்குகிறதா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இடதுசாரி தொழிற்சங்க நிர்வாகி என். தம்பிராஜா கூறியதாவது:
சுமங்கலித் திட்டமானது தற்போதும் அமலில் உள்ளது. நிகழாண்டில் ஆலைகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆலைகள் ஊதியத்தில் ஒரு பகுதியை மட்டும் மாதந்தோறும் கொடுத்துவிட்டு, மீதியை கால நிர்ணயம் செய்து மொத்தமாக வழங்க பெற்றோரிடம் சம்மதம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி, விதிமுறைகளை மீறும் நூற்பாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.