அக்னியாறு- குண்டாறு இணைப்புக்கு ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு
தென்னக நதிகள் இணைப்பு பணிக்கு மாயனூர் காவிரி ஆற்றை குண்டாறுடன் இணைக்க ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தென்னக நதிகள் இணைப்பு பணிக்கு மாயனூர் காவிரி ஆற்றை குண்டாறுடன் இணைக்க ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கின் போது வீணாகக் வங்கக்கடலில் கலக்கும் உபரி நீரை தடுப்பணை மூலம் தடுத்து வறண்டு கிடக்கும் மாவட்டங்களை வளப்படுத்தவே காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூர் கதவணை கட்டும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சுமார் ரூ. 234 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட, இந்த மாயனூர் கதவணை கட்டும் பணி தற்போது 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் தற்போது 98 ஷட்டர்களில், தண்ணீர் திறப்பு காலங்களில் பயன்படுத்தப்பட உள்ள இரும்புக்கயிறு பொருத்தும் பணிகளும், அணையின் மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வரும் வகையில் பைர்ம்ஸ்டிரிங் கான்கிரீட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அணையில் பாலம் அமைக்கப்படுவதன் மூலம் கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியும், நாமக்கல் மாவட்டம் காட்டுப்புதூரும் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் காட்டுப்புதூரைச் சுற்றியுள்ள பொதுமக்கள் இனி 65 கிலோ மீட்டருக்கு தொட்டியம், முசிறி, குளித்தலை வழியாக திருச்சி செல்வதற்கோ, கரூர் செல்வதற்கோ உண்டான நேரம் மிச்சப்படுத்தப்படும்.
அணையின் பணிகள் முடிவடைந்து நவம்பர் 30-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அணையில் இருந்து இரண்டாம் கட்டப்பணியாக காவிரி-குண்டாறு இணைப்புக்கான பணிகள் தொடங்க உள்ளன.
இதுதொடர்பாக மாயனூர் கதவணை திட்ட பொறியாளர் ஒருவர் கூறுகையில், விரைவில் காவிரி-குண்டாறு இணைப்புப் பணியில் முதற்கட்ட பணியாக மாயனூரில் இருந்து பட்டுக்கோட்டையில் உள்ள அக்னியாறு வரை கால்வாய் வெட்டி ஆறுகளை இணைக்க ரூ. 350 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதற்கான அனுமதி டிசம்பர் மாதத்துக்குள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் 2014 ஜனவரியில் பணிகள் தொடங்கப்படும்.
இரண்டாம் கட்டப்பணியாக அக்னியாற்றில் இருந்து குண்டாறு வரை கால்வாய் வெட்ட ரூ. 5,200 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பியுள்ளோம். இத்திட்டத்தில் முதலில் மாயனூர் முதல் பட்டுக்கோட்டை அக்னியாறு வரையும், பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு வரையும் கால்வாய் வெட்டப்பட்டு மூன்று நதிகளும் இணைக்கப்படும்.
பின்னர் தெற்கு வெள்ளாறு முதல் காரைக்குடி, தேவகோட்டையில் உள்ள மணிமுத்தாறுடன் கால்வாய் வெட்டப்பட்டு, பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள வைகையாறு வரை கால்வாய் வெட்டப்பட்டு, அங்கிருந்து முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடியில் உள்ள குண்டாறு வரை கால்வாய் வெட்டப்பட்டு அனத்து ஆறுகளும் இணைக்கப்படும். இவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம் காவிரியின் உபரி நீர் புதுகை, சிவகங்கை, தேவகோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களையும் வளமடையச் செய்யும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...