டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மருந்துகள், பரிசோதனைகள் இன்றி நோயாளிகள் அவதி!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அரசு போதிய நிதியை அளித்திருந்தும், நிர்வாகக் குளறுபடியால் உயிர் காக்கும் மருந்துகள், பரிசோதனைகள் இன்றி நோயாளிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.  தென் மாவட்டங்க

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:03 pm

ஜெயப்பாண்டி

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அரசு போதிய நிதியை அளித்திருந்தும், நிர்வாகக் குளறுபடியால் உயிர் காக்கும் மருந்துகள், பரிசோதனைகள் இன்றி நோயாளிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தென் மாவட்டங்களுக்குத் தலைமை மருத்துவமனையாகத் திகழும் இந்த அரசு மருத்துவமனையில் சலைன் எனப்படும் குளுக்கோஸ் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. சதை இறுக்க நோய், மூச்சுத் திணறல் பாதிப்புக்குள்ளாகி வருவோருக்கு அளிக்கப்படும் நியோஸ்டிக்மின் (சங்ர்ள்ற்ண்ஞ்ம்ங்ய்) எனப்படும் மாத்திரையும் கடந்த 3 மாதங்களாக இல்லை எனக் கூறப்படுகிறது. இம் மாத்திரை தேவைப்படும் நோயாளிகள் தினமும் சுமார் 100 பேராவது சிகிச்சைக்கு வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 சதை இறுக்கப் பாதிப்பால் பலருக்கு மூச்சுக் குழாய் விரிவடையாது. அதுபோன்ற நிலையில் நியோஸ்டிக்மின் மாத்திரையால் மட்டுமே அதைச் சீர்படுத்த முடியும். ஆனால், இம் மாத்திரை ஒன்று வெளியில் ரூ.200-க்கு விற்கப்படுகிறது. ஆகையால், ஏழை நோயாளிகள் இதை வெளியில் வாங்க முடியாத நிலையும் உள்ளது. இம் மாத்திரையை தினமும் 3 வேளை நோயாளிகள் சாப்பிட வேண்டும் என்பதால், ஒரு நாளைக்கு ரூ.600 கொடுத்து நோயாளிகள் மாத்திரை வாங்கும் கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 அத்துடன் கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை நோய் பாதிப்புகளைத் துல்லியமாக அறிய உதவும் எஸ்ஜிஓடி, எஸ்ஜிபிடி எனப்படும் முக்கியப் பரிசோதனைக்கான வேதிப் பொருள்களும் இல்லை. இதனால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளாகி வருவோருக்கும் முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச் சோதனைக்கு தினமும் 200 நோயாளிகள் வரும் நிலையில் அவர்களுக்குப் பரிசோதனையின்றி, அனுமான அடிப்படையிலே சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

 மயக்க நிலையில் வரும் நோயாளிகளுக்கு சோடியம், பொட்டாசியம் அளவைக் கணக்கிடும் "எலக்ட்ரோலைட்ஸ்' பரிசோதனை மிகவும் முக்கியம். மூச்சுத் திணறல் ஏற்பட்டு, செயற்கை சுவாசத்தில் இருக்கும் நோயாளிக்கும் இத்தகைய பரிசோதனை அவசியம். ஆனால், கடந்த 4 மாதங்களாகவே இப் பரிசோதனைக்கான வேதிப்பொருள்கள் இல்லை. இதனால் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் முறையான சிகிச்சை அளிக்கப்படாமல், நோயாளிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 நோயாளிகள் காத்திருப்பு: மதுரை அரசு மருத்துவமனையின் மற்றொரு பிரிவான பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனையில் சிறிய கட்டிகள் உள்ளிட்டவற்றுக்கான அறுவைச் சிகிச்சைகள் நடந்துவருகின்றன. இங்கு மயக்கவியல் துறை மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் திடீரென அண்ணா பஸ் நிலைய விரிவாக்கக் கட்டட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாலரெங்காபுரம் மருத்துவமனையில் கடந்த 21 நாள்களாக அறுவைச் சிகிச்சையின்றி நோயாளிகள் காத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

 நிர்வாகக் குளறுபடியே காரணம்: அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்ட சிகிச்சைக்கு போதிய நிதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது காப்பீட்டுத் திட்ட நிதி ரூ.5 கோடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகளுக்கு செலவிடப்படும் நிதியில் 60 சதவீதம் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், 25 சதவீதம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், 15 சதவீதம் மருத்துவமனை மேம்பாட்டு குழுவுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. இப்படி போதிய நிதி இருந்தும் அதை முறையாகச் செலவிடவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மருந்துகள் உள்ளிட்டவை வாங்குவதற்கு டீன், மருத்துவக் கண்காணிப்பாளர், மருந்தாளுநர், சிகிச்சைக்கான துறைத் தலைவர்கள் அடங்கிய குழு உள்ளது. மேலும், வெளிப்படையான டெண்டர் மூலமே மருந்துகள் உள்ளிட்டவையும் வாங்கப்பட வேண்டும். ஆனால், சலைன் வாங்குவதற்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களை அழைத்து அவர்களிடம் டெண்டர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ரூ.15 முதல் ரூ.20 வரை மதிப்புடைய சலைன் பாட்டிலை ரூ.68 என கூடுதல் விலைக்கு வாங்க முடிவு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இப் பிரச்னையில், தற்போது மருந்து சேகரிப்பு குடோன் பொறுப்பாளர் விலகியிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடனுக்குடன் உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு டீன் கையெழுத்து அவசியம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அவரை அணுக முடிவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 டீன் கருத்து: இப் பிரச்னை குறித்து அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் என்.மோகனிடம் கேட்டதற்கு, அவர் கூறியது:

 சில டாக்டர்கள் வெளிநாட்டுக்குப் போவதாகக் கூறி விடுமுறை எடுத்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது தெரியவந்துள்ளது. ஆகவே, எந்தக் கோப்பாக இருந்தாலும் தீர ஆராய்ந்த பிறகே கையெழுத்திட வேண்டியுள்ளது. மருந்துப் பிரச்னையில் பெரிய நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்வதில்லை. ஆகவே, சிறிய நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்குகிறோம். தரமான சலைன் பாட்டிலுக்கு கூடுதல் விலை தருகிறோம். ஆனால், முறைகேடு எனத் தெரியவந்தால் சலைன் வாங்குவதை நிறுத்திவிடுவோம்.

 மருத்துவக் கல்லூரியையும் சேர்த்துக் கவனிப்பதால், மருத்துவமனையில் கூடுதல் நேரம் இருக்க முடிவதில்லை. பிரச்னைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.