/

ஆட்சி மாற்றம்: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு கடும் போட்டி

திருநெல்வேலி, மே 17: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.  கடந்த ஆட்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:33 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, மே 17: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 கடந்த ஆட்சிக்காலம் போல இல்லாமல் தகுதி, திறமை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பேராசிரியர்கள், துணைவேந்தர் பதவியைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

 1990-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 6 துணைவேந்தர்கள் பணியாற்றி உள்ளனர். ஆறாவது துணைவேந்தரான இரா.தி. சபாபதி மோகனின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முடிவடைந்தது. இப்போது, அரசு சட்டத்துறை செயலர் தலைமையிலான "கன்வீனர் கமிட்டி' மூலம் பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 துணைவேந்தர் பதவிக்காலம் முடிவடைந்த உடன் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்று பேரைக் கொண்ட "தேர்வுக் குழு'வை அரசு அமைக்கும். அதில் பல்கலைக்கழக ஆட்சிக் குழு தேர்வு செய்த ஓர் உறுப்பினர், ஆட்சிப் பேரவை தேர்வு செய்த ஓர் உறுப்பினர் மற்றும் அரசு பிரதிநிதி ஒருவர் இடம்பெறுவார்.

 இவர்கள் தேர்வு செய்யும் மூன்று பேரில் ஒருவரை துணைவேந்தராக பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தேர்வு செய்து நியமனம் செய்வார்.

 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் இப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய இதுவரையில் தேர்வுக் குழு அமைக்கப்படவில்லை. இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் விரைவில் தேர்வுக் குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதனிடையே, துணைவேந்தர் பதவியை பெறுவதற்கு பேராசிரியர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் துணைவேந்தர்கள் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்.

 கலை-அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் சரி, தொழில்கல்வி கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் சரி அவற்றின் துணைவேந்தர்கள் நியமனங்களில் அரசு மற்றும் அரசியல் சார்ந்த நபர்களின் தலையீடு காரணமாக பதவிகள் விலை பேசப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது.

 இதனால் தகுதி, திறமை படைத்த நேர்மையான கல்வியாளர்கள் எவரும் துணைவேந்தர் பதவிகளைப் பெற முடியாத நிலை இருந்ததாகவும் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

 இப்போது ஆட்சி மாற்றத்தால் அந்த நிலை இருக்காது என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் தகுதியும், திறமையும் படைத்த நேர்மையான பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவியை பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியைப் பெறுவதற்கு இப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ச. மாணிக்கம், தொலைநெறி தொடர்கல்வி இயக்க இயக்குநர் (பொறுப்பு) கா. மணிக்குமார், தகவல் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் என். கிருஷ்ணன், புவி தொழில்நுட்ப மையத்தின் தலைவர் என். சந்திரசேகரன், இப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநருமான பி. செல்லத்துரை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் சண்முகையா, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் தாண்டவன் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 துணைவேந்தர் பதவிக்கான தகுதிகளாக பேராசிரியர் நிலை, ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வெளியீடு போன்றவை வரையறை செய்யப்பட்டுள்ளன.

 ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் துணைவேந்தர் பதவியை எளிதில் பெற்றுவிடக் கூடிய சூழ்நிலை இருந்தது.

 இப் பல்கலைக்கழகத்தின் 5-வது துணைவேந்தரான சிந்தியா பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், எம்.பி.யுமான பி.எச். பாண்டியனின் மனைவி ஆவார்.

 6-வது துணைவேந்தரான இரா.தி. சபாபதி மோகன், திமுக பிரமுகர். இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பும் கேட்டிருந்தாராம்.

 மற்ற துணைவேந்தர்களுக்கும் இலை மறை காயாக அரசியல் சார்பு கூறப்பட்டது உண்டு. ஆதலால், தகுதியும், திறமையும் இருந்தால் கூட அரசியல் பின்னணியும், "இதர பலமும்' இல்லாவிட்டால் துணைவேந்தர் பதவிக்கு ஆசைப்பட முடியாது என்ற நிலையே இருந்தது.

 இப்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக ஆட்சியில் தகுதியும், திறமையும் உள்ள நேர்மையானவர்களுக்கு பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

 முக்கியமாக "பேரங்கள்' இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் துணைவேந்தர் பதவிக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, உள்ளூர் பேராசிரியர்கள் மட்டுமன்றி வெளியூர் பேராசிரியர்களும் களத்தில் குதித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.