மேலும் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரமாக்குவது, மறுசுழற்சிக்கு உள்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளின் பின்புறங்களில் குப்பைகளைக் கொட்ட தனியாக குழிகளை வெட்டி வைத்திருந்தனர். இந்த குழிகளில் கொட்டப்படும் குப்பைகள் சில மாதங்களில் மக்கி இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பகுதியில் வாழை மற்றும் காய்கறி செடிகளுக்கும், மரச்சீனி பயிரிடும் நிலத்திலும் இந்தவகை இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. யூரியா, பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன உரங்களின் வருகைக்குப் பின்னர் இயற்கை உரங்கள் மட்டுமன்றி குப்பைக் குழிகளும் காணாமல் போய்விட்டன.