கலைஞர் வீடு வழங்கும் திட்ட நிதி அதிகரிக்கப்படுமா?
திருவெறும்பூர்: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கட்டுமானப் பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், கலைஞர் வீடு வழங்கும் திட்ட நிதி அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்ப


திருவெறும்பூர்: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கட்டுமானப் பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், கலைஞர் வீடு வழங்கும் திட்ட நிதி அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அந்தத் திட்டத்தின் பயனாளிகள் உள்ளனர்.
தமிழகத்தில் இப்போது மத்திய அரசு நிதி உதவியுடன் அன்னை இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குடிசை வீடுகள் அகற்றப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் தொகுப்பு வீடுகளாக மாற குறைந்தது 20 ஆண்டுகளாகும்.
எனவேதான், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை ஜனவரி மாதம் 6 ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் 21 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி திருச்சியில் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, இந்த நிதியாண்டில் ரூ.1,800 கோடியில் மூன்று லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார் தமிழக முதல்வர்.
இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரத்துக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, இந்த நிதி வீடு கட்டுவதற்குப் போதாது என்று மக்களின் கோரிக்கையை ஏற்று, சுதந்திர தின விழாவில் இந்த நிதியை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியும், தேவைப்பட்டால் வங்கியில் ரூ.20 ஆயிரம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதல்வர் அறிவித்தார்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உதவியாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்பாளராகப் பணியாற்றினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியப் பொறியாளர்கள் ஆகியோர் இந்தப் பணியை ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இந்தத் திட்டத்தின் கீழ் 4,401 குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 1,483 குடிசை வீடுகள் தகுதி பெற்றன. 840 குடிசை வீடுகள் நிபந்தனையுடன் தகுதி பெற்றன. 2,078 குடிசை வீடுகள் நிராகரிக்கப்பட்டன.
இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்டுமானப் பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இந்த விலை உயர்வால் இத் திட்டத்தின் பயனாளிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன் ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை ரூ.170 ஆக இருந்தது. இத் திட்டம் தொடங்கிய பிறகு ரூ.370 ஆக உயர்ந்துள்ளது.
2,500 செங்கல்லின் விலை ரூ.6 ஆயிரமாக இருந்தது. தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு அரளைக் கல்லின் விலை ரூ.10. தற்போது ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லோடு மணலின் விலை ரூ.2500. இதேபோல, கம்பி, ஜல்லி விலையும் உயர்ந்துள்ளது. தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால், இந்தப் பொருள்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து இந்தத் திட்டத்தின் பயனாளி ஒருவர் கூறியது:
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு தேர்தெடுக்கப்பட்ட போது முதலில் பயனாளிகளின் தொகை மூலம் வீடு கட்டும் பணி தொடங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், நாங்கள் வீடு கட்டும் பணியைத் தொடங்கி அஸ்திவாரம் போட்டுள்ளோம். இதற்கே அதிகத் தொகை செலவாகிவிட்டது. தற்போது சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கம்பி, மணல், அரளைக் கல், ஜல்லி என அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள் கூலியையும் உயர்த்தியுள்ளனர். இந்தத் திட்டத்தில் அரசு நிதியாக ரூ.75 ஆயிரம் தருகிறது. இந்த விலை உயர்வால் வீடு கட்ட குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை செலவாகும். எனவே, தமிழக அரசு இதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் கே. தங்கவேல் கூறியது:
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரத்தில் வீடு கட்ட முடியாது. இன்றைய விலையில் 100 சதுர அடியில் வீடு கட்டுவதென்றால் ரூ.1 லட்சம் செலவாகிறது.
இந்தத் திட்டம் செயல்படுத்தத் தொடங்கிய உடன் கட்டுமானப் பொருள்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.175 ஆக இருந்தது. தற்போது ரூ.370 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு சேம்பர் செங்கல்லின் விலை ரூ.5 ஆக உயர்ந்துள்ளது. நாட்டுக் கல் ரூ.3.70 ஆக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
எனவே, தமிழக அரசு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...