மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை!
மதுரை : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முக்கியமான பாடத்துறைகளில் பேராசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால், முறையான கற்பித்தல் இல்லாமல் அதிகளவு மாணவர்கள் தேர்வில் தோல்வியைச் சந்திப்பதாக


மதுரை : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முக்கியமான பாடத்துறைகளில் பேராசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால், முறையான கற்பித்தல் இல்லாமல் அதிகளவு மாணவர்கள் தேர்வில் தோல்வியைச் சந்திப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் எம்.பி.பி.எஸ். முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வில் மாநிலத்தில் 1900 மாணவர்களில் 600 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டில் தற்போதுதான் மருத்துவக் கல்லூரி முதலாண்டுத் தேர்வில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்திருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்டில் முதலாண்டுத் தேர்வு நடைபெற்றது. இதில் 1900 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். அவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 4-ல் 1 பங்கு மாணவ, மாணவியர் தோல்வியடைந்துள்ளனர்.
தோல்வியடைந்த மாணவர்களில் பெரும்பாலானோர் உடற்கூறு இயல் (மெய்யியல்) உயிரிவேதியியல், உடல் இயங்கியல் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்பாடங்களுக்கு பெரும்பாலான அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களே இல்லாத நிலை காரணமாகவே தேர்வில் மாணவர்கள் தோல்வியடைந்திருப்பதாகவும், செய்முறை தேர்வுக்கும், பாட எழுத்துத் தேர்வுக்கும் உரிய மதிப்பெண்ணை அவ்வப்போதே ஆன்லைனில் பதிவுசெய்யும் முறை ஆகியவை காரணமாகவே தோல்வி விகிதம் அதிகரித்திருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்களுக்கு, குறிப்பிட்ட துறைக்கு 1 பேராசிரியர், 2 துணைப் பேராசிரியர்கள், 3 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 4 போதகர்கள் (டியூட்டர்கள்) இருக்கவேண்டும்.
ஆனால், மதுரையில் மெய்யியல் துறையில் 4 பேர் மட்டுமே உள்ளனர். உயிரிவேதியியல் துறையில் 4 டியூட்டர்கள் மட்டுமே உள்ளனர். தேனி போன்ற மருத்துவக் கல்லூரிகளில் இத்துறைகளில் பேராசிரியர்களே இல்லாத நிலையே உள்ளது. இதுபோன்ற புதிய கல்லூரிகளுக்கு மத்திய மருத்துவ ஆய்வுக்குழு வரும்போது மதுரை போன்ற அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களை ஒரே ஒருநாள் மட்டும் மாற்றல் பணியாக அனுப்பிவிட்டு மறுநாளே அவர்களை மறுபடியும் பழைய இடத்துக்கே திரும்ப அழைத்துக் கொள்ளும் வழக்கமே இருந்துவருகிறது.
இத்தகைய காரணங்களால் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்களே இல்லாத நிலையே நீடிக்கிறது. பேராசிரியர்கள் இல்லாத பாடங்களை வெறும் பாடப்புத்தகங்களை வைத்தே மாணவர்கள் படித்து தேர்வெழுதும் நிலையும் உள்ளது.
பேராசிரியர்கள் இல்லாத பாடங்களுக்கு உரிய செய்முறைத் தேர்வுக்கு இதுவரை கருணை அடிப்படையில் மதிப்பெண் அளித்து வந்துள்ளனர். ஆனால், இப்போது மாணவர் திறன் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கூறப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு முறையான கற்பித்தல் இல்லாததால் அவர்களால் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு எழுதமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சட்டம் சார்ந்த மருத்துவப் படிப்பான தடய அறிவியல் சார்ந்த படிப்புக்கு பல அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்களே இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. இப்பாடப்பிரிவுக்கு திருச்சி, தஞ்சை, தருமபுரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களே இல்லை. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் தலா 1 பேராசிரியர்களே உள்ளனர். நெல்லை,தேனி, மதுரை, சேலம், சென்னை ஸ்டான்லி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 பேராசிரியர்களும், கீழ்ப்பாக்கம், சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 3 பேராசிரியர்களுமே உள்ளனர்.
சட்டம் சார்ந்த மருத்துவப் படிப்பே பிரேத பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் துறையாகும். பிரேத பரிசோதனை முடிவுகளே பல கொலை, தற்கொலை வழக்குகளைத் தீர்மானிப்பதாகவும் அமையும்.
இப்படியாக சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தீர்மானிக்கின்ற முக்கிய மருத்துவப் படிப்புக்கே பேராசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இத்தகைய நிலையில் படித்து மருத்துவராக வருவோர் எதிர்காலத்தில் எப்படி முழுமையாக மருத்துவம் பார்க்கமுடியும் என்றும் மூத்த மருத்துவப் பேராசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மதுரையில் குழந்தைகள் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தி பல ஆண்டுகளாகியும் இன்னும் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், தரம் உயர்த்தப்பட்டும் அதற்குரிய பாடங்களை கற்பிக்க இயலாத நிலையிலேயே அந்த மையம் செயல்படுகிறது.
தமிழகத்தில் மருத்துவத்துறையில் பல புதுமைகளையும், காலிப்பணியிடங்களையும் நிரப்புவதாகக் கூறிவரும் அரசு, மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட முன்வரவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...