எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நீரஜ் சோப்ராவுக்கு என்ன ஆச்சு?

உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையான ஓய்வு கிடைக்காததால் நேற்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

எழில்

தில்லியிலிருந்து சொந்த ஊருக்கு நேற்று திரும்பிய ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் பாராட்டு விழாவிலிருந்து பாதியில் விலக நேர்ந்தது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

கடந்த வாரம் கடுமையான காய்ச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டார் நீரஜ் சோப்ரா. இதன் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிய வந்தது. இதன்பிறகு தில்லியில் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பிறகு ஹரியாணாவில் உள்ள சொந்த ஊரான பானிபட்டுக்கு நேற்று வந்தார். கண்ணாடி கூரை கொண்ட எஸ்.யூ.வி. காரில் அழைத்து வரப்பட்டார். வழக்கமாக இரண்டு மணி நேரத்தில் வரவேண்டிய பயணம் நேற்று ஆறு மணி நேரமாக நீண்டது. ஹரியாணாவுக்குள் அவருடைய கார் நுழைந்தவுடன் சின்னச் சின்ன பாராட்டு விழாக்களில் அவர் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் சொந்த ஊர் வந்து சேர ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் நீரஜ் சோப்ரா மிகவும் சோர்ந்து போனார். 

Story image

பானிபட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கந்த்ரா கிராமத்தில் நீரஜ் சோப்ராவை ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றார்கள். அங்கு நடைபெற்ற பாராட்டு விழாவின்போது நீரஜ் சோப்ராவுக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் 20,00 பேர் கலந்துகொண்டார்கள். பலரும் நீரஜ் சோப்ராவுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்கள். உடல் ஒத்துழைக்காததால் நிகழ்ச்சியின் பாதியிலேயே மேடையை விட்டு கீழிறங்கினார். மீண்டும் காய்ச்சல் அடித்ததால் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். பிறகு தனது வீட்டுக்குச் சென்றால் ரசிகர்களின் அன்புத்தொல்லையிலிருந்து மீள முடியாது என்பதால் வேறொரு இடத்தில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். 

டோக்கியோவிலிருந்து திரும்பிய பிறகு காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோதும் சுதந்திர தின விழா உள்பட தில்லியில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா. உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையான ஓய்வு கிடைக்காததால் நேற்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். தில்லியில் மருந்துகளை உட்கொண்டுதான் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதனால் ஹரியானாவில் கடந்த வாரம்  நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. ரூ. 6 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் நீரஜ் சோப்ராவின் உறவினர் கலந்துகொண்டார். விடியோ அழைப்பின் மூலமாகப் பேசினார் நீரஜ் சோப்ரா. இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள், பார்வையாளர்கள் வருகை, ஊடகங்களின் பேட்டிகள் என இந்தியாவில் கால் வைத்த நிமிடத்திலிருந்து ஓய்வில்லாமல் இருப்பதால் மீண்டும் ஒருமுறை உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டார். சொந்த  ஊருக்குத் திரும்பியவுடன் நன்கு தூங்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார். ஓய்வும் நிம்மதியான சூழலும் இனிமேலாவது அவருக்குக் கிடைக்கவேண்டும் என ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள். 

Story image

நேற்று காய்ச்சலால் விழாவிலிருந்து பாதியிலிருந்து விலகினாலும் இன்றும் நீரஜ்ஜின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான சந்திப்பு இருந்தது. ஹரியானா முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை இன்று சண்டிகரில் சந்தித்தார். ஹரியாணாவில் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவது குறித்த உரையாடலில் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் சோப்ரா கூறியதாவது: நான் நலமாக உள்ளேன். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனமாக இருப்பேன். என்னுடைய பயிற்சியை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளேன் என்றார். 

நீரஜ் சோப்ரா இந்தியாவில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்

Story image
 தேதி நிகழ்ச்சிகள்
 ஆகஸ்ட் 9 இந்தியாவுக்குத் திரும்பினார். தில்லி விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி.
 ஆகஸ்ட் 9 விமான நிலையத்திலிருந்து நேராக அசோகா ஹோட்டலுக்குச் சென்றார். விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 ஆகஸ்ட் 10 தாஜ் பேலஸ் ஹோட்டலில் இந்தியத் தடகள சம்மேளனம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். 
 ஆகஸ்ட் 11 கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சண்டிகரில் பஞ்சாப் அரசாங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. 
 ஆகஸ்ட் 12 பரிசோதனையில் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. ஹரியாணா அரசாங்கம் நடத்திய பாராட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை.
 ஆகஸ்ட் 14 இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கிய தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். 
 ஆகஸ்ட் 15 தில்லியில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில் கலந்துகொண்டார். அதிகாலை 4 மணிக்கு ஒலிம்பிக் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி பிறகு விழாவில் கலந்துகொண்டார்கள். 
 ஆகஸ்ட் 15 இந்திய ஒலிம்பிக் சங்கம் நடத்திய விழாவில் கலந்துகொண்டார்
 ஆகஸ்ட் 16 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய அணியினரை திங்கள்கிழமை தனது இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்தார் பிரதமா் நரேந்திர மோடி. நீரஜ் சோப்ரா உள்பட பதக்கம் வென்ற அனைத்து போட்டியாளா்களிடமும் உரையாடி அவா்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். 
 ஆகஸ்ட் 17 ஆறு மணி நேரப் பயணமாக தில்லியிலிருந்து பானிபட்டுக்கு எஸ்.யூ.வி. காரில் அழைத்து வரப்பட்டார். சொந்த ஊரில் பாராட்டு விழா நடைபெற்றது. வெயிலால் சோர்வடைந்த நீரஜ் சோப்ராவுக்குக் காய்ச்சல் அடித்ததால் விழாவிலிருந்து பாதியில் விலகி, அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். 
 ஆகஸ்ட் 18 ஹரியாணா முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருடன் சந்திப்பு 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.