/

நான் சரியாக ஆடாமல் தோனிக்கு அழுத்தம் தருகிறேன் - ரெய்னா ஒப்புதல்

ரெய்னா சரியாக ஆடாததால் சென்னை அணியின் பேட்டிங் பலவீனமாக காட்சி தருகிறது. பெரிய ஸ்கோர் எடுக்கமுடியாமல் திணறுகிறது.

News image
Updated On :22 ஜூலை 2025, 10:26 am

சநகன்

பெங்களூர் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். ஆனால், இந்த ஐபிஎல்-லில் 10 போட்டிகளில் அவர் 256 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2 அரை சதங்கள் மட்டுமே. (இதுவரை ஆடிய அனைத்து ஐபிஎல்-களிலும் ரெய்னா குறைந்தபட்சம் 400 ரன்கள் எடுத்துள்ளார்.) ஸ்டிரைக் ரேட்டும் மிக அதிகமில்லை. 124.27 தான். ஒட்டுமொத்த ஐபிஎல்-லிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் 140.59. அதனால் வழக்கத்துக்கு மாறாக அவர் மெதுவாக ஆடிவருகிறார் என்பது உறுதியாகிறது. இதுதான் சென்னை அணிக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது.

ரெய்னா சரியாக ஆடாததால் சென்னை அணியின் பேட்டிங் பலவீனமாக காட்சி தருகிறது. பெரிய ஸ்கோர் எடுக்கமுடியாமல் திணறுகிறது. இதை ரெய்னாவும் ஏற்றுக்கொள்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

"இந்த ஐபிஎல்-லில் சென்னை அணியால் கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்கமுடியாததற்கு நான் தான் காரணம். நான் அதிக ரன்கள் எடுக்காததால் அது தோனி, பிராவோ, ஜடேஜா, நெகி ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கிறது. முதல் 3-4 வீரர்கள் 15 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்துவிட்டால் பிறகு இவர்களால் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்களை எடுக்கமுடியும். சென்னையில் இவர்களை அதிக ரன்கள் எடுக்கச் சொல்வது சரியல்ல. சென்னை விக்கெட் அதற்கு அனுமதிக்காது” என்றவர் இந்த ஐபிஎல்-லில் தான் மிகவும் சரியாக ஆடுவதாகக் கூறுகிறார்.

"உண்மையில் ஒன்று சொல்கிறேன். இதர ஐபிஎல் சீஸன்களில் நான் நிறைய ரன்களை எடுத்துள்ளேன். ஆனால் இந்தமுறைதான் அனுபவித்து ஆடுகிறேன். இதற்கு முன்பு இதுபோல உணர்ந்ததில்லை. ஒருவேளை நான் 20-30 ரன்கள் மட்டுமே எடுக்கலாம். ஆனால், மனநிலை மிகவும் சரியாக இருக்கிறது. அவுட் ஆகும்போதுகூட சரியான கிரிக்கெட் ஷாட் ஆடித்தான் அவுட் ஆகிறேன். என் பேட்டிங் பற்றி நல்லவிதமாக உணர்கிறேன். நெ.3 வீரராக சென்னை அணியில் நன்கு செட்டில் ஆகியுள்ளேன். தொடக்க வீரர்களின் விக்கெட்டுகள் விழுந்தபிறகு ஆடவருவதால் எப்போது தடுப்பாட்டம் ஆடவேண்டும், எப்போது அதிரடியாக ஆடவேண்டும் என்பதை விவேகத்துடன் செய்யவேண்டும். மிடில் ஓவர்கள் ரன்கள் அடிப்பது பற்றி திட்டமிடவேண்டும். குறைவான ரன்கள் எடுத்திருந்தாலும் இந்த சீஸனில் என் புரிதல் நன்றாக இருக்கிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.