டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பை: மீண்டும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்க காத்திருக்கிறதா அமெரிக்கா?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான போட்டி குறித்து...

News image
அமெரிக்க அணி வீரர்கள்- படம் | யுஎஸ்ஏ கிரிக்கெட் (எக்ஸ்)
Updated On :9 பிப்ரவரி 2026, 3:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் (பிப்ரவரி 7) தொடங்கியது. முதல் நாளில் பாகிஸ்தான் - நெதர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்து மற்றும் இந்தியா - அமெரிக்கா இடையேயான போட்டிகள் நடைபெற்றன.

அதில், பாகிஸ்தான் - நெதர்லாந்து இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட தோல்வியின் பிடியிலிருந்து மீண்டது என்றே கூறலாம். நெதர்லாந்துக்கு எதிராக 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டன. வெற்றி வாய்ப்பு பாகிஸ்தான், நெதர்லாந்து என இரண்டு அணிகளுக்கும் சமமாகவே இருந்தது. இருப்பினும், கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஃபஹீம் அஷரஃப் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் 9 பந்துகளில் அதிரடியாக 25 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

பாகிஸ்தானுக்கு மீண்டும் அதிர்ச்சியளிக்குமா அமெரிக்கா?

நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் முதல் நாளில் இந்தியா - அமெரிக்கா இடையேயான போட்டியில் அமெரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள், அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் பேட்டர்களை திணறச் செய்தனர்.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது என்பதோடு அமெரிக்காவுக்கு எதிரான தோல்வியைத் தவிர்த்தது என்றே கூறலாம். அந்த அளவுக்கு அமெரிக்க அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ஆனால், அந்த அணியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பேட்டிங் இல்லாததால் தோல்வியைத் தழுவியது.

கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்கா முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமானது. அறிமுகத் தொடரிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி கிரிக்கெட் உலகுக்கு தங்களது வரவை அழுத்தமாக அறிவித்தது அமெரிக்கா.

கடந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய அதே உத்வேகத்துடன் அமெரிக்க அணி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள், பேட்டிங்கில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சூழலில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான போட்டி நாளை (பிப்ரவரி 10) கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியை திணறடித்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிராக எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர பேட்டர்கள் இருந்தாலும், அவர்களது பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பாபர் அசாமின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். சைம் ஆயுபின் பங்களிப்பும் பாகிஸ்தான் அணிக்கு தேவைப்படுகிறது.

அமெரிக்க அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் அவர்கள் அதிகம் கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வீரர்கள் தவறான ஷாட்டுகளை விளையாடியதாக அமெரிக்க அணியின் கேப்டன் மோனங் படேலே கூறியிருந்தார். அது மாதிரியான ஷாட்டுகளை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அமெரிக்க அணி இலங்கையில் பயிற்சி மேற்கொண்டுள்ளதால், அங்குள்ள ஆடுகளங்களின் தன்மை அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கும். இந்தியாவுக்கு எதிராக அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியது போன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டால் கடந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது போன்று, நாளை நடக்கும் போட்டியிலும் அதிர்ச்சியளிக்க வாய்ப்பிருக்கிறது.

பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் தனது தவறுகளை திருத்திக் கொள்ளுமா? அல்லது அமெரிக்காவின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.