/

டி20 உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

News image
- படம் | AP
Updated On :7 பிப்ரவரி 2026, 9:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்று (பிப்ரவரி 7) கோலாகலமாகத் தொடங்கியது. கொழும்புவில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நெதர்லாந்து முதலில் விளையாடியது.

சல்மான் மிர்ஸா அபார பந்துவீச்சு!

முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பாஸ் டி லீட் 30 ரன்களும், மைக்கேல் லெவிட் 24 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது நவாஸ், அப்ரார் அகமது மற்றும் சைம் ஆயுப் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷாகின் அஃப்ரிடி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி!

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் சைம் ஆயுப் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், சைம் ஆயுப் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின், களமிறங்கிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் சல்மான் அகா 12 ரன்களிலும், பாபர் அசாம் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், உஸ்மான் கான் 0 ரன், ஷதாப் கான் 8 ரன்கள், முகமது நவாஸ் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டு அணிகளுக்குமே வாய்ப்புகள் சமமாக இருந்தன.

ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 19-வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் சேர்க்க, கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷாகின் அஃப்ரிடி ஒரு ரன் எடுக்க, அதிரடியாக விளையாடிய ஃபஹீம் அஷ்ரஃப் , மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்றுத் தந்தார்.

நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மீகிரன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லோகன் வான் பீக், கைல் கிலெய்ன், வாண்டர் மெர்வ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ஃபஹீம் அஷ்ரஃபுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.