ஆசிய தடகளப் போட்டியில் 57 விநாடிகளுக்குள் பந்தய தூரத்தைக் கடந்து சிறந்த நேரத்தை (பெஸ்ட் டைமிங்) பதிவு செய்வதே இலக்கு என்கிறார் தமிழக வீராங்கனை இளவரசி.
புணேவில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீராங்கனைகளில் இளவரசியும் ஒருவர். மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ள இளவரசி, தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கன் பேட்டையைச் சேர்ந்தவர். மயிலாடுதுறையில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் மகளிர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர்.
இந்தப் போட்டியில் 4-வது தடையைத் தாண்டும்போது தடுமாறி கீழே விழுந்த இளவரசி, காலில் காயம் ஏற்பட்டபோதும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து, முன்னணி வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
ஆசிய தடகளப் போட்டி குறித்து இளவரசியிடம் கேட்டபோது அவர் கூறியது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறேன்.
இந்தப் பிரிவில் 58.72 விநாடிகளில் இலக்கை எட்டியதுதான் எனது சிறந்த நேரமாகும் (பெர்சனல் பெஸ்ட் டைமிங்). சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 57 விநாடிகளுக்குள் பந்தய தூரத்தைக் கடக்க, இலக்கு நிர்ணயித்திருந்தேன்.
சென்னை நேரு மைதானம் புதுப்பிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் போட்டி என்பதால், அங்கு ஓடுவது மிகக் கடினமாக இருந்தது. 4-வது தடையைத் தாண்டும்போது கீழே விழுந்ததால், 1 நிமிடம் 76 மைக்ரோ விநாடிகளில்தான் இலக்கை எட்ட முடிந்தது. அதில் தங்கம் வென்றாலும், எனது சிறந்த நேரத்தை பதிவு செய்ய முடியாமல் போனது ஏமாற்றமளித்தது.
புணே போட்டிக்காக பெங்களூரில் பயிற்சி பெற்று வருகிறேன். 56 முதல் 57 விநாடிகளுக்குள் பந்தய தூரத்தை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறேன். அந்த இலக்கை எட்டும்பட்சத்தில் நிச்சயம் தங்கம் வெல்ல முடியும். அதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற முடியும்.
ஆசிய தடகளப் போட்டி நடைபெறவுள்ள புணே மைதானத்தில் ஆசிய தடகள கிராண்ட்ப்ரீ மற்றும் காமன்வெல்த் யூத் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் உள்ளது. அதனால் புணே மைதானத்தின் சூழல்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு கடைசி நாளில்தான் போட்டி உள்ளது. வரும் 30-ம் தேதி முதல் புணே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவிருக்கிறேன்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் மட்டுமின்றி, 400 மீ. தொடர் ஓட்டத்திலும் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். புணே போட்டிக்குப் பிறகு 400 மீ. தொடர் ஓட்டத்திலும் தீவிர கவனம் செலுத்தவுள்ளேன்.
இதற்கு முன்பு வரை எனக்கு சரியான பயிற்சியாளர் அமையவில்லை. இப்போதுதான் நல்ல பயிற்சியாளர் கிடைத்துள்ளார். தற்போது விஜயவாடாவைச் சேர்ந்த சீனிவாசனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். சீனிவாசன், 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்றவர். இதேபோல் எனது கணவர் மணிகண்ட ராஜும், ஒரு தடகள வீரர் என்பது எனக்கு கூடுதல் பலமாகும். அவர், ஆசிய தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார்' என்றார்.
வென்ற பதக்கங்கள்: 2011-ல் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டி, கடந்த மார்ச்சில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டி, சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி ஆகியவற்றில் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.
மகளிர் 400 மீ. தொடர் ஓட்டம், 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் போன்றவற்றிலும் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் இளவரசி பதக்கங்களை குவித்துள்ளார். 2010-ல் நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ போட்டிகளில் 400 மீ. தொடர் ஓட்டங்களில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
கணவர் நம்பிக்கை: இளவரசியின் கணவர் மணிகண்டன் கூறுகையில், "சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் எங்களது திருமண நாளில் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் இளவரசி தங்கம் வென்று எனக்கு திருமணப் பரிசளித்தார். அதேபோன்று ஆசிய தடகளப் போட்டியிலும் அவர் தங்கம் வெல்வார் என நம்புகிறேன்' என்றார்.
சென்னையைச் சேர்ந்தவரான மணிகண்டன், தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வருகிறார். அவர், தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து வருகிறார். ஆந்திர மாநிலத்தின் சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், ஆசிய தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் மணிகண்டன் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


