காமன்வெல்த் தந்த அடையாளம்!
பிகா குமாரி, ஓம்கார் சிங், கவிதா ரௌத், ஆசிஷ்குமார்... காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும்வரை வெளியுலகுக்கு இவர்கள் அதிக அறிமுகம் இல்லை. போட்டியில் பதக்கங்களைக் குவித்த பின்னர் ஊடகங்களின் வெ


பிகா குமாரி, ஓம்கார் சிங், கவிதா ரௌத், ஆசிஷ்குமார்... காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும்வரை வெளியுலகுக்கு இவர்கள் அதிக அறிமுகம் இல்லை. போட்டியில் பதக்கங்களைக் குவித்த பின்னர் ஊடகங்களின் வெளிச்சம் பட்டு இன்று இந்தியாவே கொண்டாடுகிறது.
ராஞ்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவசரண் மகதோவின் மகள் தீபிகா குமாரி. வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஏழ்மையான குடும்பச் சூழலிலும் தன் மகளின் பயிற்சிக்காக பணம் செலவிட்டு ஊக்குவித்துள்ள மகதோவும் பாராட்டுக்குரியவர்.
மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோலியேறி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் சிங். துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மகராஷ்டிர மாநிலத்தில் திரிம்மாக்பூர் என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கவிதா ரௌத், 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அலகாபாதைச் சேர்ந்த ஆசிஷ்குமார் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்றுள்ளார். கிராமத்துச் சூழல், ஏழ்மை போன்ற பெருந்தடைகளைக் கடந்து பதக்கம் வென்றுள்ளனர் இவர்கள். சர்வதேச போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்பது, வெளிநாட்டு வீரர்களைப் பார்த்து மிரட்சி, பதற்றம் போன்றவற்றைச் சமாளித்து பதக்கங்களையும் இவர்கள் வென்றது அரிதிலும் அரிய சாதனை.
""காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்வதன் மூலம் தங்கள் ஊர் உலகுக்குத் தெரியவரும்'' என்ற உத்வேகமும் தங்களின் வெற்றிக்குக் காரணம் என இவர்கள் கூறி இருப்பதிலிருந்து பிறந்த மண்ணை எந்த அளவுக்கு நேசிக்கின்றனர் என்பதும் புரியும். பெரும் நகரங்களில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற பல வசதிகள் இருக்கும். ஆனால், பின்தங்கிய கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்து சாதிப்பது சாதாரண செயல் அல்ல.
போட்டி ஏற்பாடுகளில் குளறுபடி, ஊழல் என அரசியல்வாதிகள், அதிகாரிகளால் சர்வதேச அளவில் பெரும் ஏளனத்துடன்தான் தொடங்கியது காமன்வெல்த் போட்டி. ஆனால், இந்திய வீரர்கள் உத்வேகம், விடாமுயற்சியால் பதக்கங்களை வென்று நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலம் உள்பட மொத்தமே 50 பதக்கங்கள்தான் வென்றது. இப்போது 2 மடங்கு அதிகமாக 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்களுடன் 101 பதக்கங்களைக் குவித்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக 2002, மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 69 பதக்கங்களைக் கைப்பற்றியதுதான் இந்தியாவின் சாதனை. இந்த முறை பல போட்டிகளில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கடும் சவாலாக இருந்தனர். அதிலும் வட்டு எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையுமே இந்திய வீராங்கனைகள் கைப்பற்றியது பெருமிதம் கொள்ள வைக்கும்.
விளையாட்டுக்கும் இந்தியாவுக்கும் வெகுதூரம் என்ற பேச்சுக்கு இந்த காமன்வெல்த் போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஏழ்மையை ஒரு தடைக்கல்லாகக் கருதாமல் வெற்றிப்படிக் கல்லாக மாற்றிய தீபிகா குமாரி, ஓம்கார் சிங், கவிதா ரௌத், ஆசிஷ்குமார் ஆகியோர் இளைஞர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளனர். காமன்வெல்த் அடையாளப்படுத்திய சொத்து இவர்கள்.
இந்தியாவுக்கு பலமே மனிதவளம்தான். அந்த வளத்தை இனியாவது நன்றாகப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். விளையாட்டிலும் சிபாரிசு, மேலிடத்து செல்வாக்கு போன்றவற்றை ஒதுக்கிவிட்டு திறமையான வீரர்களை அடையாளம் கண்டறிய வேண்டும். சிறந்த வீரர்களை அரசே தத்தெடுத்து பயிற்சி அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வெளிநாடுகளுக்கும் அனுப்பி பயிற்சி பெறச் செய்ய வேண்டும்.
விளையாட்டுக்கு சின்னஞ்சிறிய நாடுகள்கூட பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது அது வெறும் விளையாட்டாக முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு நாடும் தாம் பெறும் வெற்றியை கௌரவமாகக் கருதுகின்றன.
பெரிய நாடான இந்தியாவும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகப்படுத்தி, ஊழல், முறைகேடுகளைக் களைந்து அது முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் அரசு செயல்பட்டால் ஒலிம்பிக் சாதனைகளும் இந்தியாவுக்கு தொட்டுவிடும் தூரம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...