/

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா குறித்து...

News image
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா.
Updated On :11 ஜனவரி 2026, 5:38 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா இன்று(ஜன. 11) நடைபெற்று வருகிறது. சாரல் மழையிலும் ஆயிரணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழாவில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் நடைபெறும் அஷ்டமி சப்பர விழா பிரசிதிபெற்றதாகும்.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று சுவாமிக்கும் அம்மனும் அதிகாலை பல்வேறு சிறப்புப் பூஜை அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

இதனையடுத்து கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனி தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.

சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசி வீதியில் புறப்பாடாகிய சப்பரமானது யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தடையும்.

இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும்.

 மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை இழுத்துசெல்லும் பெண் பக்தர்கள்.

மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை இழுத்துசெல்லும் பெண் பக்தர்கள்.

நான்கு வெளி வீதிகளிலும் சப்பரத்தில் வலம் வந்த சுவாமி அம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியை தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பணி நீங்கும் என்பது நம்பிக்கை.

மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும் இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

காலை முதல் சாரல் மழை பெய்துவரும் நிலையலும், மழையில் நனைந்தபடி பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு தேரினை வடம்பிடித்து இழுத்துசெல்கின்றனர்.

summary

The Madurai Meenakshi Sundareswarar Ashtami Chariot Festival is being held today (Jan. 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.